Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

மக்களும் அமைப்புகளும்
கா. அப்பாத்துரையார்



 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : மக்களும் அமைப்புகளும் (அப்பாத்துரையம் - 41)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 22+290 = 312

  விலை : 390/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : [email protected]

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

"ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்

அளித்திட்ட அறிவை யெல்லாம்

தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே

செலவிடக் கடமைப் பட்டேன்."

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது, திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

மக்களும் அமைப்புகளும்

முதற் பதிப்பு 1957-58

இந்நூல் 2002 இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

முன்னுரை

மனிதர் எவரும் தங்குதடையற்ற தன்னுரிமையுடைய வரல்லர் என்று தான் பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். ஆடவராயினும் சரி, பெண்டிராயுனும் சரி, யாவரும் தம்மைச்சூழ இருக்கும் மன்னுலக அமைப்புக்கு ஆட்பட்டவர்களே என்பது அவர்கள் எண்ணம். இது மிகவும் தவறு. மன்னுலக அமைப்புக்கள் எல்லாம் மனிதன் படைப்புகளே. அவற்றை ஆக்கியவனும் இயக்குபவனும் ஆள்பவனே அவனே.

இவ்வமைப்புக்கள் சமய அமைப்புக்களாயிருக்கலாம். அரசியல்,சமுதாய அமைப்புகளாகவோ; வாணிக, தொழில்துறை அமைப்புக்களாகவோ இருக்கலாம். குடும்ப அமைப்பாயிருக்க லாம். பண்டை மரபுப் பண்பாயிருக்கலாம். அது எதுவாயினும். அதை ஆக்கிய மனிதனால் அதை அழிக்க முடியும், மாற்றவும் திருத்தவும், புதுப்பிக்கவும் முடியும். அதை மாற்றியமைத்து இயக்கவும் அவனால் கட்டாயம் முடியும்.

மனித வாழ்வையும் வாழ்வின் அமைப்பையும் சூழலையும் உண்டு பண்ணுபவன் மனிதன்; மனிதனை அவை உண்டு பண்ணுபவை அல்ல. இந்த உண்மையை அறியாதவனுக்கு, வாழ்வு புதிர்மயமானது. இடர் நிறைந்தது. மாறுபாடும் சுழற்சியும் உடையது. அதனிடையே அவனுக்கு, அமைதியும் பாதுகாப்பும் கிட்டுவது அரிதாகின்றது. என்றும் மாறுபடும் இவ் உலை விடையே மாறுபடா நிலவர அமைதியுடைய அடித்தளத்தை அல்லது ஓர் உறுதிப்பொருளைக் கண்டு கிட்டினாலல்லாமல், அவனுக்கு இன்பமும் அமைதியிம் உண்டாகாது.

அறிவியல், மெய்விளக்கம், சமயம் ஆகிய மூன்றும் அம்மூன்றின் பல துறைகளும், இவ்வடித்தளத்தை அஃதாவது உறுதிப்பொருளைத் தேடி அடைவதற்கான பலதிறப்பட்ட முயற்சிகளே. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், உலைவுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை ஒரே அமைதியில் பொருத்தி இணைத்துக் காண்பதே அவற்றின் முடிந்த முடிவான நோக்கம். இதற்காக அவை மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகியல் திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆன்மிகத்திறம் சார்ந்ததாயிருக்கலாம். ஆனால் இயற்கையின் உள்ளுறை அமைதி கண்டு, அக அமைதியுடன் அதைப் பொருத்தி நிறைவு காண்பதே இரண்டு திறங்களுக்கும் உரிய பண்பு ஆகும்.

கணக்கியலும் அறநூலும்

கணக்கியல் ஒன்றுதான் சரி நுட்பமான அறிவியல் துறை என்று கூறப்படுவதுண்டு. ஏனென்றால், இத்துறையின் மெய்மைகள் ஒருவித விலக்குக்கூட இல்லாமல் எல்லா, இடத்துக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமானவை. ஆயினும் கணக்கியலின் இதே சிறப்பை மற்றொரு துறையிலும் முனைப்பாகக் காணலாம். கணக்கியல் எல்லா அறிவியல் துறைக்கும் அடிப்படையான சரிநுட்ப அமைதிகளை விளக்குகிறது. அதுபோலவே வாழ்க்கை யின் சரிநுட்ப அமைதிகளை விளக்க முற்படுவது அறநூல்.

கணக்கியல் புற உலகின் சரிநுட்ப நிலையை விளக்குவது. அறநூல் அகநிலை அமைதி, அகப்புறத் தொடர்பு ஆகியவற்றின் சரிநுட்ப நிலைகளை விளக்குவது.

கணக்கியல் சரிநுட்ப நிலையின் உடலானால், அறநூல் அதன் உயிராய் அமையவல்லது.

பொதுவாக எல்லா இயல்களுமே கணக்கியலை அடிப்படையாகக் கொண்டவை என்ற அறிவியலுண்மை வரவரத் தெளிவாக உணரப்பட்டு வருகிறது. கணக்கியலுடன் சிறிதும் தொடர்பற்றது என்று பெரும்பாலும் கருதப்படுவது இசை. ஆனால் அதுகூட மிக நுட்பம் வாய்ந்த கணக்கியல் திறம் உடையது என்பதை நாம் இப்போது அறிந்து வருகிறோம். அடிப்படை இசைக்கூறுகள் தத்தம் அளவமைதியில் என்றும், எங்கும் மாறுபடுவதில்லை. அக் கூறுகளின் வகைதொகைக் கூட்டிணைப்புக்கள் எண்ணற்றவை. ஆயினும் தனிக்கூறுகளும் தத்தம் அளவைத்தன்மைகளில் மாறுபடுவனவல்ல. குறிப்பிட்ட கூட்டிணைப்புக்களும் தத்தம் தன்மையளவைகளில் மாறுபடுவ தில்லை.

அறிவியலின் இக்கணக்கியல் பண்பு அல்லது அடிப்படை பண்பே அறிவியல் கட்டடத்தின் தலைக்கல் ஆகும். எந்த அறிவியல் துறையும் தன்தன் முழுநிறைநிலை நோக்கி முன்னேறுந்தோறும், இக் கணக்கியற் பண்பும் அதில் மேம்பட்டு நிரம்புதல் காணலாம்.

அறிவியல் மட்டுமன்றி எல்லாத்துறைகளிலுமே இத்தகைய அடிப்படைக் கணக்கியல் பண்பமைதி உண்டு. வாழ்கையில் மிக பரந்தும், வாழ்க்கையின் இலக்கணமாகிய அறநூலின் பொன்வேய்ந்த முகடாகிய சமயத்தில் செறிவாகவும் இதே அமைதியைக் காணலாம். அறநூலார் இவ்வமைதியை மேற்புற நோக்காகர் கொண்டு கடவுள் என்பர். சமயத்துறைவாணரோ மனிதர் பெற்று நுகரவேண்டும் ஒரு முடிவு நிலையாக அதனைக் கொள்வர். அந்நிலை அடைந்தவர்களை அவர்கள் “பேரமைதிநிலை” (வீடு, நிர்வாணம், முக்தி) அடைந்தவர் என்று பெருமைப்படுத்துகின்றனர்.

அலையெழுந்தாடிக் கலக்கமுறும் காலம் என்னும் கடற்பரப்பின் அடிப்படைத்தளத்தில், அல்லது அவ்வடித் தளத்தில் ஊன்றி நிற்கும் பாறைமீது முன்னிலைப்பெற்று நிற்பவர் அவர்கள். திருத்தொண்டர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், முனிவர்கள் என்று குறிக்கப்படத்தக்கவர்கள் இவர்களே.

ஒரே அறிவுத் தொகுப்பு

செயல்கள், அவற்றின் விளைவிகள் ஆகியவை பற்றிய அனுபவங்களின் தொகுதியாகவே வாழ்க்கை இயங்குகின்றது. இவ்வனுபவங்களின் இயற்கை முடிவே அறிவுப்பேறு. வாழ்க்கையில் நாம் அடையும் வளர்ச்சி முற்றிலும் இவ்வறிவின் வளர்ச்சியன்றி வேறல்ல. உலகம் இவ்வறிவை அடைவதற்கான ஒரு பெரும் பள்ளி அல்லது கல்லூரி அல்லது பல்கலைகழகமே யாகும். இக்கல்வி நிலையங்களின் மாணவர் பலதரப்பட்டவர்கள். அவர்கள் அறிவின் வளர்ச்சி முறைகளும் பல. வளர்ச்சி வேகமும் பலதரப்பட்டது. ஆனாலும் அவர்கள் அறியவேண்டுமென்று முன்பே தொகுத்து வகுக்கப்பட்ட அறிவு ஒன்றே. இது போலவே, வாழ்க்கையிலும் அறிவு வளர்ச்சி பலதரப்பட்டதாகத் தோன்றினாலும், இயக்கையில் அது ஒரு தொகுதியுட்பட்டதே.

கல்வித்திட்டத்தில் பாடம் வகுப்பு ஆகிய முறைகள் உண்டு. அதுபோல வாழ்க்கைமுறை வகுப்பிலும் பல படிமுறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப்படிகள் ஒரே முடிந்த அறிவுக்கு வழிவகுப்பவையாக மட்டுமே இருக்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை ஒருவன் விரைவில் பெறலாம். மற்றொருவன் கால நீட்டித்தோ, பிற்பட்டோ, அல்லது சுற்றுவழியாகவோ பெறக்கூடும். ஒருவன் ஒரு சில அனுபவங்களை ஊன்றிக் கவனித்து அவற்றின் படிப்பினை களாலேயே அவ்வறிவைப் பெறலாம். மற்றொருவன் மிகப்பல அனுபவங்கள் கடந்தே அதைப் பெறக்கூடும். இவ்வேறுபாடுகள் அவரவர் அகத்திறனை அல்லது முன்னை அனுபவங்களின் நல் விளைவைப் பொறுத்தவை. எனினும் அனுபவங்களின் இவ்வேறுபாட்டாலோ அறிபவர் வேறுபட்டாலோ அறிவு வேறுபடுவதில்லை.

இயற்கை இவ்வடிப்படை அறிவில் வகுத்துள்ள படிமுறைகளின் வழியாகவே எல்லா மனிதரும் சென்று வளர்ச்சியடையவேண்டும். அவையே நாகரிகப்படிகள், பண்பின் திறங்கள் அறிவின் அளவைகள் ஆகும்.

கல்விநிலையத்தின் அறிவுத்திட்டத்தை மாணவர் பின்பற்றமுடியுமே தவிர, அதன் முழு அளவைக் காணமுடியாது. முழு அளவைப்பெற்றவர் தாம் அதை அறியவும் தீட்டவும் இயக்கவும் முடியும். ஆயினும் அத்தகைய முழுநிறை திட்டத்தையே “கல்வி” “அறிவு” என்ற பொதுச் சொற்களால் அவர்கள் சுட்டுகின்றனர். இதுபோலவே வாழ்க்கையின் முழுநிறை அறிவு அமைதியை வாழ்க்கையின் மாணவராகிய மனிதர் முழுவதாகப் பார்க்க முடியாது. எனினும் பொதுமுறையில் தொகைச்சுட்டாக அதனையே அவர்கள் “தெய்வநீதி” அல்லது “பொதுநேர்மை” என்று குறிப்பிடுகின்றனர். அதை நோக்கியே நல்மனிதர் அதாவது முற்போக்குடையவர்கள் நேர்வழியாக முனைகின்றனர். மற்றையோர் சுற்று வழியாகச் சென்று அலமருகின்றனர், அல்லது பின்னோக்கி நழுவி அவதியுறுகின்றனர்.

தெய்வநீதி : காரணகாரியத் தொடர்பு

தனி நீதிக்கும் தெய்வ நீதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? தனி நீதி தனி மனிதன் விருப்புவெறுப்புக்களையும், அவன் தற்காலிக இன்பதுன்ப உணர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தெய்வ நீதியோ அவற்றுக்கு அப்பாற்பட்டது. அது எல்லா மனிதருக்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடத்துக்கும் பொருத்தமானது. ஏனெனில் அது காரணகாரியத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. அதன் இன்றியமையா இணைப்பால், எல்லாப் பொருள்களும் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே முழுநிறை அமைதியின் பல்வேறுபட்ட உறுப்புக்களாகின்றன.

காரணகாரியத் தொடர்பு மூவகை அமைதிகளை உடையது.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. அதே சமயம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அஃதாவது எல்லாச் செயல்களும் காரணங்களே. எனவே செயல்கள் ஒன்றுகொன்று காரண காரியமாகச் சங்கிலியின் கண்ணிகள் போலத் தொடர்கின்றன.

குறிப்பிட்ட ஒரு காரணம் அதற்குரிய காரியமாகிய செயலை உண்டுபண்ணியே தீரும். அதே சமயம் ஒரு காரணம் அதற்குரிய குறிப்பிட்ட விளைவான காரியத்தையன்றி வேறு எதையும் உண்டுபண்ணாது. அஃதாவது ஒரே காரணம் எப்போதும் ஒரே காரியத்துக்கு உரியது.

குறிப்பிட்ட ஒரு காரியம் அதற்குரிய காரணத்தையே தொடரும். வேறு காரணத்தால் தொடராது. ஒரே காரியம் எப்போதும் ஒரே காரணத்துக்கு உரியது. அதனைப்பற்றி வேறு காரியம் தொடராது.

காரணகாரியத் தொடர்பின் மேற்குறிப்பிட்ட மூன்று கூறுகளுமே வாழ்கையிலும் இயற்கையிலும் கணக்கியலின் சரிநுட்பநிலை, இன்றியமையாக் கட்டாய உறுதிப்பாடு ஆகியவற்றை உண்டுபண்ணுகின்றன. காரணகாரியத் தொடர்பு எல்லாப் பொருளைகளையும் பண்புகளையும் செயல்களையும் ஒரே பேரமைதியில் இடம் பெறும்படி இணைக்கிறது. இது பற்றியே எல்லா அறிவுத்துறைகளுக்கும் கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கும் அடிப்படை அறிவமைதியே என்று நாம் கூறுகிறோம். இதனையே நாம் தெய்வநீதி என்றும் வழங்குகிறோம். ஏனெனில் இது என்றும் மாறுபடாதது. என்றும் கூடாதது; குறையாதது, ஒழியாதது, அழியாதது! முன்னாகவோ பின்னாகவோ, மனித இனம் அதைச்சென்று அடைந்தே யாகவேண்டும்!

தெய்வ நீதியை ஆன்மிகத்துறைக் கணக்கியல் நெறி என்று கூறலாம். கணக்குத் தெரியாதவனும் கணக்கில் தவறுபவனும் அதன் தண்டனையிலிருந்து விலகிவிட முடியாது. அதுபோலடத தெய்வநீதியை ஒருவன் அறியாவிட்டாலும், தவறாகப் புரிந்துகொண்டு செயலற்றினாலும், அதன் இன்றியமையா விளைவுகளுக்கு ஆளாகியே தீரவேண்டும். காரியமாகிய அவ்விளைவுகளை விலக்குவதற்கு அல்லது உண்டுபண்ணுவதற்கு ஒரே வழி காரணத்தை அறிந்து அதை விலக்குவதோ, மேற்கொள்ளுவதோதான். எனவே தெய்வநீதியின் படிகளாகிய கார்யகாரணத் தொடர்பறிந்தால் ஒருவன் விலக்கவேண்டிய விளைவுகளை விலக்கவும், மேற்கொள்ள வேண்டியவற்றை வருவிக்கவும் கூடும். அவன் தன் ஊழைத் தானே ஆக்குகிறான்.

உலக வாழ்விலுள்ள உயர்வு தாழ்வுகள் சரிநுட்பமாக இன்றியமை யாமையாது செயலாற்றும் தெய்வநீதியின் விளைவுகளேயாகும். அதன்வழி இயங்கும் ஆன்மிக அமைதிகள் கட்டாயமாகச் செயலாற்றுபவை யாதலால், அவற்றை எவரும் விலக்க இயலாது. ஆனால் காரணகாரிய அறிவுடையவன் அந் நீதியை உணர்ந்து, இதன் போக்கை வேண்டும்போது வேண்டிய வகையில் மேற்கொண்டும் விலக்கியும் ஆட்கொள்கிறான்.

தெய்வநீதி தற்செயலானதுமல்ல; நிலையற்ற போக்குடையதுமல்ல: கட்டாயமான நேர்விளைவுடையது. இந்தத் தத்துவத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையே உண்மை அறிவின் முதற்படியாகும். அவ்வுறுதி இல்லையென்றால் காரியகாரணத் தொடர் விளங்காது. தெய்வநீதி ஒன்றே என்ற நம்பிக்கை அறிவின் இரண்டாம் படியாகும். அது இல்லையென்றால் வாய்மையல்லாதவற்றை விலக்கி ஒரே வாய்மையைப் பொறுமையுடன் நாடவொ, நாடிப்பெற்றவன் அதில் ஊன்றி நின்று அடுத்தபடிக்கு முன்னேறவோ இயலாது. அறிவின் மூன்றாவது படி தெய்வ அருள்பற்றிய உறுதி. இது இல்லாவிட்டால், தீமையின் முடிவும் நன்மையாகும் என்ற நல்லெண்ணமும், நன்முயற்சியும் விடாப்பிடியும் உண்டாக மாட்டா. தீமையீயனால் ஏற்படும் மனக்கசப்பே தீமையை விட்டகலும் முயற்சியைப் பெரிதும் தடைப்படுத்தும்.

அமைப்புகள்

திட்டமான மெய்யறிவு ஒன்று உண்டு. அதையன்றி அறிவு இல்லை. எந்தப்படி கடந்தும், எத்தனை தொல்லைப்பட்டும், எவ்வளவு காலந்தாழ்த்தும் சுற்றியும் அதை நாம் அடைவது உறுதி. அதை அடைந்தும் உழலும் வாழ்க்கைக் கடலில் உலையா அடித்தளப்பாறையை நாம் எட்டியவர்கள் ஆவோம். அப்போது வாழ்வின் மலைப்புகள் அகலும். அதன் நிலைப்புகழ் வந்தெய்தும். அந் நிலையடைந்தோர் அடையாதோறுக்கு அமைத்த நூலேணிகளே அமைப்புக்கள். அவற்றைச் சென்று எட்டிப்பயன்படுத்தும் வாய்ப்புடையவர் அவ்வமைப்புக் களை மாற்றாமலே முன்னேற்றுவர். தம் போக்குக்கு அவை தடையாவன என்று கருதுவோர் அதற்காக அமைப்பைக் குறைக்கூறிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. அமைப்பை ஆக்கியவர்களைப் பின்பற்றி அதனைப் பயன்படுத்தவோ, மாற்றியமைக்கவோ, ஒழித்து வேறு ஆக்கவோ அவர்களுக்கு உரிமை உண்டு.

அமைப்புகள் தோன்றும் வகையையும் அவற்றை மாற்றியமைக்கும் வகைகளையும் இச்சிறு நூலில் ஆராய்வோம்.

அமைப்பாளரும் அமைப்புக்களும்

மனிதர் தனித்துநின்றும் செயலாற்றுலாம். அமைப்புக்கள் வாயிலாகவும் செயலாற்றலாம். அமைப்புக்கள் வாயிலாக நடைபெறும் செயல்களை அமைப்பின் செயல்கள் என்றே குறிப்பதுண்டு. அமைப்பவர் அல்லாமல் அமைப்புக்கே தனித்த நிலையும் செயலும் இருப்பதாகவும், அமைப்பே மனிதனை இயக்குவதாகவும் கூறப்படுவதுண்டு. அடிக்கடி மனித வகுப்பை இத்தகைய அமைப்புகுகள் ஆட்டிப்படைப்பதாகவும், அடக்கு முறை செய்வதாகவும் குறை கூறப்படுவதை இந்நாளில் நாம் கேட்கிறோம்.

புதுக்கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர் “வணிக அமைப்புமுறை,” “சமூக அமைப்புமுறை,” “போட்டி அமைப்பு முறை,” “அரசியல் அமைப்பு முறை” எனப் பல முறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். வறுமை, ஒழுக்கக்கேடு, பஞ்சம் ஆகியவற்றுக்கு இம்முறைகளே காரணம் என்றும் அவற்றின் மீது குறை கூறுகின்றனர்.

இவ்வமைப்புக்களைச் செயலுக்கு ஆட்பட்ட நிலைகள் என்று கொள்ளாமல், செயலாட்சியும் பொறுப்பும் உடையவை யாக இத்தகையோர் கருதுகின்றனர். அதுமட்டுமோ? மனித இனத்தின் உள்ளார்ந்த விருப்பங்களுக்கு மாறாக அவர்களைக் கட்டுப்படுத்தி அடக்கிக் கொடுமைப்படுத்துபவை என்றும், மனித எல்லை கடந்த மாபெரிய கொடுங்கோன்மையின் உருவங்கள் என்றும் இவ்வமைப்புக்களை அவர்கள் கற்பனை செய்கின்றனர்.

அமைப்பும் பொறுப்பும்

அமைப்புக்கள் தன்னியல்பான தனிநிலையோ, தனிஅறிவோ உடையனவல்ல. எனவே அவற்றைப் பொறுப்புடையவை என்று கருதுவது தவறு. அவை மனித விருப்பங்கள் கடந்தவையுமல்ல, மனிதரை அடக்குமுறை செய்யத்தக்கவையும் ஆகமாட்டா. ஏனெனில் அவற்றின் இயல்பும் ஆற்றலும் அமைப்பவரும் அமைப்பின் உறுப்பினரும் ஆன மனிதரின் உள்ளார்ந்த விருப்பங்களையும் முயற்சியையும் ஒத்துழைப்பையும் பொறுத்தவையேயன்றி வேறல்ல. அவை மனிதர் உள்ளார்ந்த விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றின் புறவடிவங்களேயாகும்.

மேலும் அவை சமூகமுறையில் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்தவை. கிட்டத்தட்ட ஒரே விருப்பமும் ஒரே மாதிரித் தேவைகளும் உடைய மக்களே ஒரு சமூகமாகச் செயலாற்றுகின்றனர். ஆனால் சில சமயம் ஒத்துழைப்பு அக ஒத்துழைப்பாய் இயல்பாகவே நடைபெறுகிறது. அமைப்பை தன்செயலுடையது போலத் தோன்றுவதன் காரணம் இதுவே. அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் இதை அறிந்தால், குறைகூறவே தேவை ஏற்படாது. அவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டால் அவர்கள் செயல் மாறுபாடு படிப்படியாக அமைப்பிலும் மாறுதல் கொண்டு வராமலிராது.

அமைப்புக்களை மனிதர் விரும்புவதாக் கூறலாம்; வெறுப்பதாகக் கூறலாம். இவற்றால் அமைப்பில் மாறுதல் ஏற்படாது. ஏனென்றால் இவ்விருப்பங்கள் புற விருப்பங்களே. அமைப்பு எப்படியும் சமூகத்தின் செயல்துறை ஒத்துழைப்பைப் பொறுத்தது. ஆகவே அது தனிமனிதர் செயலையும், செயலுக்குக் காரணமான அகக் கருத்தையும், அகப் பண்புகளைமே சாரும். அமைப்பைக் குறை கூறுகிறவர்கள் உண்மையாகவே தங்கள் அகக் கருத்தையும் அகப் பண்புகளையும் அவற்றுக்கேற்ப மாற்றியமைத்தால், அவர்கள் செயல் மாறும். பிறர் கருத்துக்களும் செயலும் அவ்வாறே நாளடைவில் மாறுபடும். புதிய அமைப்பு தானாகவே அமைந்துவிடும்.

வரலாற்றின் போக்கில் எவரது முனைத்த முயற்சியும் இல்லாமலே அமைப்புக்கள் இவ்வாறு தாமாக மாறி வந்திருப்பதைக் காணலாம். இதனால் முனைப்பான முயற்சி வேண்டியதில்லை என்றோ, பயன்படுவதில்லை யென்றோ கொள்வதற்கில்லை. முனைப்பான முயற்சி மாறுபாட்டை விரைவு படுத்தக்கூடும். ஆனால் அதன் பயன் பெரிதும் மாறுதல் விரும்புவர் அகப்பண்பின் மாறுபாட்டையே பொறுத்திருக்கும்.

போலிக்கண்டனம்

நாவால் ஓரமைப்பை ஒருவன் உரக்கக் கண்டிக்கலாம். ஆயினும் அவன் உள்ளார அதன்மீது விருப்பமுடையவனா யிருக்கக்கூடும். ஏனெனில் அவன் கண்டித்துக் கொண்டே செயலில் அதைப் பின்பற்றுபவனாயிருப்பான். இச்சமயத்தில் அமைப்பு அவன் கண்டிப்பினால் பாதிக்கப்படாது. சமயத் துறையில் பழிகளை உரக்கக் கண்டித்துக் கொண்டே அப் பழிகளுக்கு இடந்தரும் புற நீர்மையாகிய போலிப் பண்புடையவர்களைக் காண்கிறோம். இதே போன்ற புற நீர்மை சமயமல்லாத பிற துறைகளிலும் நிலவுவதுண்டு.

எடுத்துக்காட்டாக, ஒப்பியல்வாதிகள்1 பலர், பிறர் உழைப்பின் மீது சிறப்பாக ஏழைகள் உழைப்பின் மீது வாழும் சுரண்டல் முறையை வன்மையாகக் கண்டிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். அதே சமயம் அவர்கள் பொருளகங்களிலும்2 பிற தொழிலகங்களிலும்3 பங்காளராயிருந்து4 பங்கூதியம்5 பெறத் தயங்கவில்லை. பங்கூதியம் என்பது, தான் உழையாது உழைப்பவர் வருவாயில் பங்கு பெறுதல் ஆகும் இது சுரண்டல் முறையில் ஒரு கூறு கைக்கொள்வதேயாகும். இங்ஙனம் பங்கூதியம் பெறுவதன் மூலம் இத்தகையோர் ஒருபுறம் சுரண்டல் முறையைக் கண்டித்துக் கொண்டே மறுபுறம் அதனுடன் ஒத்துழைத்து அம் முறையை வளர்க்கின்றனர். இது பற்றி அவர்களிடம் உசாவினால், அப்போதுதான் அவர்கள் தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க அமைப்பைக் குறை கூறுகின்றனர்.

“எங்களைச் சொல்லி என்ன செய்ய! எல்லாம் அமைப்பின் செயல். அமைப்பை மாற்றும் வரை நீங்கள் என்ன எசய்யமுடியும்? நான் என்ன செய்யமுடியும்? நாம் யாவருமே செயலற்றவர்கள். அமைப்பின பாரிய சக்கரங்களிடையே அரைபடும் சிறு தூசிகள் நாம்,” என்று அவர்கள் போலி விளக்கம் தருகின்றனர்.

நாம் மேலே காட்டியபடி அமைப்பைக் குறைகூறும் முறை ஒரு மாயமுறை ஆகும். அமைப்பை மாற்றியமைக்கும் பொறுப்பும் ஆற்றலும் அதை அமைத்தவர்களான அமைப்பின் உறுப்பினர் களுக்கு உண்டு. ஆகவே உறுப்பினர் செயலற்றவர்கள், அதன் செயலுக்கு ஆட்பட்டவர்கள் என்று கூறுவதும் பொருந்தாது. அப்படியானால் அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் அகக் கருத்து என்ன என்று பார்ப்போமானால், அவர்களை அறியாது அவர்கள் செயலும் எண்ணமும் முரண்படுவதன் காரணம் எளிதாக விளங்கும்.

அமைப்பைக் குறை கூறும்போதும் அதன்மீது பொறுப் பேற்றும் போதும், அவர்கள் உண்மையில் குறை கூறுவது அமைப்பின் உறுப்பினர் அனைவரையும் அன்று. தம்மை நீக்கி ஏனைய உறுப்பினர் அனைவரையுமே அவர்கள் குறை கூறுகின்றனர். அவர்கள் தாம் மாறுபட விரும்பவில்லை. பிறர் மாறுபட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

பிறரிடம் தீமையென்று கண்டிப்பதைத் தம்மிடம் நல்லது என்று அவர்கள் மனமார ஏற்கின்றனர். இதனால் ஏற்படும் அகக் கருத்து விளக்கத்தை அவர்கள் கண்டால், அது மிகக் கோரமானது என்று அவர்களே ஒத்துக்கொள்வர். அவர்கள் சுரண்டலின் எதிரிகளல்லர். ‘தம் சுரண்டலின்’ எதிரிகளும் அல்லர். ’ பிறர் சுரண்டலின்’ எதிரிகள் மட்டுமே! அஃதாவது சுரண்டலில் பிறருடன் பங்கு கொள்வதுடன் அமையாமள், தாம் மட்டும் தனியுரிமையுடன் சுரண்டுடவiதை அவர்கள் உள்ளம் நாடுகிறது. இதனால் உண்மையில் அவர்கள் சுரண்டலைக் கண்டிக்காத பலரைவிடச் சுரண்டும் பண்புமிக்கவர்கள் ஆகின்றனர்!

சுரண்டுதலுக்கு உரிய அமைப்பைக் கண்டிக்க முற்படும் அவர்களே தான் அந்த அமைப்பைத் தம் அகப் பண்பால் இன்னும் உரமூட்டி வளர்ப்பவர்கள். சுரண்டலமைப்புக்குக் காரணமாயிருந்தவர்கள் அவர்கள் எதிரிகளல்லர், அவர்கள் முன்னோடிகளேயாவர்.

சுரண்டுதலமைப்பின் மீது போர் தொடுத்துக் கண்டனக் கணைகளை ஏவிக்கொண்ளே இத்தகையோர் அவ்வமைப்பின் தூண்களாயிருக்க முடிகிறது!

இயற்கை, செயற்கை அமைப்புக்கள்

அமைப்புக்கள் செயற்கை அமைப்புக்களாகவும் இருக்கலாம்; இயற்iகை யமைப்புக்களாகவும் அமையலாம்.

செயற்கை அமைப்புக்கள் மனிதர் வரிந்து கட்டிக்கொண்டு புற முயற்சி மூலம் வெளிப்பட அமைத்தவை. புறமுயற்சியா லமைந்த இவ்வமைப்புக்களின் வலிமை புற முயற்சியாலோ அல்லது அக நீர்மையில்லாமையாலோ தகர்ந்துவிடத்தக்கவை. ஆனால் இயற்கையமைப்புக்கள் என்பவை தம்மையறியாமலே அகக் கருத்திலும் பண்பிலும் செயலார்வத்திலும் ஒன்று பட்டவர் கூடி ஒத்துழைப்பால் ஏற்படுபவை ஆகும். அகப்பண்பில் ஊன்றி அமைவதால் அவை மிகவும் வலுவுடையவை. அகப்பண்பே செயலார்வமாய்ச் செயற்படுவதனால், அவை செயல்துறையிலும் கட்டாயமான வெற்றி உடையவை.

இயற்கையமைப்புக்களின் வெற்றி தோல்விகள் மனித சமூகத்தின் வெற்றி தோல்விகள். மனித சமூகத்தையே மாற்றியமைக்கத் தக்க மாறுபாடுகளே அவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆயினும் தனிமனிதன் தன் அகப்பண்பு மூலம் சூழலை மாற்றியமைக்கலாம். அகக்கருத்து மாறுபாடு நாளடைவில் படிப்படியாகச் சூழலை மாற்றியமைக்க வல்லது ஆகும். அகக் கருத்து மாறுபடாத எந்தப் புறப்பண்பும், புற மாறுபாடும் இவ்வக அமைப்பைச் சிறிதும் தாக்காது.

அமைப்புக்குக் காரணமான பொது அகப் பண்பை மாற்ற விரும்புவோர் முதலில் தம் தனி அகப் பண்பை மாற்ற வேண்டும். அமைப்பைக் குறை கூறித் தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பவர் பிறர் கருத்தையே முதலில் மாற்ற எண்ணுகின்றனர். இதில்கூட அவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் அமைப்பைக் கூறுவதன் மூலம் எல்லார் பொறுப்பும் தட்டிக் கழிக்கப்பட நேரலாம். மேலும் ஒருவன் பிறரை மாற்ற விரும்புவது போலவே, ஒவ்வொருவரும் விரும்புவர். இதனால் எவரும் மாறுபட மாட்டார். சுரண்டலைக் கண்டிப்பவர் மனப்பான்மையாக வளர்கிறது.

அவர்கள் தாம் கண்டிக்கும் சுரண்டலைத் தாமே வளர்க்க உதவுபவர்களாகிறார்கள். அதுமட்டுமல்ல. அத்தகையயோரின் இயல்பான கூட்டுறவினாலேயே சுரண்டலமைப்பு நிலைநிற்கிறது. ஆகவே அவர்களைச் சுரண்டலுக்கு உதவுபவர்கள் என்று கூறுவது கூடப் போதாது. அவர்களே தான் சுரண்டலமைப்பு என்று கூறவேண்டும். குற்றஞ்சாட்டும் அவர்களே தான், உண்மையான குற்றவாளிகள்.

வாய்பேசாக் கூட்டுறவு

அமைப்பு முறைகள் என்பது என்ன? ஒன்றுபட்டுச் செயலாற்றுவதற்கு இணங்கியவர்களின் வாய்பேசாத கூட்டுறவு ஒப்பந்தங்களே அவை. அமைப்புமுறைகளின் தோற்றத்திற்கு மட்டுமன்றி அவற்றின் தெடர்ந்த வாழ்வுக்கும் இந்தக் கூட்டுறவு ஒருபுறமும் உயிர்நிலைக் காரணங்களாகும். எந்தத் தனிமனிதனும் இந்த இணக்கத்தைப் பின்வாங்கிக் கொள்ள முடியும். அதனால் கூட்டுறவு முறிந்துவிடா விட்டாலும், வலுக்குறைவது உறுதி. அதுமட்டுமன்று; ஒரு தனிமனிதன் செயலே மற்றத் தனிமனிதர் செயலையும் தூண்டாமலிராது. ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனும் இத்தகைய கூட்டுறவில் சேர்ந்திருக்கும்போது, அதனால் பெறும் ஆதாயமும் உண்டு. இடர்களும் உண்டு; மொத்ததில் இடர்களைவிட ஆதாயம் மிகுதியென்று கருதுவதனாலேயே அதில் நீடித்து இருக்கிறான். அதே சமயம் கூட்டுறவிலிருந்து விலகுவதிலும் அவனுக்கு இடர்கள் இருக்கலாம். ஆதாயங்கள் இருக்கலாம். ஆதாயங்களைவிட இடர்களே அவனுக்குப் பெரிதாகத் தோற்றக்கூடும்.

ஒவ்வொரு மனிதனும் தன்தன் தனி நலனுக்காகவே போராடுகிறான். போராட்டத்தில் எந்தப்பக்கம் அவன் திரும்பினாலும் மொத்தத்தில் நலந்தீங்குகள் இருபுறமும் இருக்கத்தான் செய்யும். எந்தப் பக்கம் அவன் இருக்கிறான் என்பது அவன் அனுபவத்தையே பொறுத்தது. யாராவது கூட்டுறவின் பக்கம் இருப்பது நன்றன்று என்று கருதினால், அதன் இடர்களுடன் அதன் ஆதாயங்களையும் துறந்துவிட ஒருப்படுவர். அத்துடன் கூட்டுறவிலிருந்து விலகுவதனால் ஏற்படும் இடர்களை ஏற்று விலகுவதன் அனுபவத்தையும் வெற்றியையும் கண்ட கூட்டுறவின் மற்ற உறுப்பினரும் சிறிதுசிறிதாக அவரைப் பின்பற்றுவார்கள். பழைய அமைப்பு முறைகள் தாமாக இந்நிலையில் தளர்ந்து சரிந்து மறைந்து போகும்.

தற்கால அமைப்பு முறைகளின் கொடுமைகளை எடுத்துக்காட்டிக் கண்டிப்பவர் இத்தகைய நிலைமையை உண்டாக்கி வருகிறார்களென்று எவரும் கூறமுடியாது. அவர்கள் தாம் கண்டிக்கப்புகும் அமைப்பு முறையின் ஆதாயங்களைத் தாம் நுகரத் தயங்கவில்லை. வெறுப்பது ஆதாயங்களுடன் கிட்டும் இடர்களையே. அதுமட்டுமன்று. அவர்கள் பெறும் ஆதாயங்கள் பிறருக்கு இடரும், பிறர் பெறும் ஆதாயங்கள் அவர்களுக்கு இடரும் ஆகும். எனவே அவர்கள் விரும்புவது பிறர் இடரை, வெறுப்பது பிறர் ஆதாயத்தை என்பது தானே விளங்கும்.

சுருங்கச் சொன்னால், அவர்கள் சுரண்டலை வெறுப்பதற்கான காரணம், சுரண்டலை அவர்கள் ஒழிக்க விரும்பவதாலல்ல. சுரண்டலில் வரும் ஆதாயத்தில் அவர்கள் மற்றவர்களுக்குப் பங்குதர விரும்பவில்லை. அதில் வரும் இடர்களிலோ, அவர்கள் தாம் பங்குகொள்ள விரும்பவில்லை. ஆதாயம் முழுவதும் கூடியமட்டும் தமக்கு வரவேண்டுமென்றும், இடர்கள் முழுவதும் கூடியமட்டும் மற்றவர்களுக்குச் செல்லவேண்டுமென்றும் அவர்கள் அவாவுகின்றனர்.

இது சுரண்டல் முறை எதிர்ப்பல்ல, சுரண்டலில் தனியுரிமைக் குத்தகை நாடுவதேயாகும்!

தனிமனிதரும் அமைப்பும்

“தனிமனிதன்” ஒன்றும் தெரியாத, ஒன்றும் தனிப்படச் செய்ய இயலமாட்டாத அப்பாவி. அவன் செய்யும் கொடுமைகள் கூட அவனாகச் செய்வதல்ல. இரக்கமற்ற, உணர்ச்சியற்ற ஓர் அமைப்பு முறையில் அவன் கட்டுண்டு. அதன் செயலில் அவன் சிக்குண்டு கிடக்கின்றான். கொடுமை செய்யும்போது அவன் கொடுமைக்கு ஆளானவனே யாவான்"

இதுவே போலி எதிர்ப்பாளர் கூற்று!

மேற்குறிப்பிட்ட செய்திகளை நோக்க, தனிமனிதனை எப்படி ஏதுமறியாத அப்பாவி என்று கூறமுடியும்? எல்லாரும் தத்தம் நலமே அவாவி ஈடுபட்டு ஒத்துழைக்கும் திட்டமுடைய அமைப்பில் அவர்கள் பொறுப்பு இல்லாதிருக்க முடியுமா? ஒவ்வொருவருக்கும் இல்லாத பொறுப்பு மொத்தத்தில் அமைப்புக்கு எவ்வாறு ஏற்பட முடியாது. ஏனெனில் தனிமனிதரை நீக்கி அமைப்பு என்ற ஒன்று இல்லை.

உண்மை யாதெனில், அமைப்பில் குறை இருந்தால், அப்போது அதில் ஈடுபடும் உறுப்பினர் அனைவருமே குற்றவாளிகள் ஆவர். அமைப்பு பல தலைமுறை, பல ஊழி கடந்ததா யிருந்தால் கூடப் பொறுப்பு குறையவில்லை. ஏனென்றால் தனிமனிதர் நலன்களுக்கு மாறான அமைப்பு நீடித்திருக்காது.

அமைப்புக்கான பொறுப்பைத் தனிமனிதரிடமிருந்து விலக்க முடியாது. ஆனால், இந்த அடிப்படை மெய்மையை மறுக்க, அமைப்பைக் குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் வேறு ஒருவகையில் வாதிக்கூடும்.

“அமைப்புக்கான பொறுப்பில் தனிமனிதர் அனைவருக்கும் சரிசமமான பங்கு கிடையாது. ஏனென்றால், அதன் நலங்கள் தனி மனிதரிடையே ஒரு சிலருக்குச் சாதகமாகவும், மிகப் பலருக்குப் பாதகமாகவும் பலபடி உயர்வு தாழ்வுகளுடன் செயலாற்று கின்றன; அமைப்பின் நலத்துக்குரிய சிலரே அதனுடன் ஒத்துழைத்து அதில் பொறுப்புடையவராகின்றனர். மற்றவர் பொறுப்புடையவராகார். அத்துடன் சிலரிடையிலும் பலரிடையிலும் பலபடிகளாக நலங்களும் நலக்கேடுகளும் வேறுபடுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தமக்கு மேம்பட்ட வரை நோக்கி அமைப்பை எதிர்க்கவும், கீழ்ப்பட்டவரை நோக்கி அதை ஆதரிக்கவும் விரும்புபவர். இவ்விரண்டாகப் போக்கினால்தான், தனிமனிதன் செயல் பயனற்றதாகி, கூட்டு வலுவாகிய அமைப்பின் மொத்த வலிமை செயலாற்றுகிறது. எனவே, மக்கள் படிநலம் உயருந்தோறும் பொறுப்பு மிகுதி. தாழுந்தோறும் பொறுப்புக் குறைவு,” என்று அவர்கள் வாதிப்பர்.

ஒத்துழைப்பின் வலு

இந்த வாதமும் செல்லுபடியாகாது. முதலாவதாக, சிறுபாலார் ஒத்துழைப்பின் மீது எந்த அமைப்பும் நிலைபெறவோ, வளரவோ முடியாது. பெரும்பாலோர்களின் நலத்துக்கு அது மாறுபட்டதாயிருந்தால், அது கணக்கில் அழிந்துவிடும். சிறுபாலார், பெரும்பாலார் என்ற வாதத்தை விடுத்துச் சுரண்டல் முறை அமைப்பைக் கண்டிப்பவர்கள் தனிமனிதன் இரண்டாகச் செயல்முறையைச் சுட்டிக்காட்டு கின்றனர். இதுவே நாம் கூறிய உண்மையை அவர்கள் உணர்கின்றனர் என்பதைக் காட்டும்.

தனிமனிதர் இரண்டகம் என்பது ஒவ்வொருவரும் தத்தம் நலம் நாடி அதை ஆதரித்தும், நலக்கேடு நாடி அதை எதிர்த்தும் நிற்கின்றனர் என்றே பொருள்படும். அவர்கள் எதிர்ப்பு ஆதரவைவிட வன்மையுடையதானால், அமைப்புத் தகர்ந்து விடும் என்பது கூறாதலே அமையும். அப்படியானால், அமைப்பு நீடிப்பதற்குக் காரணம் அவர்கள் எதிர்ப்பைவிட, ஆதரவே வலுவுடையது என்று ஏற்படுகிறது.

அவர்களில் பலர் சுரண்டலை முனைப்பாகக் கண்டிப்பவ ரல்லாராயினும், அவர்கள் நிலை உண்மையில் அதை ஆதரிப்பவர் நிலையில் வேறல்ல. குரல்கொடுத்துக் கண்டிக்கவோ, ஆதரிக்கவோ பிறரை தூண்டாவிடினும் அவர்கள் செயலிலேயே சுரண்டல் எதிர்பாளருடன் ஒத்துழைத்துச் சுரண்டல் இயந்திரத்தில் தம் ஆட்சியைக் கொண்டுவர முயல்கின்றனர். சுரண்டலைக் கண்டிப்பவரும் சரி, கண்டிக்காது வாய் பேசாது ஆதரிப்பவரும் சரி அம்முறைக்குப் பொறுப்பற்றவர் ஆகமாட் டார்கள் என்பது இதனால் தெற்றெனப்புலப்படுகின்றது.

சுரண்டலை வெளிப்படையாக ஆதரிப்பவர் எவரையும் நாம் காணமுடியாது. இது இயல்பானது, நீக்கமுடியாதது. தெய்வநீதிப்படி அமைந்தது என்று வேண்டுமானால் சிலர் கூறலாம். இவர்கள் சுரண்டல் அமைப்பு முறையில் நற்பலன் கண்டவர் அல்லது காண்கின்றவர் என்பது தெளிவு. ஆனால் மிகப்பெரும்பாலோர் ஆகியவரும் அதனை எதிர்க்கவில்லை. நற்பலன் கண்டவரைப் பின்பற்றி அதன் ஆட்சிக் கயிற்றைத் தம் கையில் கொள்ள அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். அவர்கள் அமைப்பு முறையில் மிகுதிநலம் பெறமுடியவில்லை. ஆயினும் அவர்கள் முயற்சி அம்முறையை முற்றிலும் நேரடியாக எதிர்ப்பதில்லை. அதனுடன் ஒத்துழைத்து அம்முறையில் வெற்றி கண்டவருடன் ஒப்பாக இடம் பெறவே அவர்கள் உழைக்கின்றனர்.

மூன்றாவது பகுதி முதற்பகுதியைப் போலவே சிறுபான்மை யானது. இப் பகுதியினரே சுரண்டல் முறையை வெளிப்படையாக எதிர்க்க முனைந்து பிறரையும் எதிர்க்கத் தூண்டுபவர்கள். சொல்லளவில் அவர்கள் சுரண்டல் அமைப்புமுறையை எதிர்ப்பதாகத் தோன்றினாலும், செயலளவில் அவர்தம் இரண்டாம் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களைப் போல, அதன் நலங்களைஙக கூடியமட்டும் பற்றிக் கொண்டு பெரும்பங்கு நலங்களை அடைபவரை ஒத்த இடம்பெற அவாவி, அது காரணமாக அமைப்பை எதிர்ப்பவர்களே. அவர்களுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், அவர்கள் ஆட்சியிலுள்ளவத்களை எதிர்க்கும் துணிவுடைய வர்கள் என்பதே.

அமைப்புடன் ஒத்துழைத்து ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஓரளவு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும்பாலான பொதுமக்கள் ஆட்சியாளர்களை எதிர்க்கும்படி அவர்கள் தூண்டுகிறார்கள். இவ்வெதிர்ப்பு வெற்றி பெறுவது அருமை. ஆனால், வெற்றிபெற்ற அளவில் நலம்பெறுவது யார் என்று கவனித்தால், எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பால் சற்றுக் குறைபட்டால், அந்த அளவுக்கு வலுமிகுவது பொதுமக்களுக்கல்ல. அவர்களைத் தூண்டி ஆட்சியாளர்களை எதிர்த்தவர்களுக்கே. செயல்முறையில் இப்பயன் அவர்கள் நோக்கத்தின் புற உருவே.

அவர்கள் அமைப்பு முறையை எதிர்ப்பது அமைப்பு முறையை ஒழிப்பதற்கல்ல, அதன் ஆட்சியாளராகத் தாமே அமர்வதற்காகத்தான்.

அமைப்பின் மூன்று வகுப்புகள்

இங்ஙனம் எந்த அமைப்பிலும் அந்த அமைப்பினால் ஆதாயம் பெறுபவர்கள், ஆதாயம் பெறும் அவாவுடன் கூடுமானமட்டும் ஒத்துழைப்பவர்கள், ஆதாயத்தைப் பையில் போட்டுக் கொண்டே எதிர்ப்பியக்கம் தோற்றுவித்து ஆதாயம் பெறுபவர் குழுவில் படிபடியாக இடம் பெறுபவர்கள் என்று மூன்று வகுப்பார் ஏற்படுகின்றனர். இவர்களை நாம் முதலாளி வகுப்பு, உழைப்பாளி வகுப்பு, நடுத்தர வகுப்பு என்று அழைக்கலாம். அமைபபினிடத் மூன்று வகுப்பும் சொல்லளவில் கொள்ளும் தொடர்பு வேறானாலும், அதன் ஆதாயத்தை மட்டும் பெற்று, அதை மேலும் பெருக்க நாடுவதில் மூன்று வகுப்புக்களுமே செயலில் ஒன்றுபடுதலைக் காணலாம்.

ஓர் அமைப்பை ஆதரிப்பவர்கள் அதன் நலன்களை மட்டுமின்றி அதன் கேடுகளையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஏனெனில் ஒரே அமைப்பில் ஒருவர் நலங்கள் மற்றொருவர் கேடுகளாகவும், ஒருவர் கேடுகள் மற்றொருவர் நலங்களாகவும்தான் இருக்க முடியும். நலங்கேடுகள் ஆகியவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றை எதிர்ப்பது, அமைப்பை எதிர்ப்பபதாக முடியாது; அமைப்பின் மற்ற உறுப்பினரை எதிர்ப்பதாகவே முடியும். இது போலவே அமைப்பை எதிர்ப்பவர்களும் அதன் கேடுகளை மட்டும் எதிர்த்தால் போதாது. அதன் நலங்களைத் துறந்தே அiதை எதிர்க்க வேண்டும்.

அவர்கள் நலங்கள் வேறுசிலர் கேடுகளே. அவர்கள் கேடுகளும் வேறுசிலர் நலங்களே. ஆதலால், அவர்கள் எதிர்ப்பு அச்சிலரைக் கெடுப்பதாகவே முடியும். சுரண்டலை முனைந்து எதிர்த்துத் தலைமை தாங்குபவர்கள் முனைந்து எதிர்க்காத பொதுமக்கள் நலங்களைச் சுரண்டுவது இவ்வகையில்தான்! முதலாளிகள் அல்லது ஆட்சியாளர்கள் பொது மக்களின் இயல்பான ஒத்துழைப்பைப் பயன்படுத்திச் சுரண்டுகிறார் களென்றால், இவ்வெதிர்ப்பாளர்கள் அவ்வெதிர்ப்பைத் தூண்டிவிட்டு அதன் பயனைச் சுரண்டுகிறார்களென்னலாம்.

அமைப்பில் பொதுமக்களே பெரும்பாலானவர்கள். ஆதலால், மற்ற இரண்டு வகுப்பாரும் அவர்களைச் சுரண்டு கிறார்கள் என்பது சொல்லளவில்தான் சரியாக முடியுமே யல்லாமல், உண்மையில், அதாவது செயலளவில் சரியல்ல. அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் எந்தக் சுரண்டலும் நடைபெற முடியாது. அதுமட்டுமன்று; பெரும்பாலான அவர்கள் பண்பே அதில் பெரும்பாலான பங்குப் பொறுப்புக்கும் உரியதாகும் என்பதில் ஐயமில்லை. எனவே, ‘தனிமனிதன் குற்றமற்றவன்; அமைப்பே அவனைக் கைப்பாவை யாக்கி ஆட்டிப்படைத்து அட்டூழியம் புரிகிறது’ என்ற குற்றச்சாட்டில் ஒரு சிறிதும் உண்மை இருக்க வழியில்லை.

எல்லா அமைப்பிலும் நலங்களுங்களும் தீமைகளும் இருப்பது இயல்பு. எல்லாரும் அதன் நலங்களை ஏற்றுத் தீமைகளை விலக்க முயல்வதும் இயல்பு. மனிதச் சமுதாய அமைப்பில் எல்லாத் தனிமனிதரும், எல்லா வகுப்பினரும் இவ்வியல்புப்படியே ஒன்றுபட்டு ஒத்துழைக்கின்றனர். எவரும் தொடர்பாக நலங்களைப் பெறுகின்றனர் என்றோ, தொடர்பாக நலங்களைப் பெறுகின்றனர் என்றோ, தொடர்பாகத் தீமைகளைப் பெறுகின்றனர் என்றோ யாரும் நிலைநாட்டமுடியாது. ஓரளவு அத்தகைய நிலை ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு நாட்டில் இருந்திருக்கலாம்; இருந்தன; ™ஓரளவு இருக்கின்றன. இவையே நாடு, இனம், சாதி ஆகிய பிறப்பு வேறுபாடு காரணமானவை. ஆனால் அமைப்பில் இயல்பாக வளர்ந்துவரும் ஒரேவகைப்பட்ட ஒத்துழைப்பு இவற்றைத் தகர்த்தெறிந்து விட்டது. தகர்த்தெறிந்து வருகிறது.

இவை கடந்து கிட்டத்தட்டத் தொடர்பாக இருந்து வரும் வேறுபாடு வகுப்பு வேறுபாடு ஒன்றுதான். இதில் தனிமனிதன் மாறினாலும், வகுப்பின் தன்மை எளிதில் மாறுவதில்லை. ஏனென்றால், போட்டியினால் ஒரு வகுப்பில் வெற்றி பெற்றவன் வேறு வகுப்புக்கும், தோல்வியுற்றவன் மற்றொரு வகுப்புக்கும், தள்ளப்படுகிறான். போராட்டத்தில் தோற்றவன் எப்போதும் தோற்பதில்லை. வென்றவன் எப்போதும் வெல்வதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் ஒருபுறம், தோற்றவர் ஒருபுறமுமாகவே அமைந்து போராடுகின்றனர்.

போட்டியில் சரிசமப் பொறுப்பு

அமைப்பில் எந்த ஒரு சமயத்திலும் நலங்களுக்கு உரியவர்கள் போட்டியில் வென்றவர்கள். அவர்கள் வெற்றி நீடிக்கலாம். அல்லது திடுமென மாறலாம். ஆனால் வென்ற அளவில் நலங்கள் அவர்களைச் சார்கின்றன. அதே சமயத்தில் போட்டியின் நலங்களின் உரிமை குறைந்தவர்கள் நிலையும் இதுபோலவேதான். போட்டியில் தற்காலிமாகத் தோற்ற அளவிலேயே அவர்கள் நலங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆனால், போட்டி இத்துடன் நிற்பதில்லை. வென்றவரும் தோற்றவரும் பின்னும் போட்டியிடத்தான் செய்கின்றனர். அதுமட்டுமன்று, வென்றவர் வென்றவருடன் போட்டியிடு கின்றனர். தோற்றவர் தோற்றவருடன் போட்டியிடுகின்றனர்.

அமைப்பை ஏற்று அதனடிப்படையில் நடத்தப்படும் இத்தகைய நிறைபோட்டியில் ஒவ்வொருவர் வெற்றி தோல்வி களும் வேறு வேறு ஆயிருக்கலாம். அவர்கள் பொறுப்பு சரிசமமாகவே இருக்க முடியும்.

அமைப்பின் சாதகபாதகங்கள் போரில் ஏற்படும் வெற்றி தோல்விகள் போன்றவை. வெல்ல இருப்பவர், தோற்க இருப்பவர் இருவரும் நாடுவது வெற்றியையே. போரை அதற்கான முறையாக இருவருமே ஏற்கின்றனர். ஆனால், வெற்றி கிடைப்பது ஒருவருக்குத்தான். இருவருக்கும் கிடைக்க முடியாதென்பதும் இருதிறத்தாருக்கும் தெரியும். இந்நிலையில் வெற்றி பெற்ற வருக்குத்தான் போரில் பொறுப்பு உண்டு, தோற்றவருக்குக் கிடையாது என்று எப்படிக் கூறமுடியும்?

இந்த வெற்றிதோல்விப் பொறுப்புகளைப் போரைவிடச் சூதாட்டத்தில் நாம் தெளிவாய்க் காணலாம்.

எதிராளியின் பொருளைத் தட்டிப் பறிக்கவே இருதரப்பாரும் ஆவலுடன் சூதாட்டத்தில் இறங்குகின்றனர். தொடக்கத்தில் இருதரப்பாரில் எவரும் ஆட்டத்தின் ஆவலில் பின்னடையவில்லை. ஆயினும் முடிவில் வென்றவன் நழுவுகிறான். முற்றிலும் தோற்றவன் ஆட்டத்தில் மனக்கசப்புடன் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு செல்கிறான். அரைகுறையாகத் தோற்றவன் மேலும் ஆடத் துடிக்கிறான். ஆனால் இத்தற்காலிக மனநிலை வேறுபாடு அடுத்த ஆட்டத்தில் போய்விடுகிறது. ஏனெனில் வென்றவன் தோற்கக்கூடும்; தோற்றவன் வெல்லக் கூடும்.

பொருளியல் துறையில் சமூக அமைப்பிலும், போரிலும், சூதாட்டத்திலும் வென்றவர் தோற்றவரைச் சுரண்டவில்லை. இருவரும் சுரண்டல் நோக்குடனேயே அமைப்பை ஏற்று இறங்குகின்றனர். வெற்றி கண்டவன் வெற்றிக்குத் தோற்றவன் காரணமாதலால் அதை ஏற்கிறான். ஏற்பதன் மூலமே அவன் மீண்டும் வெற்றி காண வழி ஏற்படலாம் என்று கருகிறான். மூன்றும் இவ்வகையில் வளர்ப்பது ஒரே சூதாட்ட மனப் பான்மையையே. இம்மனப்பான்மையையே. இம் மனப்பான்மையே சுரண்டல் அமைப்பைத் தாங்கி நிற்கிறது.

இம் மனப்பான்மையுடையவர்கள் வென்றாலும் தோற்றாலும், வாயளவில் ஆதரித்தாலும் எதிர்த்தாலும், அவர்கள் அமைப்புக்குப் பொறுப்பேற்று அதைத் தாங்கு பவர்களே. இம் மனப்பான்மையைக் கைவிட்டு, அமைப்பின் கேடுகளைக் கண்டிக்கும்போதே அதன் நலன்களைத் துறந்த வர்கள்தான் உண்மையில் அமைப்பை ஏற்காது புதிய அமைப்புக்குப் பாடுபட்டவர்கள் ஆவார்கள்.

மனிதர் மாறுகின்றனர்; வகுப்பு நிலையானது

இங்ஙனம் அமைப்பின் தீமைக்கு ஆளானவர்கள் என்பவர் யாவரும் உண்மையில் தத்தம் செயல்களுக்கு ஆளானவர்களே யல்லாது வேறில்லை. நன்மைக்கு ஆளானவர்கள் என்பவர்களும் தத்தம் செயல்களுக்கு ஆளானவர்களே. ஆனால் அமைப்பில் குறைபாடு இருக்கக்கூடும் என்பதை நாம் மறுக்கவில்லை. அது இரு சாரரையும் ஒருங்கே பாதிக்கிறது. தீமைக்காளான வகுப்பு என்று ஒன்றை எப்போது காட்டாலாமானாலும், தனிமனிதர் நீடித்துத் தீமைக்கு ஆளாவதில்லை. அதுபோல நன்மைக்கு ஆளாகுபவர்கள் என்று ஒருவகுப்பைச் சுட்டிக்காட்ட முடியுமானாலும், எந்தத் தனிமனிதரும் அந்நன்மைக்கு நீடித்து இலக்காவதில்லை. நிலையான நன்மை தீமைகள் இல்லாமையே அமைப்புக்களின் குறைபாடு என்பது இதனால் விளங்கிறது.

அமைப்பின் இக் குறைபாடறிந்தவர்கள் அதை நீக்கிப் புதிய அமைப்புக்குப் பாடுபடமுடியும். அதற்கு வழி அமைப்பைக் குறைகூறி, தனிமனிதர்கள் சிலரையோ பலரையோ அதற்குப் பொறுப்பேற்றவர்களாகக் கருதுவதல்ல. குறைப்பாட்டைப் பற்றிய அறிவை அமைப்பை ஆதரிக்கும் அனைவருக்கும் தெரிவித்தல், அமைப்பின் நலந்தீங்கு இரண்டிலிருந்தும் விலகிநின்று பிறருக்கு வழிகாட்டால் ஆகிய இவ்விரண்டுமே புதிய அமைப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை வகுக்கும்.

அமைப்புக்கள் எதனிலும் அதன் தீமைக்குப் பொறுப் புடையவர்கள், அதாவது அதனடிப்படையில் ஏமாற்றுபவர்கள் இருக்க முடியாது. அதன் நன்மைக்குப் பொறுப்புடையவர்களாகி, தீமைக்கு ஆளாகும் ஏமாளிகள் அல்லது சுரண்டுப்படும் குற்றமற்ற அப்பாவிகளும் இருக்க முடியாது. ஆகவே அமைப்பைக் குறை கூறித் தனிமனிதரைக் குற்றமற்றவராக்குவதோ, அமைப்பில் சிலரைக் குறை கூறிப் பலரைக் குற்றமற்றவராக்குவதோ தகாது.

நாம் இங்ஙனம் கூறும்போது நாம் அமைப்பை ஆதரிப்ப தாகவோ, அல்லது அமைப்பின் உறுப்பினரான தனி மனிதர் குற்றமற்றவர் என்று கூறுவதாகவோ அமையாது. நிலையான நன்மை, எல்லாருக்கும் நன்மை, எல்லாருக்கும் நன்மை ஒருவருக்குத் தீமை தராது மற்றவருக்கு நலந்தரும் நன்மை இதுவே உயர் குறிக்கோள். இதன் அடிப்படையில் ஏற்படாத அமைப்புக்கள் எவையும் குறைபாடு உடையவையே.

தற்காலத் தொழில் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் இவ்வகையில் குறை நிரம்ப உண்டு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இவ்வமைப்பு தனிமனிதர் சிலர் பலரிடமும், சில சமயம் எல்லாரிடமும் தங்குதடையற்ற தன்னலத்தையும், பேராவலையும் தூண்டிவிடுகிறது என்பதும் உண்மையே.

இவையல்லாமல் மூன்றாவது ஒரு தீங்கும் இந்த அமைப்புமுறை காரணமாயிருக்கிறது என்பதைப் பலர் கவனிப்ப தில்லை. அமைப்பில் எல்லாரும் வாய் பேசாமல் செயலில் ஒத்துக்கொண்ட தத்துவங்களின் எல்லையில்தான் தனிமனிதன் தன்னலம், பேரவா ஆகியவை பொதுவாகச் செயலற்றுகின்றன. ஆனால் அரங்கில் ஆடிப்பழகியவன் அம்பலத்தில் ஆட முனைவதைப் போல, அமைப்பின் எல்லைக்குள் தன்னலப் பேரவா வேட்டையாடியவன் அடிக்கடி அந்த எல்லை கடந்தும் வேட்டையாட முற்படுகிறான். அமைப்பை ஆதரிப்பவரும் துணுக்குறும் வஞ்சனை, கொடுமைகளை அத்தகையவன் ஆற்று கிறான். அமைப்புக் கடந்து தெறித்த இத்தகைய தீங்குகளின்றும் அமைப்பினுட்பட்ட தீங்குகளைப் பிரித்துக் காட்டவே, “தனிமனிதன்” தீங்கு, “அமைப்பின்” தீங்கு என்ற பாகுபாடு எழுந்தது என்னலாம்.

ஏமாற்றுபவர் ஏமாளி இருவரின் சரிசமப் பொறுப்பு

புதிய வாணிகக் கழகம் நிறுவுவதாக மக்களை ஆசைக் காட்டி அவர்களை மோசம் செய்பவர்கள் உண்டு. ஆசைகாட்டி அழித்து விடாமல், நீடித்த, நிலையான சுரண்டல் நடத்துபவர் களும் உண்டு. இவ்விடங்களில் ஏமாற்றுபவர்களை எல்லாருன் கண்டிக்கத் தவறுவதில்லை. ஆனால் கண்டனத்துக்குரியவர்கள் அவர்கள் மட்டுமல்ல. அவர்கள் ஏமாற்றத்துக்கு அமைப்புமுறை இடங்கொடுத்து மற்ற மக்களை நம்ப வைத்தது. இதைக்கண்டு, குற்றவாளிகள் ஏமாற்றியவர்கள் மட்டுமல்ல, அமைப்பும் குற்றவாளிதானென்று நடைமுறை அமைப்பின் எதிரிகள் கூறுகிறார்கள்.

அமைப்பு என்றால் அமைப்புடன் ஒத்துழைக்கும் அனைவரின் தொகுதி என்று பொருள் கொண்டால் நாம் இதை ஒத்துக்கொள்ளத் தயங்கமாட்டோம்; ஆனால், அமைப்பையும் ஏமாற்றியவர்களையும் குறைகூறி, ஏமாந்தவர்களைக் குற்றமற்றவர் களாக்கும் கண்டனத்தை நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், ஏமாற்றியவர்கள் என்ன மனப்பான்மையுடன் அமைப்பைப் பயன்படுத்தினார்களோ, அதே மனப்பான்மையுடன் அதில் பங்கு கொண்டவர்கள்தான் ஏமாறியவர்களும்! இருசாரா ரிடையேயும். உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் - ஒரு சாரர் வெற்றி கண்டவர்கள், தற்காலிகத் தோல்வியுற்றவர்கள், தற்காலிக வெற்றி கண்டவர்கள். மற்றவர்கள் தோல்வியுற்றவர்கள், தற்காலிகமாகத் தோல்வியுற்றவர்கள். ஏமாற்றும் வகுப்பும் ஏமாறும் வகுப்பும் நீடித்து இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஏமாற்றுபவன் ஏமாளியாகா திருப்பதில்லை; ஏமாளி ஏமாற்றுபவனாகாதிருப்பல்லை.

பொதுவுரிமைச் சீர்திருத்தவாதிகள் முதலாளித்துவத்தையும் அதன் ஆதாய மனப்பான்மையையும் வன்மையாகக் கண்டிப்பது சரியே. ஆனால் முதலாளித்துவத்தின் ஒருபகுதி உற்பத்தித் தொழிலின் முன்னேற்றம். இதை யாரும் குறைகூற மாட்டார்கள். குறைகூறத்தக்க அதன் பகுதி வாணிகத் துறைசார்ந்த ஆதாயச் சூதாட்டமே. இது மக்கள் பேரவாவை முதலீடாகக் கொண்ட வாணிகம் ஆகும். சீர்திருத்தம் பேசுபவர்கள்கூட இந்தக் குழியில் விழுந்து தங்கள் பணத்தை “நல்ல முதலீடு” பார்த்து, அதாவது நல்ல பங்கூதியம் வரும் துறை பார்த்துப் போடமுயல்கிறார்கள். முதலாளித்துவத்தின் மிகத் தீய பகுதியாகிய பேரவா மனப் பான்மையை ஒருபுறம் வளர்த்துக் கொண்டே, அவர்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தப் போரிடுவதாகவும் கூறிக்கொள் கின்றனர்.

ஆதாயச் சூதாட்டம் ஆதாயத்தை மட்டும் விரும்பவில்லை. பிறர் ஆதாயத்தினி பயனான ஆதாயத்தை அது விரும்புகிறது. சிலரிடம் இவ்விருப்பம் முனைப்பாயிருப்பதில்லை. ஆனால் அடங்கிய விருப்பம் வாய்ப்பு நேர்ந்தவிடத்தில் முனைந்து வெளிவந்து செயலாற்றுகிறது. உழையாது பெறும் ஆதாயமே பணப்பகட்டுக்கும் சொகுசு வாழ்வுக்கும் இடம் தருகிறது. இவை பிறர் உழைப்பின் பயனாக வந்தனவாதலால், உழைப்பவர் பக்கம் வறுமையையும் பட்டினியையும் பரப்பாமலிராது. சூதாட்ட ஆதாயத்தில் இங்ஙனம் பட்டினியும் வறுமையும் ஏற்பட்டும், முன்னதைப் பெற்றுக் கொண்டவர் பிந்தியவர் தீங்குகளுக்காக முதலாளித்துவத்தைக் குறை கூறுகின்றனர்.

ஆதாயவிருப்பும் சூதாட்டமும்

உயர் வகுப்பாரிடமும் நடுத்தர வகுப்பாரிடமும் ஆதாயச் சூதாட்டம் முனைப்பாகக் காணப்படுகிறது. இதனால் ஏழை வகுப்பினரிடம் அது இடம் பெறவில்லை என்று கூறமுடியாது. அவர்களுக்கு இவ்வகையில் வாய்ப்புகள் இல்லாததனாலேயே இந்த விருப்பம் முனைப்பாக இருக்கவில்லை. ஆனால், ஏழைமக்களின் கனவார்வங்கள் எவையென்று ஆராய்ந்தால், உண்மை விளங்கி விடும். வாய்ப்புக் கிடைக்காமல், நம்பிக்கை என்னும் பசையற்று வற்றிவிட்ட அவர்கள் ஆர்வங்களை அவர்கள் விரும்பிகேட்கும் ஆர்வக்கதைகள் காட்டுகின்றன.

ஏழை ஒருநாள் எத்தகைய அருமுயற்சியுமில்லாமல் திடுமெனப் பணக்காரனாய் விடுகிறான். அதன்பின் அவன் உழைக்கும் தேவையில்லாமல் செல்வத்தின் இன்பத்தில் திளைக்கிறான். இது வெறும் புராணக்கதையல்ல, வாழ்க்கையின் நிழலே என்பதைக் குதிரைப்பந்தயம் முதலிய சூதாட்டக் களங்கள் காட்டுகின்றன. ஏழைகள் திடுமெனப் புராணவீரர் போலப் பணக்காரராகும் அவாவால், தம்மிடம் உள்ளதையும் கொண்டு கொட்ட முனைகின்றனர்.

மனித உள்ளத்தில் பேரவாவும் உழையாத செல்வப் பற்றும் இன்ப ஆர்வமும் இருக்கும்வரை, வறுமையும் பட்டினியும் உலகச் சமுதாயத்தை விட்டு அகல முடியாது. இவையே முதலாளித் துவத்தின் வித்துக்கள். முதலாளித்துவச் சமுதாயம் என்பது முதலாளிகளால் ஆக்கப்பட்ட சமுதாயமன்று. அது முதலாளி களை ஒருபுறமும் ஏழைகளை ஒரு புறமும் பிரித்து, அந்நிலை யிலும் அவர்களை நீடித்து நிற்கவிடாமல் ஓயாது சுழற்றி ஆட்டிவரும் ஒருமுறை ஆகும். அதனை ஆக்கியவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள், நடுத்தர வகுப்பார் ஆகிய எல்லா மக்களுமே.

மனிதர் அனைவரின் உள்ளார்ந்த விருப்பங்களே அவர்கள் செயல்கள் ஆகின்றன. இவையே அவர்களின் வாய்பேசா ஒப்பந்தமாகி, அமைப்புக்களின் அடிப்படையாக அமைகின்றன. எனவே, அமைப்புக்களின் நன்மை தீமைகள் மனிதர் உள்ளவாக்களின் நன்மை தீமைகளேயன்றி வேறல்ல. அவர்கள் அடையும் “நன்மை தீமைகள்” அதாவது அவர்கள் நன்மை தீமைகளென்று கொள்ளும் “ஆதாய இழப்பு”க்கள் உண்மையில் அவர்கள் உள்ளவாக்களின் குறைப்பாட்டால் பிறந்த ஒரே பொதுத்தீமையின் இருபுறங்களே. ஏனெனில் ஒருவர் ஆதாயம் என்று கூறுவது இன்னொரு சமயம் இழப்பாகவும் அமையவல்லது.

பத்துச் சூதாடிகள் தலைக்குப் பத்துப் பணத்துடன் சூதாட வந்தமர்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்துப் பணம்கூட அவர்களுக்குத் தமக்கேயுரிய பணமாயிருக்க வேண்டும்மென்பதில்லை. ஒவ்வொருவரும் உழைப்பில்லாமல் பத்தை நூறாக்கும் கனவுடனேயே வந்துள்ளார்களாதலால், ஒரு பத்தைக் கடனாகக் கூட வாங்கி வந்திருக்கலாம். நூறு வென்றவுடன் பத்தைத் திருப்பிக்கொடுத்து, உழைப்பில்லாமல், உண்மை முதலில்லாமல், தொண்ணூறு ஈட்டிச் செல்லவே அவர்கள் ஒவ்வொருவரும் வந்திருக்கின்றனர் என்பது தெளிவு.

சூதாட்ட முடிவில் ஒருவனிடமோ ஒரு சிலரிடமோ பணமும் இருக்கும். மற்றவர்கள் வெறுங்கையாய், கடனானி கனாகத்தான் செல்வர். இதில் ஈட்டியவர் தம் பணத்தைத் தம் பணமாகக் கருதாமல் செலவிடுவர். அவர்கள் கைப்பணம் விரைவில் கரையும். மற்றவர்களோ கடன், பட்டினி ஆகியவற்றில் உழல்வர்.

இங்ஙனம் கடன் வாங்கி வந்த தொகை தவிர, ஒருகாசு ஈட்டாமல், செவவி செய்து அத்துடன் சிலரைக் கடன்படுத்திய பின்பும் ஒருசிலர்கூட உண்மை ஆதாயம் அடையவில்லை.

அனைவரும்-வென்றவரும் தோற்றவரும்- இங்கே அடையும் கேடு அனைவரின் தீய நோக்கத்தினால் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. தான் உழையாது, அடுத்தவர் பணத்தைத் தட்டிப்பறிக்கும் பொது அவாவினால்தான் இவை யாவும் நிகழ்வுற்றன என்று கூறத் தேவையில்லை.

இன்பமும் செல்வமும் நல்லவை, துன்பமும் வறுமையும் கெட்டவை என்று தான் உலகில் பெரும்பாலானர் எண்ணுகின்றனர். முந்தியவற்றுக்கும் ஆளானவன் தன்னை வெற்றி பெற்றவனாகவும் பிந்தியவற்றுக்கு ஆட்பட்டவன் தன்னைத் தோல்வியுள்ளவனாகவுமே கருதுகிறான். இந்த அடிப்படை மனப்பான்மையின் பயனாகவே, துன்பமும் வறுமையும் அடைபவன் இன்பமும் செல்வமும் பெற்றவனைப் பார்த்துப் பொறாமை யடைகிறான். அவனைப் போலாகவும் பாடுபடுகிறான் ஆனால் நேர்மாறாக இன்பமும் செல்வமும் பெற்றவன் துன்பமும் வறுமையும் அடைபவனைப் பார்த்துப் பொறாமைப்படுவதுமில்லை. அவனைப் போலாக விரும்புவது மில்லை. உலக நிலை இதுவாயினும், உண்மை இதற்கு நேர்மாறானது.

அமைப்பின் குறைப்பாடுகளையும் தீங்கையும் அகற்றும் திறமுடைய “உண்மை நலங்கள்” இன்பமும் செல்வமும் அல்ல, துன்பமும் வறுமையுமேயாகும். ஏனெனில் அவை அமைப்பின் குறைபாடுகளிலும் அதற்குக் காரணமான் தனிமனிதன் குறைபாடுகளிலும் கருத்துச் செலுத்துகின்றன.

கூட்டுப்பொறுப்பும் நீடித்த பொறுப்பும்

மனிதர் அடையும் நலங்களுக்கும் தீங்குகளுக்கும் அவரவர் செயல்களே காரணமாவன. அமைப்பு எவ்வகையில் அவற்றுக்குக் காரணமானது. ஒருசாராருக்குத் தீங்கும் தருவது அமைப்பே என்பது பொருந்தாது. மனிதர் செய்யாத எந்த அநீதியையும் அமைப்புச் செய்துவிடாது. ஒரு சிலருக்கு ஒரு சிலர் மட்டுமல்லாமல் எல்லாருமே அமைப்பின் மூலமாக வாய்பேசாது பொது உள்ள அவாக்களால் தூண்டப்பட்டுச் செய்யும் செயல்களின் விளைவே. வேறு சிலருக்கு வரும் தற்காலிக நலனும் அவ்வாறே. அமைப்பில் குறைப்பாடு இருப்பதால் மொத்தத்தில் பெரும்பபாலாருக்குத் தற்காலிகக் கேடும், எல்லாருக்குமே நிலையான கேடும் விளைகிறது.

எனவே அமைப்பின் பொறுப்பு என்று கூறுவதில் ஏதாவது உண்மை உண்டு என்றால் அது இதுவே. ஒவ்வொரு மனிதரின் நலத்தீங்குகள் அவர்கள் செயலால் மட்டுமல்ல, அனைவர் ஒன்றுப்பட்ட செயலாலுமே ஏற்படுகின்றன. அத்துடன் அவர்கள் நற் பண்புகள், அல் பண்புகளின் விளைவு அவர்கள் தற்காலிக நலந்தீங்குகளுடன் முடிவதில்லை. அவர்கள் நிலையான வாழ்வின் நலந்தீங்குகள் யாவும் அவற்றின் முழுநிறை பயன்களாகவே அமைகின்றன.

அண்மையில் சமநெறி நண்பரொருவர் நிலமுதலாளிகள், நிலமுதலாளித்துவம் ஆகியவற்றைப்பற்றி உரத்த குரலில் கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அவர் மிகவும் அறிமுகமானவர். நான் சென்று அவரைத் தனிமையில் அழைத்து " அன்பரே, நீர் ஏன் நில முதலாளிகளை இப்படித் திட்ட வேண்டும். நீரே ஒரு நில முதலாளிதாமே? அத்துடன் போன வாரத்தில் தானே புதிதாக நிலம் வாங்கி உம் நில முதலாளித்துவத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறீர்?" என்றேன். அவர் சிறிது புன்முறுவலுடன், "ஆம் அன்பரே! அதனாலென்ன? நான் நிலமுதலாளியாயிருப்பதற்கும், அந்த முறையைக் கண்டிப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கக் கூடும்? தவறு தவறுதானே? நாம் நிலமுதலாளியாயிருப்பதால் தவறு என்று தெரிந்ததைக் கண்டிக்காது விடுவதா? என்றார்.

“தங்கள் நேர்மை பாராட்டத்தக்கதுதான், அன்பரே! ஆனால் தவறு என்று தெரிந்திருந்தும், நீர் மேலும் முதலாளித் துவத்தை வலுப்படுத்தலாமா?” என்றேன் நான்.

“தவறு முறையில்தானே இருக்கிறது, அன்பரீர்! முறை இருக்குமளவும் அதன் ஓர் உறுப்பாய் நான் இயங்கித்தானே தீரவேண்டும்? முதலாளித்துவ முறையின் கேட்டுக்குத் தனிப்பட்ட முறையில் தொழிலாளி எப்படி பொறுப்பாயிருக்க முடியாதோ, அதுபோலவே, அதுபோலவே, தனிப்பட்ட முறையில் முதலாளியும் பொறுப்பாயிருக்க முடியாது என்பது என் கோட்பாடு. எல்லாரும் சேர்ந்து முறையை மாற்றியமைக்கும்வரை, தன்மனிதர் அதன் செயலற்ற அடிமைகளாகவே இயங்க முடியும்.”

“அப்படியானால் சூதாடிக்கொண்டே சூதாட்டத்தைக் கண்டிக்கலாமே! சூதாட்டமுறை அதனால் ஒழிந்துவிடுமோ? குடித்துக்கொண்டே குடியின் கொடுமையைப் பேசினால், குடி ஒழிப்புக்கு என்ன வழி ஏற்படும்?” என்றேன்.

நண்பர் விடை எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். தாங்கள் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. முறையைக் கண்டித்துவிட்டு, அதனுடன் ஒத்துழைப்பதில் பயனில்லை. நான் அமைப்பில் உறுப்பினறா யிருக்கும்வரை ஓரளவு அதன் செயலில் பங்கு கொள்ளாதிருக்க முடியாதுதான். ஆனால், மனமார அதனுடன் ஒத்துழைத்து, அதை வளர்ப்பது தவறுதான்," என்று அவர் ஒத்துக்கொண்டார்.

மனமாற்றத்துக்குரிய ஒரே வழி

எல்லாரும் தம் உள்ளவாக்கள் காரணமாக ஒத்துழைத்து அமைந்த அமைப்பை எல்லாரும் மனமாற்ற மடைந்தாலன்றி ஒழிக்க முடியாதென்பதை நாமும் ஒத்துக்கொள்ளுகிறோம். ஆனால் அடிப்படைக் காரணமாகிய உள்ளவாவை ஒழித்து, எல்லாரும் ஒழித்துக்கட்ட நாம் வழிகாட்டினாலல்லாமல், மற்றவர் மனமாற்றம் ஏற்படாது. தவிர, ஒரு தனிமனிதன் மனமாற்றமடைந் தாலும் அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தாலும், அமைப்பில் மாறுதல் ஏற்படுவது உறுதி.

உலகில் தன்னுறுதியும் வாய்மைப்பற்றும் மிக்க தனிமனிதர் ஒத்துழையாமை எதிர்ப்பால் பல பழங்கால அமைப்புக்களும் முறைகளும் படிப்படியாகத் தகர்ந்துள்ளன. மனிதப்பலி, உடன்கட்டை ஏறல், சித்திரவதைத் தண்டனை முறைகள், மதம் இனம் பிறப்புக்காரணமான கொடுமைகள் ஆகியவை பல வீரமிக்க தனிமனிதர்களின் எதிர்ப்பாலேயே மனித வாழ்வின்று ஒழிந்தன. அத் தனிமனிதர் செயல்கள் பிறர் கண்களைத் திறந்தன. அவர்கள் உறுதி அவர்களை ஊக்கின. அவர்கள் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றினர்.

அமைப்புக்கள் மக்கள் உள்ளத்திலிருந்தும் செயலிலிருந்தும் பிறப்பன. சொல்லிலிருந்து பிறப்பனவல்ல. சொல் உள்ளக்கருத்தினை உள்ளவாறு தெரிவிக்கும் அளவிலேயே அதற்கு மதிப்பு உண்டு. அப்போதும் அதன் பயன் ஒரு உள்ளக்கருத்தை இன்னொரு உள்ளத்துக்கு அல்லது பிற உள்ளங்களுக்குத் தெரிவித்துச் செயலாற்றுவிப்பதன்றி வேறன்று. ஆகவே சொல்லால் எதிர்ப்பதும் கண்டிப்பதும் அமைப்பை மாற்றியமைக்க உதவாது. சொல் உள்ளத்தையும செயலையும் தழுவிய வாய்மைச் சொல்லாயிருந்தா லல்லாமல், அது பிற உள்ளங்களையும் ஊக்காது. செயல்களையும் இயக்காது. உள்ளத்திலிருந்து தோன்றிச் செயலில் வெளிப்படும் மாறுதல்களாலேயே அமைப்பும் அமைப்புக்கு ஆதரவு தரும் பிற உள்ளங்களும் மாறக்கூடும்.

மனித சமுதாயத்தில் பல அமைப்புக்கள் உள்ளன. அடிப்படை அமைப்பே சமுதாய அமைப்பு. அதன்மீது சமய அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள், வாணிக, தொழில், கலை அமைப்புக்கள், பொருளியல் அமைப்புக்கள் ஆகிய எத்தனையோ துணையமைப்புக்கள் கட்டமைந்துள்ளன. இவை எவற்றிலும் நல்ல அமைப்புக்கள், தீய அமைப்புக்கள் என்ற பாகுபாட்டை யாரும் காட்ட முடியாது. ஏனென்றால் மனித நாகரிகம் தீமையை நாடிச் செல்லவுமில்லை. தீமைக்காக அவ்வமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

கள், களவு, சிற்றின்ப வாணிகம், அடிமை வாணிகம் ஆகிய எத்தனையோ பெருந்தீமைகள் இவ்வமைப்புக்களிடையே சிலகாலம் இடம் பெற்றிருந்ததுண்டு, பெறுவதுண்டு. ஆனால் படிப்படியாக இவை அமைப்புக்களுக்கு வெளியே தள்ளப்பட்டுத் தான் செயலாற்ற வேண்டியவையாயின. மனிதச் சமுதாய அமைப்பு அவற்றுடன் போராடியே வந்திருக்கிறது. ஆயினும் இன்னும் பல தீமைகள் அமைப்புக்களிடையே இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் அவை மனிதர் உள் அவாக்களின் குறைகள். அடிக்கடி அவற்றுக்கு எதிர்ப்பு சமுதாயத்துக் குள்ளேயே ஏற்படவும் முடிகிறது. இது மனிதர் உள்ளத்தின் மனச் சான்றால் ஏற்படும் விளைவு.

இங்ஙனம் அமைப்புக்களின் நலங்கள், தீங்குகள் யாவும் தனிமனிதன் உள்ளார்ந்த நலந்தீங்குகளன்றி வேறன்று. மனிதன் நாகரிகமடையுந்தோறும் அவன் உள்ளத்தின் அறிவும் பண்பும் உயர்கிறது. இதன் பயனை நாம் அவனைச் சூழ உள்ள எல்லா அமைப்புக்களிலும் காண்கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமுதாய அமைப்பு, சமய அமைப்பு ஆகியவற்றைவிட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை உயர்ந்தவை என்பதை யாவரும் ஒத்துக் கொள்வர். தனிமனிதருள் இரண்டாயிர ஆண்டுகட்கு முன் ஒரு புத்த பிரான், ஒரு இயேசு இருந்திருக்கலாம். அவர்கள் வாழ்வின்பயனாக ஏற்பட்ட நம் சமுதாயம் தான் அவர்கள் உயர்வை அறியதக்கதாயுள்ளது. ஆனால் இன்றைய நம் சமுதாயம் அவர்கள் காலச் சமுதாயத்தைவிட உயர்ந்ததேயாகும். ஆனால் இன்றைய அமைப்புக்களின் குறைகளும் அத்தகைய வாய்மை வீரர் உள்ளப் புரட்சிகளால்தான் நீங்கமுடியும். அவர்கள் தங்கள் உள் அவாக்களை மாற்றியமைத்து, அதனால் முதலில் மனித உள்ளங்களையும் பின் அமைப்புக்களையும் மாற்றியமைப்பார்.

புத்தர்பிரான், இயேசு

புத்தர்பிரானும் இயேசுவும் தெய்வப்பிறவிகள் என்று அவரவர் வகுத்த சமயத்தவர்களால்தான் குறிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதச் சமுதாயத்தில் செய்த மாறுபாடுகளை நோக்க, அவர்கள் மனிதச் சமுதாயத்தில் செய்த மாறுபாடுகளை நோக்க, அவர்கள் அனைவருமே தெய்விக சக்தி வாய்ந்தவர் என்பதை வரலாறுணர்ந்த யாவரும் ஒத்துக்கொள்வர். அந்தத் தெய்விக சக்தி யாது? வாய்மையே. இது பொதுநிலை வாய்மையல்ல; அது கடந்த உயர்வாய்மை ஆகும்.

தவறு என்று சமூகம் கூறுவதைத் தவறு என்று கூறுபவர் பலர். அதை செய்யாது இருப்பவர் ஒரு சிலர். இவர்களை நாம் நல்லவர்கள் என்று போற்றுகிறோம். தாம் தவறு என்று நினைத்ததைப் பிறர் சரி என்று ஏற்றாலும், பிறர் நல்லது என்று போற்றினாலும், தவறு என்று நினைவு, சொல், செயல், ஆகிய மூன்றாலும் துறப்பவர் நல்லவர் மட்டுமல்ல, வீரரும் கூட இத்தகையவர்களையே நாம் பெரியார் என்றும் தெய்வத் தன்மையுடையவர் என்றும் பாராட்டுகிறோம். இத்தகையோர் வழி நாம் நிற்பதானால், அமைப்பில் தவறு என்று எந்தக் கூற்றினைக் கண்டாலும், உடனடியாக அதுவகையில் அமைப்புடன் ஒத்துழையாதிருக்க வேண்டும். வாய்மையுடன் கூடிய ஒத்துழையாமையே அமைப்பைக் கட்டாயம் மாற்றியமைப்பதற் கான முதற்செயலாய் முடியும்.

முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் சமூக அமைப்பை எதிர்க்கும் போது சொல்லால் எதிர்த்துச் செயலால் ஆதரவு தந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் பொய்மை மட்டுமன்று, கோழைமையும் ஆகும். அமைப்பினால் ஏற்படும் தீங்கையே அவர்கய் எதிர்க்கிறார்கள். தீங்கிற்கு ஆளானவர் களையே திரட்டப் பார்க்கிறார்கள். இது அமைப்பை மாற்றியமைக்காது. அமைப்பில் இன்று ஆதிக்கம் வகிப்பவர்களை மாற்றிப் பிறரை உயர்த்தலோ, இன்று ஆதிக்கம் வகிப்பவர்கள் வலுவைக் குறைத்து பிறரை அவர்களுடன் பங்கு கொள்ள வைக்கவோதான் அது பயன்படக் கூடும். இம் மாறுதல் முதலாளித்துவ எதிர்ப்பில் லாமலே முதலாளிகளின் போட்டி யினால் நடைபெறக் கூடியது ஆகும். அமைப்பு இத்தகைய மாறுதல்களால் ஒரு சிறிது தளர்வுபெறக்கூட முடியாது.

வாய்மையுடைய ஒரு தனிமனிதன் உளம், சொல் செயல் மூன்றும் ஒத்த வாழ்வினால் எந்த அமைப்பும் ஒரு சிறிதேனும் மேம்படாமலிராது. ஏனெனில் அது பிறர் உள்ளங்களை இயக்கும். ஆனால் இரு தனிமனிதர் இவ்வகையில் ஒன்றுபட்டால், அதன் விளைவு எத்தனையோ மடங்கு பெரிதாயிருக்கும். ஏனெனில் இருவர் ஒற்றுமையிலேயே புதிய அமைப்பு உருவாகிவிடும். இருவர் கடந்து மூவரானவுடன் புதிய அமைப்பு வேருன்றி விடும். பழைய அமைப்பு கலைவது அதன்பின் உறுதி.

அமைப்புக்கள் இங்ஙனம் மனிதர்கள் அமைத்தவை. அவற்றை மனிதர் கலைக்கவும் திரும்ப அமைக்கவும் கட்டாயம் முடியும். பெரும்பாலும் அமைப்புக்கள் இயற்கை அவாக்களினால் எழுந்தவை. செயற்கையாகத் திட்டமிட்டு ஒருவர் உண்மையில் எதிர்த்தாலும், அவ்வெதிர்ப்பில் வாய்மையும் உறுதியும் இருந்தால், இயற்கையமைப்பு மாறி அது புதிய அமைப்பின் வயமாகாதிராது. மனிதன் நினையாதமைத்த அமைப்பு நினைத்தமைத்த அமைப்புக்குக் கட்டாயம் வழிவிடும்.

உழைப்பு: கூலி: வாழ்க்கை நலம்

உயிர் இயற்கையின் மதலை. அது இயற்கையின் உள்ளார்ந்த இயல்பின் விளைவேயாகும். அவ் வியல்பில் நாம் இரண்டு உள்ளுயிர்க் கூறுகளைக் காணலாம். அவையே ஆற்றல், ஆக்கம் என்பன. வெளிப்பட ஆக்கம் புலப்படாதபோது நாம் ஆற்றலை அழிவு என்கிறோம். ஆனால் உண்மையில் அது புதிய ஆக்கமேயாகும். இயற்கையில் ஆற்றலும் ஆக்கமும் இல்லாத கணம் எதுவுமே கிடையாது. உயிர் இவற்றின் விளைவேயாகும்.

இயற்கையைப் போலவே வாழ்க்கையிலும் இரண்டு இன்றியமையா உள்ளுயிர்க்கூறுகள் உண்டு. ஒன்று உழைப்பு. மற்றொன்று பயன். இவையே வாழ்க்கையின் அடிப்படை நோக்கங்கள் என்னலாம். ஒவ்வொரு மனிதனும் உயிரினமும் உழைத்தாகவேண்டும். இது இயற்கையின் எழுதாக்கட்டளை. ஒவ்வொரு மனிதனும் உயிரினமும் தனக்கோ, தன் இனத்துக்கோ, பயனுடையவன் அல்லது பயனுடையதாயிருந்ததாக வேண்டும். இதுவும் இயற்கையினுடைய மற்றோர் எழுதாக்கட்டளை. இக்கட்ளைகளை எவரும் மீறி வாழமுடியாது. ஏனெனில் மீறுபவர் வாழ்வு வாழவாயிராது. அது முன்னைய வாழ்வின் மட்டத்திலிருந்து மாள்வின் பள்ளத்திற்குச் சரிந்தோடும் கிளர்ச்சியற்ற போக்கேயாகும்.

இயற்கையின் ஆற்றல் எல்லையற்றது. ஆனால், இந்த எல்லையற்ற ஆற்றலை நாம் அழிவாற்றல் என்றுதான் கூறுகிறோம். நம் கண்ணுக்கு இயற்கையின் எல்லா ஆற்றல்களுமே அவ்வாறே தோன்றுகின்றன. ஏனெனில் பயனுடைய ஆற்றலை இயற்கை வளர்க்கிறது. பயனற்ற ஆற்றலைப் புதிய ஆக்க ஆற்றலாக மாற்றுகிறது. இயற்கையின் வழிவந்த உயிரின வாழ்வில் நாம் அதனை நன்கு காணலாம். அவற்றில் பயன்படும் உறுப்புக் களும் உடற்பகுதிகளும் வளர்கின்றன. பயனற்றவை தேய்ந்து படுகின்றன. வேறு பயனுடைய பகுதிகளாக அவற்றின் ஆற்றல் மாறுகிறது.

இயற்கையின் பட்டறையில் பயனற்ற கருவிகள் கிடந்து துருப்பிடிப்பதுமில்லை. பயனுடையத்தக்கவை ஒரு கணமேனும் பயன்படாமல் கிடப்பதுமில்லை. பயனுடைய பொருள்கள் என்றும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். பயன் முடிவதானால், பொருளும் உடனே அழிக்கப்படும். அதாவது வேறு பொருளாக மாறுதலடையும். உழைப்புக்கென ஏற்பட்ட இயற்கையின் பட்டறையில் உழைப்பும் பயனும் அற்ற ஒரு பொருளோ, ஒருகணமோ இராது. இயற்கையின் சிக்கனம் இது.

திறமையும் வாய்ப்பும்

இயற்கையின் ஆக்க ஆற்றலே உயிராதலால், உயிர் வாழ்விலும் மக்கள் வாழ்விலும் இதே இயற்கைத் தத்துவம் நின்று நிலவுவதைக் காணலாம். திறமை எங்கு இருந்தாலும் அங்கே வாய்ப்பும் வளங்களும் கட்டாயம் இருக்கும். எங்கே ஆற்றல் இருக்கிறதோ அங்கே அது செயலாற்றுவதற்கான நெறிமுறை களும் கட்டாயம் இருந்து தீரும். எங்கே உயர் உள்ளக் கருத்துக்கள் நிலவுமோ அங்கே செயல் திறமும் செயல் துணையும் அருகே இராமலிராது.

கலப்பை அமைந்தபின் வயல் உண்டாதில்லை. கலப்பை கென வயல்தான் காத்துக்கிடக்கிறது. கப்பலுண்டானபின் கடல் உண்டாவதில்லை. கப்பலுக்காக அதுவே காத்திருக்கின்றது. துறைமுகத்துக்காக முன்கூட்டி அவை விளைந்து பெருக்க மடைகின்றன. கலப்பைக்கும் கப்பலுக்கும் துறை முயத்துக்கும் தாயக வாய்ப்புக்களான வயலும் கடலும் வாணிகமும் எப்படி பிறக்குமுன் ஒருங்கிருக்கின்றனவோ, அப்படித்தான் நிமித்த காரணமாகிய மனிதனும் அவன் முயற்சியும் திறனும் ஏற்படுமுன்பே, அவற்றை எதிர்நோக்கி அவற்றின் துணைக் காரணங்களும் முதற்காரணங்களுமாகிய வாய்ப்புவளங்கள் காத்துக்கிடக்கின்றன.

“என் திறமைக்குத் தக்க வாய்ப்புவளங்கள் சூழல்கள் இல்லாமல் தவிக்கிறேன்,” என்று குறைபடும் குமுறல் குரலை நாம் அடிக்கடி கேட்கிறோம். இதைப்போல பொருளற்ற குரல் வேறெந்தனையும் நாம் கேட்கமுடியாது. இந்தச் சாக்குபோக்கு ஒன்று, வீண் தற்பெருமைக்கு ஒரு மறைப்புத் திரையா யிருக்கவேண்டும். அல்லது சோம்பேறித்தனம், அசட்டை மனப்பான்மை, திறமையின்மை ஆகியவற்றின் சின்னமாயிருக்க வேண்டும். ஏனெனில் முயற்சி செய்யும் விருப்பமும் திறமையும் இருந்தால், முயற்சிக்கான வாய்ப்பு நலமும் சூழல் நலமும் கட்டாயம் அமையும்.

திறமைகள் பல உண்டு. பலவற்றை நாம் உயர்வாகக் கருதத்கூடும். ஆனால், உண்மையில் உயர்வு உடையதும் மதிப்பு மிக்கதும் இன்றியமையாததும் உழைப்புத் திறன் ஒன்றே. இத்திறம் இருக்குமிடத்தில்தான் மற்றத் திறங்கள் மதிப்டையும். இது இல்லாதபோது எந்தத் திறமையும் மதிப்புப் பெறமாட்டாது.

இவ் வுண்மையை நோய்வாய்ப்பட்ட சமயத்திலோ, உறுப்பு ஊறுபட்ட சமயத்திலோ எவரும் தெளிவாகக் காணலாம். இச் சமயங்களில் அவர்கள் ஊக்கமிக்க உழைப்பு எதுவும் செய்ய முடியாதபடி தடைப்பட்டிருக்கிறார்கள். உழைக்கும் ஆற்றல் பெறும்வரை அவர்கள் தங்களை உடல்நலமுடையவர் என்று கருதவும் மாட்டார்கள். இத்தறுவாயில் யாராவது சென்று உழைக்கும் ஊக்கம் தருகிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு எவ்வளவு கிளர்ச்சி ஏற்படும்? சொன்னவர்களுக்கு என்ன தர முன்வர மாட்டார்கள்? உழைப்பு ஊக்கம் அல்லது திறம்தான் உடல்நலம். அதுதான் உள்ளக் கிளர்ச்சி என்பதை அவர்கள் அப்போது நன்கு அறிந்துகொள்வர்.

செல்வந்திரட்டியவர்களின் எந்த அளவு செல்வமும் பதவி வகிப்பவர்களின் எந்த அளவு உயர்பதவியும் இந்த உழைப்புத் திறமைக்கு ஈடில்லை என்பது இங்ஙனம் சொல்லாமலே அமையும். ஏனென்றால் உழைப்புத்திறம் திறமைகளுக்கெல்லாம் அடிப்படையானது மட்டுமல்ல; அதுவே இன்பவாழ்வின் அடிப்படையான, உளநலத்தின் அடிப்படையான உடல்நலம் ஆகும்.

உழைப்பு உழைப்புத்திறனை அளிக்கிறது. உழைப்புத்திறன் உடல் நலமாய், உள நலம், மூளை நலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றது. நல்லுழைப்பால் இவ்வாற்றல்கள் அனைத்தும் சேமிக்கப்படுகின்றன. இச்சேமச் செல்வமுடையவன் உடலிலேயே உழைப்பூக்கம் செறிவுற்றுத் துடிக்கிறது. தசைகளில் ஆற்றல் பொங்கி மிளிர்கிறது. நரம்புகளில் உணர்ச்சி அதிர்கின்றது. மூளையில் அறிவு ஒளி காலுகின்றது. செலவு செய்யக் காத்துத் துடிக்கும் திரண்ட செல்வமுடைய செல்வனாக உழைப்புச் செல்வன் விளங்குகிறான்.

ஆர்வ உழைப்பும் அடிமை உழைப்பும்

உழைப்பு இருவகை. அவை ஆர்வ உழைப்பு, அடிமை உழைப்பு என்பவை. ஊதியத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் உழைப்பார்வத்துடன் உழைத்து, உழைப்புரிமையால் தானே வரும் ஊதியத்தைப் பெற்றுப் பயன் படுத்துவது ஆர்வ உழைப்பு. ஊதிய நோக்கம் ஒன்றே கொண்டு, வேண்டா வெறுப்பாக, உழைப்பது அடிமை உழைப்பு. இவ்வகையினர் கூடியமட்டும் குறைந்த உழைப்பு, கூடியமட்டும் மிகுதி ஊதியம் என்ற குறிக்கோளுடையவர். அவர்கள் வறுமை காரணமாகவே உழைப்பை மேற்கொள்பவர். அவர்கள் உள்ளம் முதலாளிகள் உள்ளத்திலிருந்து மிகுதி வேறுபட்டதன்று. ஏனெனில் அவர்களும் உழைப்பிலா ஊதியத்திலேயே, அதாவது ஆதாயத்திலேயே கருத்துடையவர். இவர்களே கையில் கொஞ்சம் பணம் ஏறியவுடன் முதலாளிகளாய், பிறர் உழைப்பால் வரும் ஊழியத்தைத் தான் உழையாது ஈட்டுபவர். முதலாளிகள் மீது இத்தகையோர் காய்ந்தால், அது முதலாளித்துவத்தின் மீதல்ல; அவர்களிடம் இருக்கும் பணத்தின் மீதேயாகும்.

ஆர்வ உழைப்பாளன் உழைக்கும்போது முணுமுணுப்ப தில்லை. ஊதியம் வாங்கும்போது பல்லிளிப்பதும் இல்லை. அவன் கூடியமட்டும் குறைந்த உழைப்புச் செய்ய விரும்புவது மில்லை. கூடிய மட்டும் மிகுதி ஊதியம் தேடுவதில்லை. உழையா ஊதியமாகிய ஆதாய வகையிலோ மற்றப் போலி வகை ஆதாயங்களாகிய கைக்கூலி, திருட்டு, கொள்ளை ஆகியவற்றிலோ அவன் மனம் நாடுவதுமில்லை. ஏனென்றால், அவன் விரும்புவது உழைப்பு மட்டுமே. காரணகாரியத் தொடர்பை அறிந்த அவன் உழைப்பின் பயனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உழைப்பு காரணம், ஊதியம் அதன் பயன். காரணத்தை இயக்கியப்பின் காரியததைத் தனியாக இயக்கக் கவலைப்பட வேண்டியதில்லை. அது தானாக இயங்கும். உழைத்தவன் வேண்டாமென்றால் கூட உழைப்பின் பயன் அவனை வந்து பதின்மடங்கு சாராமல் போவதில்லை. ஏனெனில் உண்மையான ஊதியம் அதை அவாவுபவனைவிட அதை உறுதியுடன் எதிர்பார்ப்பவனையே ஆர்வத்துடன் சென்றடையும்.

உழைப்பைப்போல அரிய செல்வம், ஆக்கவளமிக்க செல்வம் உலகில் வேறு எதுவுமில்லை. இதை அடிமை உழைப்பாளன் அறியமாட்டான். ஆர்வ உழைப்பாளனே அறிவான். உழைப்பின் மதிப்பாக அடிமை உழைப்பாளன் எதிர்பார்க்கும் ஊதியம் உண்மை ஊதியமன்று. அவன் எதிர்பார்க்கும் ஊதியத்தின் முழுப் பயனும் மதிப்புமேயாகும். இதில் ஒரு சிறு பகுதியைக் கூட அவன் பெறுவதில்லை. அவன் பெறும் ஊதியம் அவன் அடிமை நிலையை ஏற்ற அவன் இதில் கூடப் போராட வேண்டியவனாயிருக்கிறானே யன்றிப் பேரம்பேச முடியவில்லை. பேரம் செய்வதற்குரிய தன்னாட்சியும், தன் வலிமையும் அவனிடம் இல்லை. அதே சமயம் அடிமையைப்போல ஆண்டான் தயவைக்கூட எதிர்பாராமல், தன் இன்றியமையாத தேவையான குறைந்த தொகையையே அவன் ஊதியமாக ஏற்கிறான். இது உழைப்பின் பயன் அன்று. ஏனெனில் உழைப்பின் பயனாக வந்த ஊதியம் உழைப்பவனாகிய அவன் உழைப்புத்திறனைப் பெருக்க வேண்டும். அங்ஙனம் பெருக்கினால் தான் அது நல் ஊதியம் ஆகும்.

மேலும் உழைப்பை மதியாத அடிமை உழைப்பாளி, பெற்ற கூலியைக் கூடத் தன் உழைப்புத் திறனை அல்லது உடல்நலத்தைப் பேணும் முறையில் பயன்படுத்தத் தவறிவிடுகிறான். குடி, தகா இன்பம், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளைப் புறக்கணித் தொதுக்கிவிட்டுத் தற்காலிக இன்ப வாழ்வு, வீண்பகட்டாரவாரம் ஆகியவற்றில் அவன் அவ்வூதியத்தை வீணாக்குகிறான். ஆகவேதான் அடிமை உழைப்பாளி பெறும் ஊதியம் அவன் வாழ்வை வளப்படுத்த உதவாமல் அவனை மேலும் மேலும் அடிமையாக்க மட்டுமே பயன்படுகிறது.

அடிமை உழைப்பாளியின் வாழ்க்கைத் துன்பத்துக்கு வறுமைதான் காரணம் என்று பல பொருளியலறிஞர் சப்பைக் கட்டுக் கட்டுவர். வறுமை பொதுவாக எல்லாருடைய வாழ்க்கைத் துன்பத்துக்கும் காரணமாயிருக்கலாம். அடிமை உழைப்பாளிக்கு அதனால் தனிப்பட மிகுதியான துன்பம் ஏற்பட வழியில்லை. மேலும் அடிமை உழைப்பாளிக்குத் திடீரென்று ஒரு புதையல் கிடைத்ததாகவே வைத்துக்கொள்வோம். அதனால்கூட அவன் அடிப்படை வாழ்வில் என்ன மாறுதல் ஏற்படமுடியும்? உழையா ஊதியமே நாடிய அவர்கள் பிற அடிமை உழைப்பாளரைத் திரட்டி அழிவு முதலாளி அதாவது அடிமைத்தனம் வளர்க்கும் முதலாளியாக இயங்கவே அது பயன்படும். வறுமையிலிருந்து மீண்ட அடிமை உழைப்பாளி தன் உழையாச் செல்வத்தை அடிமைத்தனம் வளர்க்கவே பயன்படுத்துவான்.

உழைப்பின் உண்மைப் பயன்

உழைப்பின் உண்மைப்பயனை அறிந்த ஆர்வ உழைப்பாளி ஊதியத்துக்காகப் போராடுவதில்லை. அதுவகையில் கவலைப் படுவதுமில்லை. உழைப்புக்காக முதலாளி தரும் கூலி உழைப்பின் பயனுமல்ல, அதன் மதிப்புமல்ல என்பதையும் அவன் அறிவான். ஆகவே அவன் அந்தக் கூலிக்காக உழைக்கவே செல்லமாட்டான். வறுமை காரணமாக உழைக்க நேர்ந்தால் பெற்ற ஊதியத்தைத் தன் உழைப்பின் பயனான உண்மை ஊதியத்தின் ஒரு சிறு பங்காகக் கொண்டு அதைத் தன் உழைப்புத் திறனைப் பெருக்கும் வகையில் பயன்படுத்துவான். உழைப்புத்திறன் பெருகப்பெருக உழைப்பின் மதிப்பு தானே வளரும். அடிமை முதலாளியின் பிடியிலிருந்து அவன் விரையில் விடுபடுவது உறுதி.

அடிமை உழைப்பாளிகளும் அடிமை முதலாளிகளும் நிறைந்த இன்றைய உலகில் கூலியே உழைப்பின் பயனான உண்மை ஊதியம் என்ற தவறான கருத்துப் பரவியிருக்கிறது. இக் கருத்துப் பரவியிருக்கும்வரை முதலாளி ஆண்டாலும் ஒன்றுதான், தொழிலாளி ஆண்டாலும் ஒன்றுதான்! இருவருக்கும் இடையேயுள்ள தரவகுப்பு அல்லது போலி அறிவு வகுப்பு ஆண்டாலும் ஒன்றுதான்! ஆனால் உண்மை உழைப்பின் தன்மையை அறிந்தவுடனே, ஒருவர் இம் மூவகை அடிமைகளின் ஆட்சியிலிருந்தும் விடுபடுவது உண்மை. உண்மை உழைப்புப் பரவுந்தோறும் மூவகைப்பட்ட அடிமையாட்சிகளும் ஒழிந்து உழைப்பாட்சி ஏற்பட்டுவிடும்.

உழைப்பினால் ஏற்படும் பயன்களைத் தொகுத்துச் சொன்னால் உழைப்புவளம், பயனவளம் என்று இருவகைப்படுத்திக் கூறலாம். உழைப்புத் தரும் ஊதியம் மட்டுமன்றி உழைப்பும் உழைப்புத் திறனை மேன்மேலும் வளர்க்கிறது. அதன் பயனோ, உழைப்பவனுக்கு மட்டுமன்றி அவன் வாழும் சமூகத்துக்கும் வளர்ச்சி தந்து, அதன் மூலம் நாளடைவில் அவனையும் வளர்க்கிறது. இங்ஙனம் உழைப்பு இருவகை உயிராற்றல்களையும் இயக்கி அவற்றின் மூலம் வளம் பெருக்குகிறது.

ஊதியத்தை நாடுபவன் அடிக்கடி உழைப்பின் முழுப் பயனையும் அடையாது போகலாம். ஊதியத்தை நாடாதவன் அதை அடையாது. இருப்பதில்லை. உழைப்பின் விலை ஊதியம், ஊதியம் பெற்றதும் உழைப்பின் பயன் முடிவடைகிறது என்று ஊதியத்தை நாடுபவன் நினைத்து விடுகிறான். இதனால் அவன் ஊதியத்தை அதற்குரிய பயன் நோக்கிப் பயன்படுத்த முடிவதில்லை. உழைப்பின் பயன் ஊதியம் என்பது போல, ஊதியத்தின் பயன் உழைப்பு என்பதும் உண்மை. ஆகவே ஒன்றை ஒன்றாக மாற்றியதுடன் பண்டமாற்று நின்றுவிடுவதில்லை. உழைப்பதுடன் ஊதிய மாக்கியபின், ஊதியத்தை மீண்டும் உழைப்பாக்குவதல்லது வேறு செயலில்லை. சரக்குகள் கொடுத்துப் பணம் மீட்டுவர் அந்தப் பணத்தைப் பூட்டியே வைத்திருந்தால் பணம் மதிப்புப்பெறாது. அதைக் கொடுத்து வேறு பொருள் வாங்கவே அதைப் பயன்படுத்துவர். தேவைச்சரக்கும் பணமும் என்றும் தலைமாறிவருவதுபோல, உழைப்பும் ஊதியமும் மாறிமாறி வருபவை. பண்டமாற்றில் பண்டத்தின் பெருக்கமல்லாமல் செல்வம் இருக்கமுடியாது அல்லது உண்மை ஆதாயம் இருக்கமுடியாது.

ஊதிய நோக்கத்தின் சிறுமை

உழைப்பின் பயனுள்ள வளமும் எல்லையற்றது. அதை நாம் ஏழு கூறாக வகுக்கலாம். அவை பணம், சமூகப் பயன், தொழில்நேர்த்தி, ஆற்றல், தன்னாண்மை, புகழ், இன்பம் என்பன. இவற்றுள் பணம் உழைப்பின் மதிப்பாக வருவது. அடிமை உழைப்பு முறையில் இதன் ஒரு பகுதியே கூலிவடிவில் உழைப்பாளிக்குத் தரப்படுகிறது. மற்றப்பகுதி ஆதாயவடிவில் உழையாத முதலாளிக்கே சென்று விடுகிறது. ஆதாயத்தின் ஒரு சிறு பகுதியைக் கெஞ்சியோ மிஞ்சியோ மிகுதி கூலியாகப் பெறத்தான் அடிமைத் தொழிலாளி அடிக்கடி போராடுகிறான். ஆனால் அவன் போராட்டமே அவன் தன்மதிப்பைக் குலைக்கிறது. ஏனென்றால், அவன் எவ்வளவி போராடிப் பெற்றாலும், அவன் பெறப்போவது கூலி மட்டுமே. கூலி என்பது அவன் பிழைப்புக்குத் தேவையான் ஊதியம். அதைக் கொடுத்து அடிமை முதலாளி அவன் உழைப்பை அல்லது உழைப்பு நேரத்தை விலைக்கு வாங்குகிறான். கூலி என்பது அந்நேரத்துக் குரிய வாடகையும் அவன் பிழைப்புத் தரத்துக்குரிய மதிப்புமேயன்றி வேறல்ல. இந்த நிலையை ஏற்பதே தவறு. ஏற்றால், அதிலிருந்து தப்பித் தன்னாண்மை பெற முயல்வதுதான் தன்மதிப்பாகும். அதனையே போராடிடப பெருக்குவது என்பது அறியாச் சிறுமதியினர் செயலேயாகும். மிகுதி கூலிக்காகப் போராடுவதைவிட, கூலியை நன்கு பயன்படுத்தி உழைப்புத் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தினால், எந்தப் போராட்டமும் தேவையல்லாமலே கூலி உயரும். அத்துடன் இந்தப் போக்கு விரைவில் அடிமை முறையிலிருந்து அவனை உயர்த்தவும் தவறாது.

உழைப்பின் முழுமதிப்பு கூலி அல்லது பிழைப்பூதியமும் ஆதாயமும் சேர்ந்ததேயாகும். அடிமை உழைப்புமுறை உலகில் இயந்திரங்கள் தோன்றிய பின்னரே ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் தொழிலாளிதானே முதலாளியாகவும் இருந்தான். தொழிலின் பயனை அவன் கூலி என்றும் ஆதாயம் என்றும் பிரிப்பதில்லை. முதன்முதலில் வணிகன் அவன் ஊதியத்தில் ஒருபகுதியை ஆதாயமானப் பெற்றான். ஆனால், வணிகன் ஆதாயம் என்னும் உழைப்பைச் சுரண்டவில்லை. உழைப்பின் சமூகப் பயனையே சுரண்டிற்று. அத்துடன் சமூக வாய்ப்பு ஆதாயம் தருவதைப் போல, வாய்ப்புக்கேடு இழப்பும் உண்டுபண்ணிற்று. ஆயினும் மொத்தத்தில் உழைப்பின் மதிப்பை வாணிக ஆட்சி ஓரளவு குறைந்தது. இயந்திரம் வந்த பின் தொழில் ஆட்சி நிலைமையை இன்னும் சீர் கெடுத்தது. வாணிகத்திலாவது வணிகன் ஆதாயத்துடன் நட்டமும் அடைவான். ஆனால் இயந்திர முதலாளித்துவத்தில் வாணிகத்தை விட நட்டம் மிக அருமை. அத்துடன் அது உழைப்பின் ஒரு பெரும்பகுதிப் பயனையே ஆதாயமாகக் கொண்டது.

நல்லகாலமாக, உழைப்பின் பயனறிந்தவர்கள் இன்றும் அடிமை முதலாளித்துவத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய இன்றியமையாமை உண்மையில் கிடையாது. ஏனென்றால் உழைப்பின் பயன் அதன் பணமதிப்பு மட்டுமல்ல. அது சமூகத்துக்கும் தனிமனிதனுக்கும் பலவகை வளந்தருவது. உழைப்பினால் உழைப்பவன் உடல் வளர்ச்சி பெறுகிறது. அது பின்னும் உழைப்பாற்றலையும் உடல் நலனையும் உள நலனையும் வளர்க்கிறது. அத்துடன் உழைப்பின் பயனாக ஏற்படும் பொருள்கள் சமூகத்தை நேரடியாக வளர்த்து அதன் செல்வமாகிறது. அவன் வளர்க்கும் சமூகம் அவனை வளர்க்கவும் அவன் வாழ்வின் இன்பம் பெருக்கவும் பலவகையில் உதவுகிறது. உழைப்பவன் உழைப்பார்வ முடையவனாயிருந்தால், அவன் உழைப்பின் பயனால் அவனுக்குச் சமூகத்தின் தோழமை பெருகுகிறது.

உழைப்பின் பிற பயன்கள்

உழைப்பு உழைப்புத் திறனை வளர்ப்பது போல, சமூகப்பயன் சமூகப் பயனை மேன்மேலும் வளர்க்கிறது. இரண்டும் ஒன்றுபத்து நூறாகப் பெருகி உலகையே மாற்றியமைக் கின்றன. இயந்திரங்களே இதற்குச் சான்று. உழைப்பின் பயனாய் வந்த அறிவே இயந்திரங்களை ஆக்கிற்று. அது அடிமை முறையை வளர்த்தாலும், உழைப்பின் சமூகப்பயனைப் பேரளவு பெருக்கி யுள்ளது என்பதில் ஐயமில்லை.

உழைப்பின் மூன்றாவது பயன் தொழில் நேர்த்தி ஆகும். இது உழைப்பின் நேரடிப்பயனல்ல. படைப்புத் தொழிலில் படைக்கப்பட்ட பொருள் நீங்கலாக இடையே முயற்சியின்றித் தானே விளையும் கிளைப் பொருள் உண்டு. அது போன்றதே இது. ஆனால் நேரடிப்பயனல்ல ஆனாலும், இதன் மதிப்புச் சிறிதல்ல. ஏனென்றால் இது நேரடியாக உழைப்பவன் தன் மதிப்பை உயர்த்துகிறது. மனிதர் இளமையிலிருந்து பெறும் திறங்கள், நயங்கள் ஆகிய யாவும் இந்தத் தேர்ச்சியின் விளைவுகளே. கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தேர்ச்சியடையும் தோறும், கல்லாமலே பலவற்றை எளிதில் உணரத்தொடங்குகிறது. இயந்திரங்களின் நுண்கூறுகளைக் கண்டு தொழிலர்ற்றும் தொழிலாளி சில நாட்களில் தானும் இயந்திரத்தின் ஒரு கூறுபோல முயற்சியின்றி விரைந்து தொழிலாற்றுகிறான்

எழுத்தும் சொல்லும் கூட்டி வாசிப்பவர்களும், சிந்தித்துச் சொல்தேடி எழுதுபவர்களும் அத்துறைகளில் தேர்ச்சியடைந்த பின், கண்ணோட்டமாகவே வாசிக்கின்றனர்; கருத்தூன்றாமலே மொழியின் நுண்நயங்களை வழுவாது கையாளுகின்றனர். இத்தகு திறனால் கண்ணிழந்தவர் கண்ணுடையவரை விடத் திறம்படப் பணியாற்றுவதையும், கையிழந்தவர் கையுடையவரை விட விரைந்து செயலாற்றுவதையும் காண்கிறோம். இவ்வாறாகப் பெறும் தேர்ச்சியில், தேர்ச்சிக்கால ஆர்வமும் இன்பம் தரும். தேர்ச்சியோ இன்பமும் தன்நிறைவும் இளிக்கும் ஆற்றல் வழங்கும்.

தேர்ச்சி உழைப்பவன் மன் மதிப்பை உயத்த்துகிற தென்றால், அதனால் வரும் ஆற்றல் அவனை அவன் சூழலினின்றும் உயர்வுபடுத்தி தன்னாண்மையை வளர்க்கிறது. அடிமை உழைப்பாளியாக இருந்த ஒருவன் கூடத் தேர்ச்சி பெற்றுவிட்டால், இன்றியமையா உழைப்பாளியாகி அடிமை நிலை தவிர்கிறான். இன்றைய அடிமை முதலாளித்துவ முறையில்கூட, தேர்ச்சிபெற்ற தொழிலாளி தேர்ச்சி பெறாத் தொழிலாளரைவிட உயர்வாகவே கருதப் பெறுகிறான். அவன் சலுகைகளும் பல. தனித்துறைகளில் தேர்ச்சி மிகுதியானவர்கள் வல்லுநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்றியமையாமையும் அவர்கள் ஆற்றலும் அவர்களை முதலாளிகளைவிட மதிப்புடையவர்களாக்கி விடுவதைக் காண்கிறோம். நாட்டுக்கு நாடு நடக்கும் உடன்படிக்கைகளிலும் பேரங்களிலும் முதலாளிகளை நாட்டின் செல்வமாகக் கொண்டு எவரும் எந்த நாடும் அவர்களையோ அவர்கள் பணியையோ விரும்பி இரவல் கேட்பதில்லை. ஆனால் நுணுக்கத் துறை வல்லுநர்கள் இங்ஙனம் வல்லரசுகளால் விரும்பிக் கோரப் பெறுமளவு நாட்டின் செல்வமாகி விடுகின்றனர். தன்னாண்மை யுடன் உழைப்பைப் பயன்படுத்தினால், அவ்வுழைப்பு எந்த அளவு நாட்டின் உயர்செல்வம் ஆகிவிடலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

வல்லுநர் ஆவோர் உழைப்பவராகக் கருதப்படாமல், உழைப்பவர் தலைவராக, உழைப்பவர்களுக்கு உதவும் நண்பராக, உழைப்புலகத்தின் ஆசிரியராகச் சமூகத்தில் மதிக்கப் பெறுகிறார். அவர் அறிவு உழைப்பிலாப் போலி அறிஞர் அறிவிலும் பன்மடங்கு மதிப்புடையதாகின்றது. மனித சமூகத்தின் தலைவர்களிடையே அவர் சரிசமமாக நடத்தப்பட்டு ஒரு தலைவராகிறார். அவர் ஒத்துழைப்பும் அறிவுரையுமன்றிச் சமூகத்தில் எதுவும் நடப்பதில்லை. ஒரு தனித்துறையிலேயே உழைப்பின் அறிவு இவ்வளவு ஆற்றல் தருமானால், உழைப்பவர் ஆர்வ உழைப்பாளராகவும், ஆர்வ அறிஞராகவும் ஆய்விட்டால், அவர்கள் ஆற்றல் எந்த எல்லைக்கு வளரும் என்று கூறத் தேவையில்லை.

ஆர்வ உழைப்பின் தனி மதிப்பு

உழைப்பவர் பலர்; அவர்களுள் இத்தகைய ஆற்றல் படைத்தவர் ஒருசிலர் தானே என்று பலர் வினா எழுப்பலாம். ஆனால், இச் சிலரது உழைப்புக்கால வாழ்க்கையை உற்றுநோக்கினால், இச்சிலர்தாம் ஆர்வ உழைப்பளராயிருந்தவர் என்பது தெரியவரும். எல்லாரும் ஆர்வ உழைப்பாளரா யிருந்தாலும் இதே உயர்வு எல்லாருக்கும் கிடைக்காமலிராது. இதனால் உழைப்பு வகுப்புக்குச் சமூகத்தில் தலைமைப் பதவியின் இடமும், அதே சமயம் அச் சமுதாயத்துக்கு மனித இனத்தின் தலைமைப் பதவியும் உரியதாயிருக்கும். தவிர, நாடுகளில் ஒரு நாடு தலைமை வகிப்பதற்கும், நாட்டு வாழ்விலேயே ஒரு குறிப்பிட்ட காலம் புதுமலர்ச்சிக் காலமாய் அமைவதற்கும் இத்தகைய ஆர்வ உழைப்பின் பரப்பே காரணம்.

ஆற்றலினால் ஏற்படும் உழைப்பின் அடுத்த பயன் தன்னாண்மை ஆகும். வெளிப்பார்வைக்குச் செல்வர் அல்லது முதலாளிகளே சமூகத்தில் மிகவும் மதிப்புடையவர்களாயிருப்பது போலத் தோற்றக்கூடும். உண்மையில் அவர்களுக்குத் தன்னாண்மையோ உண்மை மதிப்போ இருப்பதில்லை. அவர்களுக்குத் தமக்கென தனிவலிமை சமூகத்தில் இருப்ப தில்லை. அதனாலேயே அவர்கள் எப்போதும் ஆட்சியாளர் தயவை எதிர்பார்த்து வாழவேண்டியவர்களாகின்றனர். அவர்களுக்குத் தரப்படும் மதிப்பும் ஆட்சியாளர்க்குத் தரப்படும் புறமதிப்புப் போன்றதே. ஏனெனில் ஆட்சியில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் ஆட்சியளரே மாறினாலும் ஆட்சியாளர் தயவை அவர்கள் எத்தகைய தயக்கமுமில்லாமல் நாடிநிற்பது காணலாம். தானே உழைத்து, உழைப்பாளிகளில் ஒருவனாகவும், அவர்கள் நண்பனாகவும் உயர்பவன் சமூகத்தில் பெறும் வலிமை இது போன்றதல்ல. அது தன்னாண்மையும் தோழமையும் சேர்ந்த வலிமை. அது சமூக மதிப்பை ஒட்டியா, ஆட்கியாளரை ஒட்டியதல்ல. அவர்கள் நாளடைவில் முதலாளிகளைப் போல ஆட்சியைக் சார்ந்து வாழவோ, ஆட்சி மாற்றத்துக்கு அஞ்சவோ வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் சமூகத்தை இயக்கி ஆட்சியையும் தன்வயப்படுத்த வல்லவராவர்.

தானே உழைத்துத் தேர்ச்சிபெற்று, தன் ஆற்றலும் தன்னாண்மையும் அடைந்த தொழிலாளிதான் தற்காலக் குடியாட்சி முறையில் அடிப்படை வலு ஆவான். தற்கால முதலாளித்துவ ஆட்சிமுறை பண்டைய உயர்குடி ஆட்சிமுறை களைப் போலன்றி, நடுத்தர வகுப்பின் ஆட்சிமுறையாக மாறிவருவதன் காரணம் இதுவே. உழைப்பின் தேர்ச்சியால் உயர்ந்தவன் வாழ்வு முற்கால உயர்குடியாளர் வாழ்வோ, இக்கால முதலாளிச் செல்வர் வாழ்வோபோல, சோம்பேறித் தேனீயின் வாழ்வாக இல்லை. தேனீச்சமூகத்தின் உழைப்பாளித் தேனீக்களில் ஒரு தேனீயாக, தொழிலாள ரினத்தில் ஒரு தொழிலாளனாக இருந்துகொண்டே அவன் அவர்கள்மீது செல்வாக்குப் பெற்று விடுகிறான். அது மட்டுமன்று, அவன் அவர்களைத் தற்கால வலிமையால் அடக்கி ஆளவில்லை. நிலையான அன்பாற்றலினால் இயக்குகிறான்.

உழைப்பால் உயர்ந்த உரவோர்

கண்ணில் நேர்மையின் ஒளி, குரலில் தகுதியின் தொனி ஆகிய இவை உழைப்பால் உயர்ந்த உரவோருக்கு மட்டுமே உரியன. அவன் எவரையும் அச்சுறுத்துவதுமில்லை. அவன் எவருக்கும் அஞ்சவேண்டுவதுமில்லை. அவன் யாருக்கும் நயவஞ்சகமோ, தீங்கோ செய்வதில்லை. யாரும் அவனுக்கு நயவஞ்சகமோ, தீங்கோ செய்யத் துணியவும் மாட்டார்கள். தன்னாண்மையில்லாத அடிமை உழைப்பாளி ஒருபுறம் வறுமை என்னும் சாட்டையால் தாக்குண்டு, இன்றியமையாத் தேவை களுக்காக வேண்டா வெறுப்பாக உழைக்கிறான். மற்றொருபுறம் உழையாத செல்வத்தை வைத்துக்கொண்டு உழைப்பவர்களின் அடிமை உழைப்பைச் செல்வமாகப் பெருக்கும் முதலாளி பிற முதலாளிகளின் போட்டிக்கும், பொருளியல் நெருக்கடி, போர் நிலவரம், வாணிகக்கள வாய்ப்பு, வாய்ப்புக்கேடு, திருட்டு கொள்ளை ஆகிய பலவற்றைக் கவலையுடன் வாழ்வில் போராடுகிறான். ஆர்வ உழைப்பின் பயன் நுகர்பவன் துன்பம், போலி இன்பம் என்னும் இவ்விருகோடிகளுக்கிடையே உண்மையான வாழ்வின் ஒய்யார இன்ப நிலையைக் தனதாகக் கொண்டு வாழ்கிறான்.

ஆற்றல், தன்னாண்மை ஆகியவற்றிலும் பெறற்கரிய உயர் மணிமகுடம் புகழ். இது உழைப்பவராயிருந்தது, உழைப்பவருக்கு உழைத்து அவர்களை உயர்த்தும் உயர்வுடையோருக்கல்லாமல் வேறூ எவருக்கும் கிட்டுவதில்லை. உலகத்தை வென்ற பேரரசர் புகழ் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்புகழ் அரசரை மட்டுமே இயக்கும். போர்வீரன் புகழ் போரால் நலமடைபவரளவில், அந்நலம் தேவைப்படும் காலத்தில் மட்டுமே நிலவும். மேலும் போர்வீரடன புகழில் பெரும்பகுதி அவனை அடக்கியாள்பவர் புகழாகவே அமையும். செல்வன் புகழ் அச்செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் எல்லைக்கு வெளியே பரவாது. அவன் பெருங்கொடையாளனா யிருந்தால் கூட, அந்தப்புகழ், செய்த நலங்களுக்கு நன்றி என்ற அளவிலன்றி அகந்திறந்து மலர்ந்த அன்புப்புகழாயிராது. தானே ஆர்வமுடன் உழைத்தவன் புகழ் தன்னலப் பற்றற்றது. அவன் அப்புகழ் சார்ந்து வாழவேண்டியவனல்லன். அது அச்சம் காரணமானதன்று. அவன் தகுதி பாராட்டி அவன்மீது அன்பு பொழியும் புகழாய் அது மிளிரும்.

அன்புச் செல்வம்

செல்வமும் பதவியும் புகழும் யாவும் நுகர்பவர் வாழ்க்கையில் அன்புக்கு ஈடாகமாட்டா. ஏனெனில் இத்தனையும் பெற்றவர் குடும்ப வாழ்வில் அன்புக்கு இலக்காகாவிட்டால், அவர்கள்மீது யாரும் இரக்கங்கொள்ளவே செய்வர். அத்துடன் செல்வமும் புகழும் பதவியும் அற்றவர்க்குக் குடும்பவாழ்வில் அன்பு கிடைத்தால், அந்த அன்புகிடைத்தால், அந்த அன்பு அக் குறைபாடுகளை நியைலுப்படுத்திவிடுவதைக் காண்கிறோம். தீயவர் என்று கருதப்படும் பலர் தம் குடும்பத்தவர் அல்லது ஒருசில நெருங்கிய தோழர் அன்பை நம்பித் தான் உலகத்தின் இகழையும் தண்டனைகளையும் இடையூறுகளையும் ஏற்கத் துணிகின்றனர் என்று காணலாம். தன்னலமற்றுத் தன்னுட னொத்த தொழிலாளருக்குத் தோழமைப் பதத்துடன் உழைப்பவனுக்கு, அவன் சமுதாயம், அவன் இனம் யாவுமே அவன் குடும்பம் போலாகிவிடுகிறது. அவன் புகழ் அப் பெருங் குடும்பம் அவன்மீது பொழியும் எல்லையற்ற அன்பு ஆகும். இதனைப் பெற்றவர் பெறாத பொருள் ஒன்று உண்டு என்று கூறமுடியுமா? அவர்கள் செல்வத்துக்குரிய - உண்மைச் செல்வத்தைப் படைக்கிற - உழைப்பாளி மக்களையே தம் செல்வமாகக் கொண்டுள்ள தனிப் பெருஞ் செல்வர்கள் ஆவர்.

மேற்கூறிய எல்லாப் பயன்களும் சேர்ந்ததே நிறை இன்பம். உடலுழைப்பில் ஆர்வங்காட்டிய எவரும் படிப்படியாக எல்லா நலன்களும் பெற்று இந்நிறை இன்பத்துக்கு உரியவராகாதிருக்க முடியாது.

தெளிவான மனச்சான்று, உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு ஆளாகாத அமைதியான உள்ளம், தன் திறமைகளை முழுவதும் ஈடுபடுத்தி மனித இன முன்னேற்றத்துக்கு உழைத்ததனாலேற்படும் மனநிறைவு. உழைத்துப் பயன் பெற்று மேலும் உழைக்க முனைந்து நிற்கும் தசையுடலும் உள்ளுடலாகிய மூளையும் நரம்பு மண்டலமும் ஆகிய இத்தனையும் பொருந்திய வாழ்க்கைநலம் ஆகிய இவை அவர்கள் குறைவிலா நிறை இன்பக் கோட்டையாய் அமையும்.

இவ் வெழுவகை நலங்களும் நிறைவேறுவதற்குரிய ஒரே வாயில் உழைப்புத்தான். ஆனால், உழைப்பில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே இவ்வாயில் வழியாக முன்னேற முடியும். பிழைப்பூதியத்துக்காக உழைத்து. இன்பத்துக்கு உழைக்காமல், இன்பத்துக்கு அலைந்து குறுக்குவழி தேடுபவர்களுக்கு இவ்வாயில் தென்படுவதே அரிது. தவிர, உழைப்பின் பயனாக வரும் ஊதியத்தின் அளவைப் பெரிதாகக் கருதி அதைப் பெருக்க மட்டுமே பாடுபடுபவர் ஊதியத்தை வேண்டுமானால் வருந்திப் பெறலாம். உழைப்பின் உண்மைப் பலனைப் பெறமுடியாது. அதைப் பெறுவதற்கு வழி ஒன்றே. ஊதியம் எவ்வளவு குறைவானாலும், அதனை உழைப்புத்திறனைப் பெருக்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உழைப்பின் ஆற்றலை வளர்க்கும் வகையிலும் உண்மைப் பயனாகிய ஆற்றல் கைவரப் பெறும். இவ்வாற்றலே இன்பங்கள் எல்லாவற்றிலும் அடிப்படையாதலால், இதனைப்பெறாத இன்ப நாட்டம் போலி இன்ப நாட்டமாகவே அமையும்.

உழைப்பினாற் பெற்ற பணம் உழைப்பைப் பெருக்கவதற்கே அதாவது ஆற்றல் பெறுவதற்கே பயன்படுத்தப் பெறவேண்டும். ஏனெனில் ஆற்றல் பெற்றவர்க்கு இன்பமும் உழைப்பைப் பெருக்கவல்லது. அதே சமயம் ஆற்றல் அற்றவர் இன்பங்கள் நீர்மேல் எழுதிய சித்திரம் போன்றது. ஆற்றல் பெற்றவர் இன்பமே சுவர்மேல் எழுதிய சித்திரமாய் அமையும்.

வரலாறு காட்டும் சான்று

உழைப்பு உயிர்த்தன்மையுடையது. சோம்பல் சாவின் தன்மையுடையது. உழைப்பவர் ஓய்வு அயர்ச்சி அகற்றும் துயில் போன்றது. உழைப்பாளி இயற்கையினிடம் எதை அளிக்கிறானோ, அதை அல்லது அதனை ஒத்த தன்மையையே அவன் இயற்கையினிடமிருந்து மீண்டும் பெறுகிறான். எனவே சோம்பி வாழ்நாள் கழிப்பவன் வாழ்வின் அழிவையே பரிசாகப் பெறுவான். உழைப்பை அளிப்பவன் வாழ்வின் பயனைப் பரிசாகப் பெறுவான். இது இயற்கையின் ஒழுங்கமைதி.

இதைக் கடந்துசெல்லக் குறுக்குவழியோ புழைக்கடை வழியோ எதுவும் கிடையாது. உழைப்பு என்னும் அரசபாட்டை வழிதான் சென்றாக வேண்டும். தான் உழைப்பதற்கு மாறாகப் பிறர் உழைப்பைச் சுரண்டுபவன், பிறர் வாழ்வை குறைக்க எண்ணலாம். ஆனால், இயற்கை அவனையும் அவன் இனத்தையுமே வேரோடழிக்கிறது. உலகில் முதல்முதல் அடிமை களை வைத்து வாழ்வு பெருக்கிய நடு உலக நாகரிகங்களே இவ்வகையில் வரலாறு காட்டும் சான்றுகளாகும். நாகரிகப் படியில் பலவகையிலும் முந்திக் கொண்டு வளர்ந்த நாடுகள் அவை. ஆனால், அடிமை உழைப்பைப் பயன்படுத்திய காரணத்தினால், அவை வளர்ச்சி தொடராது அழிந்துபட்டன. அவர்கள் பெருமை வரலாற்றில் புதையுண்ட பெருமை ஆகிவிட்டது.

இயற்கையின் திட்டத்திலும் சரி, மனித சமுதாயத்திலும் சரி, அவரவர் கைமுயற்சியினாலேயே அவரவர் வாழ்வும் தாழ்வும் அமைந்துகிடக்கிறது. முயற்சி, முயற்சியின்மை என்ற இரண்டு வேறுபாடு தவிர, செல்வம், வறுமை என்ற பிற வேறுபாடு எதுவும் உண்மையில் கிடையாது.

இதுபோலவே முயற்சி, முயற்சியுன்மை என்ற வேறுபாடுகள் தவிர வேறு ஏமாறுதல், ஏமாற்றுதல் என்ற எதுவும் இருக்கமுடியாது. ஏமாறுபவன், ஏமாற்றுபவன் என்று கூறப்படும் இருவரும் உண்மையில் தம்மைதாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். உழைப்பவன் உழைப்பின் பயனை உழையாதவன் சுரண்ட எண்ணலாம். சுரண்டியதாகக் கருதிக் கொள்ளலாம். ஆனால், உண்மையுல் உழைப்பின் பயனை எவரும் சுரண்ட முடியாது. உழைப்பில் ஆர்வமுடையவன் உன்ன ஊதியம் தரப்பட்டாலும் அல்லது தரப்படாவிட்டாலும் கூட உழைப்பின் பயனைப் பெறாது போகமுடியாது. இது இயற்கையின் கட்டமைதி. இது எக்காலமும் மாறாதது.

இயந்திரத் தொழிலை எதிர்த்த கைத்திறத் தொழில்கள் அழிந்ததன் காரணம் இயந்திரத் தொழிலின் போட்டியன்று. உழைப்பவன் ஊதியத்தை அளவாக வைத்து உழைத்ததேயாகும். கைத்திறத் தொழிலாளர்களால் தங்கள் செய்பொருள்களை விற்கமுடியாது போயிருக்கலாம். அப்போது கூடக் குறைந்த அளவு அதைத் தங்களுக்குள்ளாவது பரிமாறிக் கொண்டால், இயந்திரத் தொழில் வளர்ச்சி அவர்களை ஒன்றும் செய்திருக்க மாட்டாது. இயந்தில நாகரிக வெற்றிக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். இயந்திர நாகரிகம் வருமுன்பே, இயந்திர நாகரிக மனப்பான்மை, ஊதிய நாட்டம், உலகில் பரவிவிட்டது.

அகப் பண்புகள்

“மேலே காட்டிய தத்துவங்களை ™ஓரிருவர் ஏற்கலாம். ஒருசிலர் ஏற்கலாம். அதற்கேற்ற மட்டமான வாய்ப்பு வளமுடையவர்களுக்கு அது சரி. ஆனால் இன்றைய உலகத் தொழிலாளர்களுக்கு, நூறாயிரம் பத்து நூறாயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்களுக்கு, அவர்களினும் மிகப்பலரான பொதுமக்களுக்கு இவை எப்படி ஏற்புடையவையாகும்.?” என்று சில ஒப்பியல் நெறிவாணர்கள் வினா எழுப்புவது உறுதி.

இந்த தத்துவங்களை நாம் வாய்ப்பு வளங்களுடைய ஓரிருவருக்கோ, சிலருக்கோ கூறவில்லை. எல்லாருக்குமே கூறுகிறோம். உண்மையில் வாய்ப்பு வளமுடையவர்கள் சிலர் என்பதையே நாம் ஒத்துக்கொள்ள முடியாது. எவருக்கும் அப்படி தனிப்பட்ட முறையில் வாய்ப்பு வளங்கள் கிடையாது. வாய்ப்பு வளங்கள் எவரிடமும் நிலையாக இருப்பவையும் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாதவர்களுக்கு அவை பயன்படவும் மாட்டா. மேலும் வாய்ப்பு வளங்களை நம்பி ஒருவர் மேம்படுவதும் நலிவதும் அரிது. பதவிகளை நாம் வாய்ப்பு வளங்களில் மிகச் சிறந்தனவென்று கருதுகிறோம். இன்று பதவியிலிருப்பவர்கள் நேற்று இருந்ததில்லை. நேற்று இருந்தவர்களோ, அவர்கள் மரபினரோகூட இன்று இல்லை. ஆகவே, வாய்ப்புவளங்கள் வருவதற்கும் போவதற்கும் நாம் வேறு வாய்ப்புவளங்களைக் காரணம் காட்ட வேண்டிவரும். உண்மை என்னவெனில், வாய்ப்புவளங்களை ஆக்குவதும் பயன்படுத்து வதும் வீணாக்கிக் கழிப்பதும் அகப் பண்புகளே.

வாய்ப்புவளங்கள் தாம் அகப்பண்புகளால் ஆவன. அகப்பண்புகள் வாய்ப்புவளங்களால் ஆவதில்லை. உனவே வாய்ப்பு வளமுடையவராகக் கொள்ளப்படும் சிலர்மட்டுமன்றி, அனைவரும் உழைப்பின் மூலம் உயர்வும் பயனிறைவும் பெறலாம். அதற்குத் தடையாயிருப்பது வாய்ப்பு வளமல்ல, ஊதிய நோக்கமே. ஊதியநோக்கம் அகன்று உழைப்பார்வம் ஏற்பட்டால், உழைப்பின் பயனான எல்லா நலங்களும் தாமாக வந்தெய்துவது உறுதி.

உழைப்பு, ஊதியம், உடல்நலம் ஆகிய மூன்றும் தனிமனிதன் வாழ்விலும் சரி, இனவாழ்விலும் சரி, மூன்று வளர்ச்சிப்படிகள் ஆகும். இவற்றுள் பண ஊதியத்தை மட்டுமே ஊதியமாகக் கொண்டும், அதிலும் பிழைப்பூதியத்தையே ஊதியமாகக் கொண்டும் உழைப்பைக் கணிப்பது தான் தற்காலத் தீங்குகள் அனைத்திற்கும் மூலக்காரணமாகும். வருங்கால அரசியல், பொருளியல் திட்டங்கள் ஊதியத்தை முழுநிறைவடிவில் கண்டு அதன்மீது கட்டமைப்புச் செய்யவேண்டும். அப்போதுதான் உயிரற்ற பொருளியல் வீக்கமட்டும் ஏற்பட்டு, வாழ்வின் உயர்மெய்மைகள் எல்லாம் கெடுகின்ற தற்போதைய நிலைக்கு ஒரு முடிவு உண்டாகும். எந்த நாடு இந்த ஆன்மிக உண்மையை மதித்துத் தொழிலாளர் வாழ்வில் திட்டமிடுமோ, அந்த நாடு உலகுக்கு ஒரு புத்தம் புது வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் நாட்டுக் கல்விமுறை மாறியமைவது மிகமிக அவசியம் ஆகும்.

“தகுதியின் மீதே வெற்றி”

“இயற்கையின் அமைதி வேறு, தெய்விக அமைதி வேறு; புறம் வேறு, அகம் வேறு” என்று அணிமைவரை பலரால் கருதப்பட்டு வந்திருக்கிறது. இன்னும் இவ்வாறு கருதுபவர் பலர். ஆனால் இவ்விருவேறு வகைப் பிரிவுகளும் இயற்கையின் மெய்மைக்கு மாறுபட்டது. தெய்வக் கோட்பாட்டுக்கும் எதிரானது. இயற்கையின் அமைதி, தெய்விக அமைதி ஆகிய இரண்டுமே, வேறு வேறு கோணங்கள் என்பதே உண்மை. இரு கோணங்களிலும் ஏற்படும் காட்சி வேறாயிருக்கலாம். ஆனால், அது காட்சியின் முரண்பாடாயிருக்கக் கூடுமேயன்றி, பொருண்மையின் முரண்பாடாயிருக்க முடியாது.

தெய்விக அமைதி அகச்சார்பானது. மொழியின் கண்காணா ஓசையுருவம் போன்றது. இயற்கையமைதியோ புறச்சார்பானது; அதன் கண்கண்ட எழுத்துருவம் போன்றது. இரண்டிற்கும் தோற்றமாறுபாடு உண்டு. தெய்விக அமைதிக்கும் இயற்கையமைதிக்கும் உரிய தொடர்பு இதுவே. தெய்விக அமைதியின் எளிய கண்கண்ட புறவடிவமே இயற்கை அமைதி.

இயற்கையைக் காண்பவர் காட்சி தவறக்கூடும். ஆனால், தவறுமிடத்தில் அத்தவற்றை அக்காட்சியே திருத்தவல்லது. இந்த வழியில்தான் நாம் இயற்கையின் மறை உண்மைகளைத் தேர்ந்தறியக்கூடும். அதுமட்டுமன்று. இயற்கையின் அகமெய்மை யாகிய தெய்விக உண்மைகளைக் காண நமக்கிருக்கும் ஒரே வழி இயற்கைதான். பழங்காலடக சதய வாதிகள் இயற்கை கடந்த ஒரு தெய்விக அமைதியைக் காண அவாவினர். ஏனெனில், அவர்கள் இயற்கையைத் தெய்வத்துக்கு மாறானது என்று கருதினர். இப்போது நாம் வரவர இயற்கையே தெய்வத்தின் புற அமைதி என்பதை உணர்ந்து வருகிறோம். புறவடிவின் காட்சியில் நாம் தவறுகள் பலவற்றைக் கடந்து செல்ல வேண்டி வரலாம். ஆனால், இயற்கையின் வாய்மை கடவாமல் பொறுமையுடன் செல்வது ஒன்றே இயற்கையில் உள்ளார்ந்து நிலவும் தெய்விக உண்மை களைக் காண வழி ஆகும்.

தெய்விக அமைதியின் கண்கூடான, செயல்திறம்பட்ட உருவமே இயற்கை. கண்காணா மெய்மையின் வரிவடிவம் அது. அதன்வழியே மெய்மையைக் காணப் பாலைவனங்களில், தடம் தெரியா நீள்வழிகளிலெல்லாம் நாம் அலைந்து தேடுகிறோம். ஆனால் தேடுகின்ற நம் கண்களின் முன்னேதான் தேடுகின்ற போதெல்லாம் அது ஒளிவீசி நிற்கின்றது. அரும்பொருள் என்று நினைத்து நாம் அதைத் தேடும்போதெல்லாம் அது எளிய பொருளாகவே அருகில் இருக்கின்றது. அரும்பொருளென்று நினைத்துத் தேடி அலுத்து மீண்டபின்தான் அது எளிய பொருளென்ற மெய்யறிவு நம்மிடம் ஏற்படமுடிகிறது. தேடும்போது மூடிக்கொண்டிருந்த நம்ம கண்கள் திறத்கின்றன. இயற்கை கடவுளை மறைக்கும் திரையல்ல, கடவுளமைதிக்கு முரண்பட்டதல்ல; கடவுளைக் கட்புலப் படக் காட்டும் ஓர் உருவடிவே அது என்று நாம் உணர்கிறோம்.

தெய்விக அமைதி இயற்கை கடந்தது என்று எண்ணி அதை அகத்தே கற்பனைக் காட்டில் தேடும்போதெல்லலாம், நாம் திரையிட்ட கண்களுடன் ஆடி அலைந்தோம். அறியாமை, தற்செருக்கு ஆகிய அத்திரைகள் நீங்கியபின், இயற்கையே கடவுளைக் காட்டும் கண்ணாடி என்பதறிந்தோம். அழியும் பொருளென நாம் நினைத்தவற்றில் நாம் இப்போது அழியாத் தன்மையைக் காண்கிறோம். புறம் என்று நாம் நினைத்தன வெல்லாம் அகத்தின் மறுப்புறம் என்று உணர்கிறோம்.

இயற்கை ஒன்றே

இயல் நூலாராய்ச்சியாளர் ஓரியற்கை மெய்மையைக் கண்டுணரும் போதெல்லாம், ஒரு தெய்விக உண்மையும் அதன்மூலமாகவே வெளியாகின்றது. இயல்நூல் துறையிலேயே ஒரு சிறு துறைக்குரிய உண்மையைக் காண்பவன் அது இயல்நூல் முழுமைக்குரியது என்று எப்போதும் எண்ணுவதில்லை. ஆயினும் இயற்கை ஒன்றே; அதன் அடிப்படை இயல்பும் ஒன்றே. நாளடைவில் ஒரு துறையின் உண்மை மற்றக் துறைகளிலும் தொடர்புடையதாயிலங்குவதைக் காண்கிறோம். எடுத்துக் காட்டாக இயங்கியல் நூலின் அணுத் தத்துவம் இயைபுநூலில் பொருள் இயைபுக்கான அணுத் தத்துவ ஆதாரத்தையும் விளக்கிற்று. சில சமயங்களில் இருவேறு துறைகளுக்குரிய ஒரு தத்துவம் அவ்விரு துறைகளையும் ஒரு துறையாக்குவதும் உண்டு. எனவே, ஒரே அமைதியின் இருகோணமான இயற்கையமைதி, தெய்விக அமைதி ஆகியவற்றில் இயற்கை அமைதியின்பால் கண்டுணரப்படும் ஒவ்வொரு உண்மையும் அதற்கியைந்த ஒரு தெய்விக அமைதி சார்ந்த மெய்மைக்கும் வழிகாட்டியாகவே யிருக்கும் இதில் ஐயமில்லை.

மேலும் இயற்கையமைதி சார்ந்த ஒவ்வோர் உண்மையும் அவ்இயற்கையமைதியின் ஒரு கூறே. ஒவ்வோர் உண்மையைக் கண்டுணருந்தோறும் அவ் வமைதி பற்றிய முழு அறிவில் ஒரு பகுதியையே நாம் அறிகிறோம். எனவே, ஒவ்வோர் உண்மையும் இயற்கையமைதி பற்றியதாயினும் தெய்விக அமைதி பற்றிய தாயினும் இரண்டு அமைதிகளையும் சார்ந்த ஒரே முழுநிறை அறிவை நோக்கி நம்மை இட்டுச் செல்லுவதேயாகும். இயற்கை உண்மை காண்பவன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவன் கண்ட உண்மை முழு இயற்கை அமைதி நோக்கியும், தெய்விக அமைதி நோக்கியும் நம்மை இட்டுச் செல்லத் தவறுவதில்லை.

தெய்விக அமைதி என்பது இயற்கையின் அகநிலை அமைதி அல்லது ஆன்மிக அமைதி. இயற்கை அமைதி முழுவதும் ஒரே ஆன்மிக அமைதியின் புறவடிவமேயாகும். இயற்கையின் ஒவ்வோர் உண்மையும் ஒவ்வோர் ஒழுங்கமைதி. ஒவ்வோர் ஆன்மிக தத்துவமும் ஓர் ஓசையானால், ஒவ்வோர் இயற்கை உண்மையும் அதன் வரிவடிவமான ஒவ்வோர் எழுத்து ஆகும். இரு அமைதிகளும் ஒரே நிறைவட்ட அமைதியின் இருபாதி களான இரு அரைமதி வட்டங்களே யாகும். இவற்றின் இந்த இன்றியமையா இணைத்தொடர்பை அறியாதவர்கள் ஆன்மிக அமைதி வேறு, இயற்கை அமைதி என்று கூறுவர். இன்னும் சிலர் ஆன்மிக அமைதிக்கு முரண்பட்டது இயற்கையமைதி என்றுகூட வாதிடுவதுண்டு. ஆனால் இரண்டும் முரண்பட்டவையுமல்ல. வேறுவேறானவையும் அல்ல. ஒன்று அகவடிவம் அல்லது நுண்வடிவம்; மற்றது புற வடிவம் அல்லது பருவடிவம் மட்டுமே.

சார்ல்ஸ் டார்வின்: ‘தகுதியின் மிகுதியே வெற்றி’

பல ஆண்டுகளுக்கு முன் சார்ல்ஸ் டார்வின் இயற்கையின் அணுக்க நுணுக்கங்களைத் துருவி ஆராய்ந்து ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்தைக் கண்டு தெளிவு படுத்தினார். இது இயற்கையின் அமைதியாயினும், இயற்கையிற் காணப்பட்ட தெய்விக மறைநிலை அமைதியேயாகும். ஆயினும் தெய்விக அமைதியின் பாதுகாவலர் நாங்களே என்று கூறிக் கொள்ளும் கமயத்துறைவாணர்கள் பெரும்பாலும் இதைத் தங்கள் வலுக்கொண்ட மட்டும் எதிர்த்தனர். இயற்கையின் மூலம் புத்தறிவு காணுமுன், இயற்கைத் துறையிலிருந்து அறியாமை சமயத்துறையிலும் ஆட்சி பெற்றிருந்தது. இயற்கைத் துறையின் அறியாமையை அத்துறை புத்தறிவு போக்கமுடிந்தது. ஆனால், சமயத்துறையில் அவ்வளவு எளிதாகப் புத்தறிவு எழ முடியவில்லை. ஏனென்றால் இயற்கை இறைவன் படைப்பு என்ற எளிய சிறிய உண்மையைக் சமயவாதிகள் ஊன்றிக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் இயற்கை தெய்விக அமைதியின் புறவடிவம் என்பதையும், இயற்கையமைதியின் அறிவுவாயிலாகவே தெய்விக அமைதித்துறையில் அறிவு வளர முடியும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பர்.

ஆன்மிக மெய்மை பொதிந்த டார்வினின் இயற்கை மெய்மைக்கு முதலில் எழுந்த எதிர்ப்பும் வெறுப்பும் சீற்றமும் இன்று சுழன்றடித்தார்த்து ஓய்வுற்றுவிட்டன. ஆனால் அதன் நிழல் சமயத்துறையாளர் பலரிடத்தில் மட்டுமன்றி இயற்கையமைதியில் கருத்தூன்றும் சிலரிடம்கூடப் புகுந்துள்ளது. அவர்கள் மூலமாக, ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற அமைதி ஒரு கொடுமை வாய்ந்த அமைதி என்ற கருத்துப் பரவியுள்ளது. உண்மையில் தொடக்கத்தில் இம் மெய்மையை எதிர்ப்பதற்குக் காரணமாயிருந்த தப்பெண்ணம் இதுவே. இங்ஙனம் எதிர்ப்பு ஓய்ந்தபின்னும், அதற்குக் காரணமான தப்பெண்ணம் இன்னும் மாறாமல் நீடித்து நிலவியே வருகிறது.

மேற்கூறிய தப்பெண்ணத்துக்கு டார்வின் கண்ட மெய்மையோ அதற்கு அவர் தந்த விளக்கமோ காரணமல்ல. தகுதி என்ற சொல்லைப் பற்றிப் பொதுவாக மக்களிடையே இருந்துவரும் தவறான எண்ணமே காரணம். மக்கள் தகுதி என்றாலே திறமை அல்லது ஆற்றல் என்று கருதி விடுகிறார்கள். இது அரை உண்மை மட்டுமே. திறமையும் ஆற்றலும் தகுதி ஆய்விட மாட்டா.மேலும் திறமையும் ஆற்றலும் தகுதியின் இன்றியமையாக் கூறுகளும் அல்ல. ஏனெனில் தகுதியற்ற வரிடையே திறமையும் ஆற்றலும் இருக்கக்கூடும். ‘தகுதி’ என்ற சொல்லை இங்ஙனம் ஆற்றல் என்று கொண்டவர்கள் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்று பொருன்படுத்திக் கொண்டனர்.

பல மக்கள் தங்கள் தப்பெண்ணத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. தகுதியை அவர்கள் தவறாக ஆற்றல் என்ற கருதிக்கொண்டது போலவே, ஆற்றலையும் தவறாகக் கொடுமை செய்யும் ஆற்றல், கொடுமை எனப் பொருள்படுத்திக் கொண்டனர். ஆற்றல் உடைய சிலர் கொடுமை செய்கின்றனர். அதைக் கண்டு ஆற்றலே கொடுமைதான் என்று மக்கள் எண்ணி விடுகின்றனர். இம் முறையில் தகுதி ஆற்றலாகவும் ஆற்றல் கொடுமையாகவும் கொள்ளப்பட்டதனால்தான், ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை அவர்கள் ஆராயாது மிக எளிதாகக் ‘கொடுமையின் மிகுதியே வெற்றி’ என்று கருத்தில் கொண்டனர்.

தெய்விக ஒழுங்கமைதி

‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவம் இயற்கையின் ஒழுங்கமைதி மட்டுமன்று; அதுவே தெய்வித ஒழுங்கமைதியும் ஆகும். ஆனாவ், கொடுமையின் மிகுதியே வெற்றி என்பதோ, ஆற்றலின் மிகுதியே வெற்றி என்பதோ அதற்கு வெவ்வேறு வகையில் முரணான, நேர் எதிர்மாறான கருத்து ஆகும். ஏனெனில் ஆற்றலில் மிக்கதே எப்போதும் தகுதியில் மிக்கதாயிருப்பதில்லை. கொடுமையில் மிக்கதோ ஒரு போதும் ஆற்றலில் மிக்கதாயிராது. இயற்கையின் வளர்ச்சிப்படிகளில் ஒவ்வொன்றும் இதைத் தெள்ளெனக் காட்டுகிறது. கொடும் பாறைகள் வெயிலும் மழையும் காற்றும் தடுக்க இயலாமல் அவற்றால் பொடிந்து தகர்ந்து போகின்றன. ஆனால் மெல்லிய மண்ணோ புல்பூண்டு செடி கொடி மரங்களை வளர்த்து அவற்றிலிருந்து தம்மைக் காத்துப் பேணிக்கொள்கின்றன. ஆற்றல்மிக்க விலங்கினங்களும் கொடுமைமிக்க விலங்குகளும் உயிரினத் தொடக்கக் காலங்களில் வாழ்ந்தன; இப்போது இறந்தொழிந்தன. இன்று தகுதியால் வென்று வாழ்பவை ஆற்றலில் குறைந்த, கொடுமையற்ற, ஆனால் அறிவுமிக்க உயிரினங்கள் மட்டுமே. மனித இனம் ஒருபுறம் இதற்குச் சான்று; வலிமையில் இன்னும் குறைந்த, பகைகளுக்கும் இன்னும் மிகுதியும் ஆளான பூச்சியினம் மற்றும் ஒரு சான்று.

தகுதிமிக்கவை வாழ்வில் வெற்றி பெறுகின்றன என்றால், ஆற்றல் மிக்கவை அல்லது அழிவாற்றல் அல்லது கொடுமை மிக்கவை வெற்றி பெறுகின்றன என்பது பொருளன்று. தகுதி மிக்கவை வெற்றி பெறுகின்றன என்றால் நல்லவை, சிறந்தவை வெற்றி பெறுகின்றன என்றே பொருள். ஒவ்வொன்றின் வெற்றியும் இனவெற்றிக்கு உதவுவது; ஒவ்வோரினத்தின் வெற்றியும் உலகவெற்றிக்கு உதவுவது. தகுதி என்பதற்கு டார்வின் தந்த, விளக்கிக்காட்டிய பொருள் இதுவே. உலகம் ஓயாது முன்னேறிக் செல்கிறது. உலக முன்னேற்றத்துக்கு உதவும் பண்பே தனியுயிர் முன்னேற்றத்தையும் உண்டுபண்ணுகிறது. உலக முன்னேற்றத்தில் பங்குகொண்டு முன்னேறும் உயிர் வாழ்கிறது; வளர்கிறது. பங்கு கொள்ளாத உயிர் தாழ்கிறது, அழிகிறது. தகுதியின் மிகுதியே வெற்றி என்பதன் பொருள் இதுவே.

தகுதிமிக்கவை வாழும் என்றால் நலஞ்சிறந்தன வாழும் என்றே பொருள் கொள்ளல்வேண்டும். இயற்கையில் உள்ளார்ந்த நிறைநலம் உண்டு. அதுவே முழுநிலை நேர்மை அல்லது தெய்விக அமைதி. இயற்கையின் கால இடச் சூழல்கள் தாண்டி இதனுடன் இயைந்து அதனைக் காண்பவர் உண்டு. இவர்களையே நாம் அருளாளர் என்கிறோம். ஆனால் இவ்வமைதி இயற்கையின் வாயிலாகவே செயலாற்றுகிறது. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வோர் இடச்சூழலிலும், ஒவ்வொரு காலச் சூழலிலும் இவ்வமைதி செயலாற்றுகிறது. அதன்மூலம் தகுதிமிக்கன ஆக்கம் பெறுகின்றன. தகுதியிற் குறைந்தவை பின்தங்கி அழிகின்றன. அதாவது நல்லன வாழ்கின்றன, வளர்கின்றன, வெல்கின்றன. அல்லன தாழ்கின்றன, தளர்கின்றன, நலிகின்றன.

சமயங்கள் நாடவேண்டி தெய்விக அமைதியின் நிறைவு இதுவே. நாகரிக முதல்வர் செயல்துறையில் முனைந்து தேடவேண்டிய நலமும் பண்பும் இதுவே. இயல்நூலறிஞரும் பிற நுணுக்கத் துறைவரும் கலைஞரும் கண்டு தெளிவுறுத்த வேண்டும் மெய்மையும் இதுவே.

ஆனால், நாகரிகத்துக்கு வழிகாட்டாத சமய முதல்வர்களும், மக்கள் வாழ்க்கை நலத்துக்கு வழிகாட்டாத நாகரிக முதல்வர்களும் மக்களிடையே நிலவும் ஆராயா மடமைகளைத் தாமும் ஏற்று வழிகாட்டுவதற்கு மாறாகத் தாமே மலைப்படைகின்றனர். இத்தகையோரே சமயத்தின் அடிப்படை மெய்மை, நாகரிகத்தின் அடிப்படைப் பண்பு ஆகிய இரண்மையும் உணராமல், தகுதி ஆற்றலாகவும், ஆற்றல் என்பதைக் கொடுமையாகவும் கருத்திற் கொண்டு தடமாறித் தடுமாறுகின்றனர்.

தகுதியின் மெய்ப்பண்பு

தகுதியில் ஆற்றல் உண்டு; ஆனால் அது ஆக்க ஆற்றல்; அழிவாற்றல் அல்ல. தகுதி சார்ந்த ஆற்றல் அழிக்க உதவாது. ஆகவே அதில் கொடுமையும் இருக்கமுடியாது. எனவே தகுதிக்கும் கொடுமைக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அவ்வாறாயினும் தகுதி என்றவுடனே ஆற்றலையும் கொடுமையையும் பலர் நினைப்பதற்குக் காரணம் என்ன? தகுதிமிக்கவை பிழைத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெறுகின்றன என்ற மெய்மையைக் கேட்டவுடனே, பிழைத்து வாழ்தல், என்ற கருத்து அவர்களைத் தனியுயிர் பிழைத்து வாழ்தல், தனியுயிரின் தன்னலம் என்ற இழிந்த எண்ணங்களுக்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை தன்னலமல்ல, பொதுநலம் தகுதி என்பது தன்னல ஆற்றலன்று, பொதுநல ஆற்றல் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

டார்வின் தத்துவத்தைக் கண்டித்தவர்கள் அதைத் தன்னலமிக்கது கொடுமை வாய்ந்தது என்று குறை கூறினர். ஆனால் தன்னலமும் கொடுமையும் டார்வினின் தத்துவத்தி லில்லை. கண்டித்த அவர்கள் உள்ளத்தில்தான் இருந்தது. டார்வின் தத்துவம் தகுதி இன்னது என்பதை நன்கு விளக்குகிறது. உயிரினங்களிலும் விலங்குகளிலும் இனநலத்துக்கு ஆக்கம் தரும் பண்புடையன வாழ்ந்தன. அவற்றின் பண்பு இனப் பண்பாயிற்று. இனங்களில் பேரின நலன் அல்லது இயற்கை நலத்துக்கு ஒத்தன வாழ்கின்றன. வாழும். இதுவே டார்வின் காட்டிய மெய்மை. அவர் தந்த விளக்கம் இன்னும் தெளிவானது. ஏனெனில் நேர்மை, பொதுநலம், பெருந்தன்மை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் மனித இனத்தில் வளர்ந்த வகைகளையும் இயல்நூலுடன் அவர் பொருத்திக் காட்டியுள்ளார். இயற்கையின் பண்புகளே தெய்வ அமைதிப் பண்புகள் என்ற முடிவு இதில் தொனிக்கிறது.

சமய முதல்வர்கள் இதுகண்டு சீறினர். ஏனென்றால் தெய்விக அமைதி வேறு, இயற்கை அமைதி வேறு என்ற அவர்கள் அறியாமடமைக் கருத்துக்கு ஊறு ஏற்படுகிறது என்று அவர்கள் கருதினர். மேலும் இயல்நூல் துறையிலிருந்து காண்பவர் “தெய்வ அமைதியே இயற்கையமைதி” என்று கூறமாட்டார். இயற்கையமைதியே தெய்விக அமைதி என்றுதான் கூறுவர். இது காட்சியின் திசைமாற்றமே தவிரக் காட்சி மாற்றமாகாது. இயற்கை அமைதி, தெய்விக அமைதி ஆகியவற்றின் தொடர்பறிந்த சமய முதல்வர்கள் இதன் திசையை மாற்றி, தெற்விக அமைதியே இயற்கை அமைதி: ஆகவே இயற்கை அமைதியே தெய்விக அமைதி என்பதில் தவறில்லை என்று கூறி அமைந்திருப்பர்.

குறுகிய தன்னலம், அதாவது பொதுநலங் கருதாத தன்னலம் அழிவு நாடிச் செல்வது. பரந்த தன்னலம், அதாவது பொது நலங்கருதியோ கருதாமலோ அதனுடன் இயைந்த நிற்கும் தன்னலம் தனி உயிருக்கும் இனத்துக்கும் ஆக்கம் தரும். எனவே பொதுநல இயல்பே தகுதியாகும். வெற்றி யாவும் தகுதியடிப்படையிலேயே யாதலால், வாழ்வில் நேர்மைக் கேடு என்பது கிடையாது. யாவும் இயற்கையின் நேர்மையமைதிக்குக் கட்டுப்பட்டவையே. இவ்வியற்கை அமைதியே வாழ்க்கை அமைதியாகிய ஒழுக்கம். அதன் உயில் நிலை ஆன்மிக அமைதி அல்லது தெய்விக அமைதி அன்பு, வாய்மை ஆகிய அடிப்படை மெய்மைகளையன்றி அழிவு பிழைத்து அழியா ஆக்கம் நாடும் வழிகள் எதுவும் இல்லை. ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற டார்வினின் இயற்கைத் தத்துவங்காட்டும் முழுநிறை உண்மை இதுவே.

டார்வின் தத்துவத்தின் ஒழுக்கப்பண்பு

டார்வின் தத்துவம் இயற்கைத் தத்துவம் மட்டுமல்லாமல்ல; அதுவே உயர் ஒழுக்கத் தத்துவமும் ஆகும். தகுதி மிக்கவர் வெல்வர் என்பதன்று. பொதுநலமிக்கவர் வெல்வர் என்பதே. ஒவ்வொரு இனத்தின் தலைசிறந்த உறுப்பும் அந்த இனத்தை வளர்க்க உதவும் உறுப்பே. அந்த இனத்தை அழிக்க உதவும் உறுப்பன்று டார்வினின் இத் தத்துவத்தினும் உயரிய மெய்மையைக் சமயநூல்களில் கூடக் காண்டலரிது. ஆனால் அந்நாளைய சமய முதல்வர் சமயம் பற்றிய அறிவு குறுகிய தன்னலச் சூழலில் வளர்ந்த அறிவாதலால். இந்த உயர்மெய்மையை அவர் தம் காட்சிக் கோணம் காணத் தவறிற்று.

இயற்கையின் உள்ளார்ந்த தகுதி அல்லது நலம் நிலையான நலம் ஆகும். புறத்தே செயற்படும் தகுதி நிலையான தகுதியன்று, மாறுபடும் தகுதி; ஆனால் வளரும் தகுதி. அது இடத்துக்கி இடம் மாறுபடுவது. காலத்துக்குக் காலம் மாறுபடுவது. இம் மாறுபாட்டை இயக்குவது உள்ளார்ந்த தகுதி அல்லது தெய்விக அமைதி. அவ் இயக்கமூலம் ஓரிடத்திலுள்ள தகுதி மாறுபட்டு, அடுத்த இடத்திலுள்ள தகுதியை வளர்க்கிறது. ஒருகாலத் திலுள்ள தகுதி மாறி, அடுத்த காலத்திலுள்ள தகுதியை வளர்க்கிறது. இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் தகுதியின் மாறுபாடுகளிடையே தகுதியைவிட அதனுதவியால் வளர்ச்சி யடைந்து மாறுபட்ட மற்றொரு காலத் தகுதி உயர்வுடைய தாகவே இருக்கும். தகுதிமட்டுமல்ல; ஒழுக்கம், நேர்மை, கடவுள், சமயம் ஆகியவை பற்றிய கருத்துக்களும் காலத்துக்குக் காலம் மாறுகின்றன, உயர்வடைகின்றன, வளர்கின்றன.

கொடுமையே வெற்றிதரும் என்று நம்புபவர் ஒருசிலர் இன்றும் இருக்கலாம். ஆனால் மனித இனதே அங்ஙனம் கருதிய காலம் இருந்தது. அக்காவத் தெய்வங்கள் கொடிய உருவில் சமைக்கப்பட்டன. அவை கொடும் பலிகள் கோரின. இந்நிலையிலிருந்து மனித அறிவு உயர்ந்தது. ஆற்றல் வெற்றிதரும் என்று கருதிற்று. அதனினும் உயர் கருத்து அக்காலத்து மனிதனுக்கு ஏற்படவில்லை. அக்காவத் தெய்வமும் ஒழுக்க முறைமைகளும் ஆற்றலடிப்படையிலமைந்திருந்தன. காவியங்களும் அந்நாளில் வீர காவியங்களாகவே இருந்தன. ஆனால் விரைந்து மனித இனம் அறிவு, அழகு, அன்பு, சரிசம நேர்மை ஆகிய படிப்படியான உயர் தத்துவங்களைக் கண்டுணர்ந்தது. சமயம், ஒழுக்க முறைமை, சமூக அமைப்பு அரசியல் ஆகிய யாவும் சற்று முன்பின்னாகவேனும் இவ்வுயர் தத்துவங்களுடனொத்து வளர்ச்சியடைந்தே வருகின்றன.

இவை யாவும் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற இயற்கைத் தத்துவ அடிப்படையான வாழ்க்கைத் தத்துவத்தின் விளைவே. தெய்விக அமைதி அல்லது முழுநிறை நேர்மை இத்தனையிலும் ஊடாடி நிற்கும் அகநிலை அதாவது உயிர்நிலை அல்லது ஆன்மிகத் தத்துவம் ஆகும். தெய்விக அமைதியின் இயக்கும் ஆற்றலின்றி இவை என்றும் நடைபெற மாட்டா. தெய்விக அமைதியே எல்லாவற்றையும் இயக்குவது என்றதும் சமயத் துறையாளர் பலர் உடனே தம் துறைதான் மற்றெல்லாத் துறைகளுக்கும் மேம்பட்டதாயிருக்க வேண்டும் என்று கருதாமலிரர். அவர்கள் கருத்து தவறானது மன்று. உண்மைச் சமயத்துறை இயற்கை கடந்த அமைதிபற்றிய அறிவைச் சார்ந்ததாதலால், எல்லாவற்றிலும் உயர்ந்ததே. ஆனால் உண்மைச் சமயத்துறை என்பது இடவேறுபாடு கடந்த, காலநிலை தாண்டியதாயிருத்தல் வேண்டும்.

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் சமயத் துறையாளர் இந்நிலையில் இருந்தனர். அவர்கள் இயற்கையின் அறிவு மூலமாக இயற்கையின் உள்ளார்ந்த மெய்யறிவை நாடினர். இன்று சமயத்துறை மனித சமூக வாழ்வில் பின்னடைந்து விட்டது. அது பழைமைப்பற்று பிற்போக்கு ஆகியவற்றின் கோட்டை ஆகிவிட்டது. இயற்கை அறிவை அது வரவேற்று, காலத்துடன் முன்னேறி, காலந்தாண்டி அது சிந்திக்க வில்லை. அது தற்போதைய இயற்கை அறிவுக்கு முரண்பட்ட முற்காலப் பழம் பஞ்சாங்க கால இயற்கையறிவில் நின்று புதிய இயற்கை அறிவை ஐயநோக்குடன் நோக்குகிறது. உண்மைச் சமயத்துக்கு மாறாக இயற்கை அமைதி வேறு, இறை அமைதி வேறு என்ற கருத்தை அது வரவேற்ற வகை இதுவே.

நாகரிக வளர்ச்சியின் மூன்று படிகள்

சமயம், சமூகம், அரசியல் ஆகிய இவை நாகரிக வளர்ச்சியின் மூன்று படிகள். ஆனால் பின்னதன் முன்னேற்றத்தை முன்னது பயன்படுத்தினால், முன்னதன் ஆக்க ஆற்றல் பின்னதனினும் உயர்வுடையதாயிருக்கும். ஏனெனில் சமயம் சமூக அடிப்படையாகவே வளரமுடியுமானாலும், அதனினும் தொலை நோக்குடையது. அதுபோலச் சமூகம் அரசியலடிப்படையாகவே வளரமுடியுமானாலும் அரசியல் தாண்டிய நோக்கம் உடையது.

மனித இனம் சமயப்படி தாண்டிச் சமூகப்படி அடைந்தபோது, சமயம் சமூக முன்னேற்றத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைவதில் பின்னடைந்தது. இதனால் சமூகம் போதுமான அளவு சமயத்தை வளர்க்கவில்லை. சமயம் சமூகத்தைப் போதுமான அளவு வலுப்படுத்த முடியவில்லை. இது போலவே மனித இனம் சமூகப்படி தாண்டி அரசியற்படி அடைந்தபோது, சமூகம் அரசியலின் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியடைவதில் பின்னடைந்தது. இதனால் அரசியல் சமூக வாழ்வைப் போதுமான அளவு வளர்க்கவில்லை. சமூகமும் போதுமான அளவு அரசியலை வளப்படுத்தாது நிற்கிறது.

தகுதி காலத்துக்குக் காலம், ஊழிக்கு ஊழி வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. வளர்ந்துகொண்டே யிருக்கிறது. தகுதி கொடுமையாகவும் ஆற்றஉலகை ஆள்பவர் யார்?லாகவும் இருந்த காலம் உண்டு. பின் அது அறிவின் பண்பை ஏற்றது. கொடுமையும் ஆற்றலும் மட்டுப்பட்டன; ஆனால் ஒழியவில்லை. ஏனென்றால் அறிவு ஆற்றலுக்கு உதவியாகவும் கொடுமைக்கு உடந்தையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அறிவின் படி கடந்து அழகின் படி அடைந்ததும் கொடுமை கிட்டத்தட்ட அழிவுற்றது. ஆற்றலும் பின்னும் மட்டுப்பட்டது. ஆனால் அழகுணர்ச்சி ஆற்றலை வளர்க்க உதவிற்று. ஆற்றல் சிறுபான்மையாகக் கொடுமைக்கு உதவிற்று. தகுதி அழகு கடந்த அன்பு சார்ந்த பின் இன்றைய சமயங்கள் வற்புறுத்தும் சரிகம நேர்மை ஒழுக்கம் ஆகிய உயர் தத்துவங்கள் எழுந்தன.

கொடுமையும் ஆற்றலும் இன்னும் செயலாற்றுகின்றன என்றால், இதற்குரிய காரணம் வேறொன்றுமன்று. சமயம் உண்மைச் சமயமாக உயராமல், சமூகம், அரசியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களை ஏற்பதால், இன்னும் உயர் முன்னேற்றங் களுக்கு உதவியும் தூண்டுதலும் தந்து வழிகாட்டாமல், அவற்றுக்கு ஒரு புறம் பிற்பட்டும், மற்றொரு புறம் அவற்றுக்கு ஆளடிமைப்பட்டும் வருவதேயாகும்.

தெய்விக அமைதியை உணர்ந்து அதனுடன் இணைந்து நடப்பவர்கள் என்றும் இருந்து வந்துள்ளனர். இன்னும் இருக்கின்றனர். இனியும் இருப்பர். எல்லாத்துறையிலும் உலகின் முன்னேற்றத்துக்கு அவர்கள் பேருதவி செய்பவர் ஆவர். சமயத்துறை நலிந்துவிட்டது, அதற்கு மாறான உலகியல் துறைகள் வளர்ந்து வருகின்றன என்று இன்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது உண்மைச் சமயத்துறை சார்ந்த இவ் அருளாளர் வகையில் உண்மையன்று. நேர்மாறாக, முந்திய எந்தக் காலத்தையும் விட, அறிவியல் ஊழியாகிய இக் காலத்திலேயே தெய்விக அமைதியின் உச்ச உயர்நிலைப் பண்பாகிய அன்பு நெறி மிகுதி செயலாற்றக் தொடங்கியுள்ளது. ஆயினும் அதன் செயலை நாம் சமயத்துறை என்ற குறுகிய பகுதியில் காணமுடியாது. நாகரிகத்தின் எல்லாத்துறைகளிலும் காணலாம்.

குடியாட்சி, சமதருமம், பகுத்தறிவு ஆகிய எத்தனையோ உயர் கருத்துக்களாக அவ்வுயர்நிலைப் பண்பு நிலவுகிறது. அது அரசியலையும் சமூகத்தையும் பொருளியல் வாழ்வையும் கூட மாற்றிவருகிறது. இவற்றிலெல்லாம் கூறிக்கோளளவு கொள்கை உயராமலிருக்கலாம். கொள்கையளவு செயல் வளராமலிருக்க லாம். செயலும் அருளாளர் உடனடிச் சூழல்கள் தாண்டிப் போதுமான அளவில் விரைந்து பரவிவிடாமல் இருக்கலாம், ஆனால் இயற்கையின் எல்லையற்ற பரப்பளவில் அது பரவாமல் நிற்பதில்லை, ஏனெனில் அருளாளர் உள்ளத்தில் தோன்றிய ஒளி, அனைத்துலகும் பரவியன்றி ஓன்றி கொள்ளப்போவதில்லை.

உலகை ஆள்பவர் யார்?

உலகை ஆள்பவர் யார்? அரசியல்கள் ஆள்கின்றன என்றுதான் மேலீடாகப் பார்ப்பவர்களுக்குத் தோற்றும். அரசியல் கடந்த பொருளியல் ஆராய்ச்சியாளர் பொருளகங்களே ஆள்கின்றன என்று காண்பர். பொருளியல் இயக்கியன்றி அரசியல் ஆள்வதில்லை. பொருளியல் ஆராய்ச்சி கடந்து சமூகத்தை ஆராய்வோர் சமூகமும் சமூகத்தில் நிலவும் கருத்துக்களுமே ஆள்கின்றன என்று அறிவர். ஆனால் இந்த ஆட்சிகளெல்லாம் இயக்கும் ஆட்சிகளல்ல. மக்கள் தகுதியை, சமூகத் தகுதியை வளர்ப்பவைகளல்ல. புதிய கருத்துக்களை, கருத்தாட்சியை, சமூக அமைப்புப் புரட்சியை உண்டுபண்ணு பவைகளல்ல. உண்மை அருளாளர் - உலகினின்று ஒதுங்கி வாழும் போலி அருளாளர்களல்ல - உலகுடன் உலகாக இயங்கி அவ்வத் துறையின் பண்பை உலகறியாமவே உயர்த்தும் உயர் அருளாளரே இவ்வகையில் உலகை இயக்குபவர்களாவர்.

உண்மை அருளாளர் கல்வியாசிரியராயிருந்து கல்வி மூலம் மக்கள் அறிவுக் கண்ணைத் திறக்கலாம். மருத்துவராயிருந்து நோய் நீக்கி உடல் நலம் வஉலகை ஆள்பவர் யார்?ளர்க்கலாம். சமயத்துறைவராயிருந்து மக்கள் வாழ்க்கைத் தளர்ச்சியகற்றி ஆறுதலும் ஊக்கமும் தரலாம். எந்தத் துறையிலும் அவர்கள் அரும்பண்பு உலகில் அன்பொளி பரப்பி ஒற்றுமை வளர்த்து, உயர்கருத்தும் பண்பும் ஊட்டி வளர்ப்பது உறுதி. அவர்கள் தகுதி மூலம் உலகின் தகுதி வளர்வதும் உறுதி கால எல்லை கடந்து உலகம் நிலைபெற உதவுவமு அத்தகுதியே யாகும்.

கொடுமை சென்றெட்டும் எல்லை கடந்து ஆற்றல் செல்லும்; ஆற்றல் கடந்து அறிவு செல்லும்; அறிவு கடந்து அழகுப் பண்பு செல்லும்; அது கடந்து அன்புப் பண்பு செயலாற்றும். அன்புப் பண்பு இட எல்லை, கால எல்லை கடந்து செல்லும் தன்மையுடையது. அது சாதி, இனம், நாடு, நகரம் ஆகிய எல்லைகளைத் தாண்டி உலகை ஓர் உலகாக்க வல்லது. ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்பதை எதிர்ப்பவர்கள் கூறும் ஒரு வாதம் இங்கே கவனிக்கத் தக்கது. ‘தகுதியற்றவர் அனைவரையும் அழித்துத் தகுதியுடையவர் முன்னேறுவர். தகுதியுடைய வரிடையேயும் தகுதிமிக்கவர் தகுதி நிறைந்தவரை அழித்து வாழ்வர். இங்ஙனம் இனத்தின் பெரும்பகுதி அழியும். பிழைத்து வாழும் சிறுபான்மையோரும் இனப்பற்று, ஈவிரக்கம் அற்றவராயிருப்பர்!’

தகுதி: இன ஆக்கப்பண்பு

இவ்வாதம் உண்மைத் தகுதி பற்றிய வாதம் அன்று. ஏனெனில் உண்மைக் தகுதி அழிப்பதில்லை. தகாகவர்களை அது தகுதியுடையவர் களாக்கவே முயலும். மேலும் தாமாக அழியும் தகுதியற்றவர்களைகூட இயற்கையினால் அழிவர். அவ்வழிவும் உடனடியாக நிகழ்வதில்லை. தாம் வாழ்ந்தும் தம் பண்பின் மரபே அழியாப் பெறுவர். தகுதியற்றவர் வாழ்வது போலவும் தகுதியுடையவர் தாழ்வது போலவும் காணப்படுவது இதனாலேயே. உண்மைத் தகுதியுடையவர் அன்பும் பொதுநலர் பற்றும் உடையவர். அவர்கள் தாம் அழிந்தாலும் தம் மரபையும் இனத்தையும் வளர்ப்பவர்கள். தகுதி யற்றவர்கள் பெரும்பாலும் தன்னல வழியுடைய வராதவதலால், தாம் சிறிதுபோது வாழலாம். அவர்கள் பண்பின் மரவும் இனமரபும் தான் அழிவுறும். ஆனால் பண்பும் இனமும் இதனால் அழியாது. ஏனென்றால் தகுதியுடையவர் ஓரினத்தில் ஒரு சிலர் இருப்பினும் அவ்வினம் அழியாமல் காக்கப்பெறும்1!

அன்புநெறியின் வெற்றிக்கு ஒருசில அருளாளரே போதும். தன்னல நெறிக்கோ, இனத்தின் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பேரும் அதனைச் சார்ந்ததாலும், தோல்வியே கிட்டும். அன்புநெறியின் இந்த வெற்றி ஆற்றலுக்குத் தனிக் காரணம் உண்டு. தன்னல நெறி பிரிக்கிறது. அன்புநெறி இணைக்கிறது. தன்னலநெறியில் உழைப்பவனுக்கு அவனைத் தவிர யாரும் உதவமாட்டார். அன்புநெறியின் வெற்றியில் முழுநிறை அன்புநெறியாளரான அருளாளர் மட்டுமன்றி, தன்னல நெறியாளர்கூடத் தம்மையறியாமல் ஈடுபடுகின்றனர். ஏனென்றால் அன்பு நெறி இயற்கைநெறி; இயற்கையில் உள்ளூர நின்று இயக்கும் தெய்விக அமைதியின் பண்பு வாய்ந்தநெறி.

தீமையே செய்தொழுகுபவர் என்று இழித்துரைக்கப்படும் பலர் நல்லாரைக் கண்டதும் தம் தீமையை ஒதுக்கி அவரை மதித்து ஆதரிப்பதை நாம் கண்டிருப் பதில்லையா? அவர்களைத் தீயவர் என்று ஒதுக்கிய போலி நல்லார் வியக்கும் வண்ணம் அவர்கள் நன்மை கண்டு விதிர்விதிர்க்கின்றனர். இவ்விசித்திர நிலையின் காரணம் என்ன? உலகில் தீயவர் என்றும்; கொலைகாரர், வஞ்சகர், கொடியவர், ஐயபெரும்பழியாளர் என்றும் ஒதுக்கப்படுபவர்கள் தீயவருள்ளும் கடையவராக மதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தீயவழியினராயினும் தீயவருள் கடையரல்லர். அவர்கள் நன்மையை அறியாமல் அல்லது நன்மையில் நம்பிக்கையில்லாமல் கெட்டழிப்பவர்கயே. நல்லாரைக் கண்டவுடன் அவர்கள் தம் தீமைக்கு வெட்கி அத்தீமையை அவர்கள்பால் செல்லவொட்டாது ஒதுக்குவதன் காரணம் அவர்கள் உள்ளத்தின் உள்ளாழத்தில் நன்மையார்வம் ஒழிந்து விடாமல் நிலவுவதேயாகும். நன்மையை உணர்ந்தும் தன்னலத்தால் தீமையை மறைத்துச் செய்யும் பல ‘அரைகுறை நல்லாரை’ விட அவர்கள் தீயவரல்லர். தீயவரில் கடையவர் போலி நல்லாராகத் திரிபவர், தன்னலத்தால் நயவஞ்சகப் போர்வை போர்த்தி நடப்பவரேயன்றிப் பட்டாங்கமாகத் தீமை செய்பவர் அல்லர் என்னலாம்.

நன்மையின் வலிமை

இருளின் செறிவினுள்ளும் ஒளி உண்டு. அதுபோலத் தீமையின் கருவினுள்ளும் நன்மையின் தடம் கட்டாயம் உண்டு. ஏனென்றால் மனிதன் இயல்பு தீமையன்று; நன்மையே. தன்னலம்கூட அறியாமையால்தான் குறுகிய தன்னலமாகிறது. அறிவு பெறுந்தோறும் பயனுடைய தன்னலம் பொதுநலமே என்ற உணர்வு ஏற்படுகிறது. இயல்பாக நாணயமாயிருப்பவர் என்பவர் அதுபற்றிய அறிவில் உறுதி பெற்றவரேயன்றி வேறல்லர். பலர் நாணயமாயிருப்பதன் ஆதயமறிந்து நாணயமாயிருக்கப் பழகுவர். தீயவர் நல்லவராக நடிக்கும் நடிப்பை நாம் பெரிதும் காண்கிறோம். நல்லவர் தீயவராக நடிப்பதை அவ்வளவாகப் பார்க்கமுடியாது. இதற்குக் காரணம் நன்மை நடிப்புக்கூடப் பயனுடையது என்பதை மனித உள்ளம் இயல்பாக அறிந் திருப்பதே என்னலாம். தீமை நடிப்புக்குக் கூடப் பயனுடையது என்பதை மனித உள்ளம் இயல்பாக அறிந்திருப்பதே என்னலாம். தீமை நடிப்புக்குக் கூட விரும்பத்தக்கதல்ல என்பதை அறியாதவர் இருத்தல் அரிது.

மனித நாகரிகம் வளர்ச்சியடைந்தேறும், கொடுமை, வஞ்சகம், பகைமை, வீம்பு, போட்டி மனப்பான்மை, செருக்கு, அடக்குமுறை ஆகியவை படிப்படியாக ஒழிவது கண்கூடு. ஆங்காங்கே அவை நடை பெற்றாலும் அவை தனிமனிதன் ஆற்றலுக்கும் மடமைக்கும்தான் அறிகுறி. ஏனென்றால் அன்புக்கு மனமார்ந்த ஒத்துழைப்பு அவற்றுக்கு இருக்கமுடியாது. தனிமனிதன் ஆற்றல் பொதுமனித ஆற்றலுக்குமுன் தகர்வது உறுதி. தகரும்போது அவை அழியாமலிரா.

தனிமனிதர்களிலும் சரி, சமூகங்களிலும் சரி, தன்னாதிக்கம் விரும்பிய முரட்டு வகுப்பினர் பண்டை நாளிலேயே அழிந்துவிட்டனர். தன்னலம் நாடியவரும் பிற்பட்டு விட்டனர். உலகம் இன்றும் அறிவுடன் செயலாற்றி அமைதி நாடுபவரின் உலகமாய் மாறி வருகிறது. இதுபோல வருங்காலத்தில் தன்னலமிக்க நாடுகள், ஆதிக்க ஆட்சி, ஆதிக்கப்போர் விரும்பும் நாடுகள், தன்குழு நலன், தன் ஆதாயம் ஆகியவற்றுக்கு ஆட்படும் நாடுகள் அழிவது உறுதி. தனக்குள் ஒற்றுமை பேணி அன்பாட்சி கண்டு, தன் எல்லை கடந்து உலகிலும் அது ஏற்படப் பாடுபடும் நாடுகளே வருங்காலத்தில் நிலைபெற்று வாழ்வன ஆகும்.

அன்புடையர்க்கு உரியது உலகம். வருங்கால உலகம் அவர்கள் அன்பாட்சி நோக்கி செல்கிறது. அன்பிலாதவர் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்தாலும், எதிர்கால உலகிள் தொடர்பிலிருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தம் மரபை நிகழ்காலத்துடன் அல்லது அணிமை எதிர்காலத்துடன் தறித்துக் கொள்கிறார்கள்.

தீமையில் நன்மை

‘எல்லா நன்மைக்கே’ என்ற மூதுரையை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். கவிஞர் போப் மனிதனைப் பற்றிய தம் உரை விளக்கத்தில்

“இருப்பனயாவும் ஈடிலாநேர்மையே”

என்றும், கவிஞர் பிரௌனிங்,

"வாளிடை இவர்ந்தனன் எந்தை, மன்னுறம்

நானிலம் இவர்ந்தது நேர்மை எங்கணும்"

என்றும் கட்டுரைத்திருக்கின்றனர். உலகப்போக்கின் வழுவிலா நிறை நேர்மையில் இவர்கள் எவரும் எள்ளளவும் பற்றுத் தளரவில்லை.

அதே சமயம் உலகில் யாவும் நேர்மை என்று வாளா ஏற்பது எங்ஙனம்? போரும் பஞ்சமும் நல்லவை, நேர்மை யானவை என்று ஒப்புக்கொள்ள முடியுமா? நோயும் வறுமையும் நலந்தருபவையா? இவை உலகிலில்லாதவை என்றோ, நேர்மையானதென்றோ கூறமுடியாது. மக்களிடையே தன்னலமும் பலவகையான பழிச் செயல்களும் நிலவுகின்றன. குடியும் கொடுமைகளும் கூத்தாடு கின்றன. குற்றங்களும் தகாச் செயல்களும் அட்டூழியங் களும் பல உருவில் நடமாடுகின்றன. இவை யாவும் நேர்மையின் ஆட்சி யாகுமா? நீரிலும் நிலத்திலும் வானிலும் ஏற்படும் இடர்கள் எத்தனை? இயற்கையின் கோளாறுகளிடையே ஆயிரப்பதினா யிரக்கணக்கான மக்கள், தீங்கிழையாச் சேயிழைமார், சூதறியா இளங்குதலையர் அழிகின்றனரே! இவற்றை எந்த நேர்மையில், நன்மையில் சேர்த்துவிடுவது? இவற்றுக்கு ஒரு விளக்கம் கட்டாயம் வேண்டும்!

நேர்மையுடையவை மக்களுக்குப் பொதுவாகவேனும், சிறப்பாகவேனும் நலந்தரவேண்டும் அல்லது இன்பமளிக்க வேண்டும். ஆனால் மேற் கூறியவற்றுள் எதுவும் இன்பந்தருபவை என்று யாரும் கூறமுடியாது. “இருப்பன யாவும் ஈடிலா நேர்மை”என்று வேதாந்தம் பேசுபவர்கள்கூட இவற்றை வரவேற்று மகிழமாட்டார்கள்! அவற்றைத் தீமை என்று ஒத்துக்கொள்வர்.

இருப்பவை யாவும் நேர்மை என்றால், “இத் தீமைகள் இருப்பவை நிகழ்பவைதானே; அவை நேர்மையாவது எவ்வாறு?” என்ற கேள்வி எழுவது உறுதி.

துன்பந்தரும் இத்தீமைகள் நேர்மையானவையல்ல என்றுதான் எவரும் கூறுவர். இருப்பவை யாவும் நேர்மையே என்ற கொள்கையை ஏற்பவர், உலகப் போக்கு முழுவதும் நேர்மையடிப்படையானதே என்று கொள்பவர் “இத்தீமைகள் நேர்மையா? நேர்மையானால் எவ்வாறு நேர்மை?” என்ற வினாக்களுக்கு விளக்கந்தந்து விடுவிக்க வேண்டும்.

இன்பம் வேறு, நலம் வேறு

இன்பந்தருபவை மட்டுமே நேர்மையானவையாய் இருக்கக்கூடு மென்றால், இத்தீமைகளை யாரும் நேர்மை என்று கூறமாட்டார், கூறவும் முடியாது. ஆனால் இன்பந்தராதவையும் நேர்மையாக இருக்கக்கூடும். அவை நலந் தருபவையானால்! இம் முறையிலேயே தீமையாக, அதாவது துன்பந் தருபவையாகத் தோற்றும் அந்நிகழ்ச்சிகளையும் நேர்மையானவை என்று காட்டலாம்.

நல்லோர்கூட இவற்றை விலக்க விரும்புவது உண்மையே. அவை துன்பந்தருபவை என்பதும் உண்மையே. ஆனல் அவை தரும் துன்பம் தற்காலிகமாக மிகப் பெரிதாக, மிகக் கொடிதாகத் தோற்றினாலும், அத்துன்பம் நிலையானதன்று, தற்காலிகமானதே. தற்காலிகத் துன்பந்தருபவை தற்காலிகத் தீமைகள் மட்டுமே; நிலையான தீமைகளல்ல. அவை நிலையான நலந்தசக்கூடு மானால், அவை தீமைகள் போலக் தோற்றினாலும் அவற்றை நாம் தற்காலிகமாகத் தீமைகள் போல தோற்றும் உண்மையான நலங்கள் என்றே கொள்வோம்.

நாம் உலகில் நன்தை என்பதும் தீமை என்பதும் உண்மையில் தற்காலிக நன்மைகளையும் தீமைகளையுமே. நிலையாக நன்மைகள் மட்டுமே உண்டு. தீமைகள் கிடையாது. எனவேதான் பஞ்சம், வறுமை, நோய் முதலியவை தீமைகள் என்பதற்கும், எல்லாம் நன்மையே உண்மைக்கும் எத்தகைய உள்ளார்ந்த முரண்பாடும் கிடையாது. பஞ்சம், வறுமை ஆகியவை துன்பந்தருவதால் தீமையென்று மக்களும், நீடித்த நலமே இறுதியில் விளைவிப்பதால் நலமென்று ஆழ்ந்தகன்ற அனுபவ அறிவுடையாரும் கொள்வர்.

தீமைகள் என்று கருதப்படுபவை - தற்காலிகத் துன்பந்தருபவை என்று நாம் குறிப்பிட்டவை - உண்மையுல் நீடித்த நலம் தருவது எவ்வாறு என்பதை இனிக் காண்போம்.

பொதுவாக இன்பம், துன்பம் என்று பாகுபடுத்தும்போது, துன்பத்தில் ஒரு பெரும் பகுதி உடலின் நோவே யாகும். இதை நாம் விரும்புவதில்லை. விலக்க எண்ணுகிறோம். அதனாலேயே அதைத் துன்பம் என்கிறோம். ஆயினும் உடலை எண்ணிப் பார்க்கும் போதுதான் இது துன்பம். உயிரை எண்ணிப் பார்க்கும்போது துன்பம் அல்லது தீங்கு என்று கூறுவதற்கில்லை. ஏனென்றால் அது உடலின் கோளாறுகள் பற்றி உயிருக்கு எச்சரிக்கை தருகிறது. உடலைப் பேனி நீட்டிப்பதற்காகவே நோவு இந்த எச்சரிக்கை தருவதால், அது நீடித்த நலம் பயக்கும் நன்மை ஆகும்.

உடல் நோவைப் போலவே உளநோவு அல்லது மனவேதனையும் வெளிப்பார்வைக்குத்தான் துன்பமாகத் தோற்றுகின்றது. உடல்நோவு உடல் நலம் பற்றி எச்சரித்து உயிர் நீட்டிப்புக்கு உதவுவது போல, மன வேதனையும் மனநலம் பற்றி எச்சரித்து அறியாமை அகற்றி அறிவு கொளுத்த உதவுகிறது. மனவேதனைகள் தீய செயல்கள் அல்லது தீய சொற்கள் அல்லது தீயக் கருத்துக்களால் வருபவை. ஆகவே மன மொழி மெய் ஆகிய முத்திற வழுக்கள் பற்றியும் அவை நமக்கு நண்பன்போல எச்சரிக்கை தருகின்றன. அவற்றை நல்ல வீர நண்பரின் இடித்துரையாகக் கொள்பவர்களுக்கு அவை உண்மையில் தீமையல்ல, துன்பந் தருபவையுமல்ல. நீடித்த இன்பத்துக்கும் அதற்கு ஆதாரமான நல் அறிவுக்கும் வழிகாட்டும் சின்னங்களாகவே அவை அமைகின்றன.

விவிலிய நூலுரைகள்: இஸாயா, ஏமாஸ்

“நான் ஒளியை உருவாக்குகிறேன். இருளை உண்டுபண்ணு நான் அமைதியை உருவாக்குகிறேன். ஆனால் தீமையியும் சேர்ந்து இயற்றுகின்றேன். இத்தனையும் செய்யும் இறைவன் நானே” என்ற விவிலிய நூலறிவர் இஸாயாவின் மெய்யுரையின் நுண்பொருள் இதுவே. இதே முறையில் அறிவர் ஏமாஸும் கருத்துரைத் துள்ளார். மக்கள் வாழும் ஒரு நகரில் ‘தீமை ஏற்பட்டால், அதனை இறைவனைத் தவிர வேறு யார் ஏற்படுத்தி இருக்கமுடியும்?’ என்று அவர் கேட்கிறார்!

விவிலிய நூலின் பழைய ஏற்பாடு முழுவதும் தீமைக்கும் நேர்மைக்கும் உள்ள தொடர்பு பற்றிய விளக்கமாகவே உள்ளது. தீமை நிறைநேர்மையிலேயே வேரூன்றியிருப்பது. நன்மையை போலவே அது நேர்மையின் ஒரு சிறகாகும். நேர்மையின் அமைதியைப் பின்பற்றுவதால் நன்மை ஏற்படுவது போலவே அதை மீறினால், தீமை ஏற்படுகிறது. பழைய அறிவர்களுக்கு இம் மெய்மை யிலிருந்த உறுதி மிகப் பெரியது. ஏனெனில் அவர்கள் அகத் தீமைகளை மட்டுமன்றி, அறத்தீமைகளாகிய பெரு வெள்ளம், புயல், நிலநடுக்கம், வறட்சி, பஞ்சம் ஆகியவற்றைக் கூடப் புறத் தீமைகளின் பயனாகக் கொள்ளாமல் அகத் தீமைகளின் விளைவுகளாகக் கருதினர். மனித இனம் நேர்மையின் அமைதி களாகிய வரம்புகள் கடந்து அழிமதி உடையவர்களா யிருந்த தனாலேயே இத் தீமைகள் ஏற்பட்டன என்பது அவர்கள் கோட்பாடு.

எல்லாக் தீமைகளும் தெய்விக அமைதியை மனிதன் மீறியதால் வருபவையே. மேலீடாகப் பார்ப்பதற்கு இது அணிந்துரையாகவே மிகையுரையாகவோதான் தோற்றக்கூடும். ஆனால் இவை அறியாமை, ஆழ்ந்த சிந்தனையின்மை ஆகியவற்றின் தவறு மட்டுமே. மனித உள்ளத்தின் அன்மை, மனித வாழ்வின் இயல்பு ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்து ஆராய்பவர் இம் மெய்மைகளின் உறுதிப்பாட்டை நன்கு உணர்வர். சிறப்பாகக் கடுந்துயரும் கொடும்பழிகளும் உணர்ச்சிப் புயல்களில்லாத விடங்களில், உள்ளமைதி நிலவும் காலங்களில் இவற்றின் தடமும் காணப்படாது.

‘ஊழும் உயர்மதியும்’ என்ற தம் நூலில் இயலறிவர் மேட்டர்லிங்க் கூறுவதாவது:

"ஒரு தடவை ஊழை எதிர்த்து வென்றவனிடம் அதன் வலுக்குறைந்து விடுகிறது. ஒரு தடவைக்கு மேல் எதிர்த்து வென்ற பின் அங்ஙனம் வென்ற உள்ளத்தை அணுகவே ஊழ் அஞ்சுகிறது. அத்தகைய ஓர் உள்ளம் இருக்கும் எல்லையில்கூட, சில சமூகப் பெருந்தீமைகளை அனுப்ப ஊழ் பெரிதும் தயங்காதிராது……..

"அறிவன் ஒருவன் செயலற்று அமைதியுடன் இருந்தால் போதும். ஊழின் அழிமதி அவனைச் சுற்றிலும் கட்டுப்பட்டு நின்று விடுகிறது. இதற்கு நாம் கண்கூடான ஒரு சான்று காணலாம். உலகின் மிகப்பெரிய அழிமதிகள் எவற்றிலும் நாம் ஓர் உண்மையான அறிவன் சிக்கியுள்ளதைக் காண்பதில்லை. ஏனெனில் அங்ஙனம் நேர்ந்தால்கூட, குருதி சிந்துமுன், ஏன், கண்ணீர் சிந்துமுன், அவ் அறிவனால் அந்நிகழ்ச்சியை நிறுத்தி விடமுடியும். மேலும் அறிவனுக்கு அறிவன் எதிராக இயங்குவதை நாம் எங்கும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, அதுமட்டுமோ? ஓர் அறிவனைக் சுற்றிலும் எங்காவது எவ்வகைப் போராட்டமாவது இருந்ததாக நமக்குக் தெரியவரவில்லை.

"இதில் வியப்புக்கிடமில்லை. உள்ளத்தின் உண்மையை உணர மனமார முயலும் ஒருவனைச் சூழ்ந்து கடுந்துயர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெறமுடியும்?…..

கவிஞரும் அருளாட்சி அறிவரும்

“கடுந்துயர் நாடகக் கவிஞர்கள் தம் நாடகத்திரை மீது ஓர் அறிவனை ஒருபோதும் வரவிடுவதில்லை. வரவிட்டாலும் அவனை ஒரு கணம் நின்று போகும்படி செய்துவிடுவர். உயர் உள்ளங்களைக் காணவே துயர் நாடகக் கவிஞர் அஞ்சிகின்றனர். ஏனென்றால் அவரை அண்டவே அந்நிகழ்ச்சிகள் அஞ்சும். கவிஞர் கற்பனையில் கூட நாடகம் நடைபெறாது. நாடகத்தில் ஓர் அறிவன் வந்தால், நாடகத்தின் வீரத் தலைவன் வீரத்தலைமை யிலுள்ள சோடை வெளிப்பட்டுவிடும். உண்மை வீரத் தலைவன் யார் என்பதும் தெரிந்துவிடும். அதுமட்டுமன்று. நாடகம் நாடகமாயிராது; போராட்டமற்ற அமைதியாய் விடும் உணர்ச்சி கொப்பளிக்கும் புயலாயிராது. நல்லறிவமைதியாய் விடும்.”

ஷேக்ஸ்பியர் போன்ற நாடகக் கவிஞர்கள் பலவகைப் பண்புடைய மனிதரின் ஓவியங்களையும் உருவாக்கியும், நல்லறிவன் ஒருவன் ™ஓவியத்தைக் கூட தீட்டாததற்குக் காரணம் இதுவே. அவர்கள் காட்ட எண்ணிய நாடக் நிகழ்ச்சிகளுக்குரிய காரணங்கயையே அவர்கள் நாட வேண்டியவர்களாயினர். அறிவர் உள்ளம் அதற்கு நேர்மாறான அமைதியன் மூலவிதை களைக் தன்னகம் கொண்டிருப்பது. அவர்கள் ஒளி மட்டுமன்றி, அவர்கள் நிழல் கூட நாடக நிகழ்ச்சிகளைத் தடுத்திருக்கும்.

உலகின் காரணகாரிய நேர்மைத் தொடர்பை அறிந்து, அதன் மூலம் முக்கால முணர்ந்தவராகக் கருதப்படும் அறிவர் கண்ட முழுமெய்மை இதுவே. தனிமனிதனும் சரி, மனித இனமும் சரி, தத்தம் நன்மை தீமைகளுக்குத் தாமே பொறுப்புடையவர். அவர்கள் தன்னலமாகிய விதையிலிருந்து அறியாமையாகிய பயிரும் பகைமை பொறாமை போன்ற உணர்ச்சி எழுச்சிகளாகிய மலர்ச்சியும், துன்பங்களாகிய விளைவும் ஏற்படுகின்றன. பேரவா, தன்னடக்கமின்மை ஆகியவை இவ்வறியாமைப் பயிருக்கு நீரும் உரமும் ஆகின்றன. இன்பநாட்டம் என்னும் போலிக் கதிரொளி இப் பண்ணையை வளர்க்கிறது. குடி, நோய், வறுமை, பஞ்சம் ஆகியவை இப் பண்ணையின் வெற்றிகரமான அறுவடைப் பருவங்கள். இத்தீமைப் பயிர் விளைவிப்பவர்கள் தீமைகளை விரும்புவதில்லை யாயினும், தீமையின் விதைகளை நன்மைகளின் விதைகளென்றும், தீமையின் உரத்தை நன்மையின் உரமென்றும் தேடி வளர்த்துத் துயருறுகின்றனர்.

தனிமனிதர் தீங்குகள் அவர்களைக் கடந்து, அவர்கள் குடும்ப எல்லையிலும் சமூக எல்லையிலும் பரந்து அழிவு தருவது போலவே, நாட்டின் தீங்குகள், மனித இனத்தின் தீங்குகள் நாட்டு எல்லை கடந்தும் மனித இன எல்லை கடந்தும் தீமை எல்லையை விரிவுபடுத்துகின்றன. அகத்தீமைகள் புற;த தீமைகளாவதன் காரணம் இதுவே. அவை பரவுவதைத் தடுத்து நிறுத்தத்தக்க ஆற்றல் நல்ல கருத்துக்களுக்கு, நல்லறிவுக்கு மட்டுமே உண்டு. அது இல்லாத இடத்தில் ஒவ்வொரு தனிமனிதர் தீமையும் அடுத்த தனிமனிதரையும் சமூகத்தையும் தாக்கும். ஒவ்வொரு நாட்டின் தீமையும் நாடுகடந்து அயல்நாடுகளைத் தாக்கும். மனித இனத்தின் தீங்குகள் அவர்கள் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறையைத் தாக்கும். நல்லார் சூழலால்-சிறப்பாக அறிவுடை நல்லாராகிய அறிவர் சூழலால் மட்டுமே இத்தீமையின் அலை வலுவிழந்து படிப்படியாக நலியத் தொடங்கும்.

இயற்கை தீமைகள்: மனிதன் பொறுப்பு

வறுமை, நோய், பஞ்சம் ஆகிய சமூகத் தீமைகள் தனி மனிதர் உள்ளப் பண்பாட்டின் குறையினால் வரக்கூடும் என்பதைப் பலர் ஒப்புக் கொள்வர். ஏனென்றால் அவை மனிதர் அறியாமை, சோம்பல், துப்புரவின்மை, தன்னலப்போட்டி, பகைமை, போர் ஆகியவற்றால் நேரக்கூடியவை. ஆனால் புயல், நிலநடுக்கம், எரிமலை, அழற்சி ஆகிய இயற்கைத் தீமைகள் மனிதர் உளப்பாங்கின் குறையால் ஏற்படக் கூடியவை என்பதை அத்தகையவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பார்கள். மனிதர் குறைகள் மனித சமூகத் தீங்குகளைக் கொண்டுவருதல் போல இயற்கையின் குறையே இயற்கையின் தீங்குகளுக்குக் காரணமாக வேண்டும் என்று கூட அவர்கள் எளிதில் வாதிக்கலாம். ‘உயிர்ப்பும் அறிவுணர்வும் அற்ற உயிரிலா இயற்கை மீது ஒழுக்க விதிகளைக் சுமத்துவது என்பது ஒன்று கவிஞர்கள் கற்பனையாயிருக்க வேண்டும்; அல்லது காதலத், பக்தர், பித்தர் மயக்கங்களாயிருக்க வேண்டும்!’ என்றும் அவர்கள் முடிவுகட்டிக் கூறுவர்.

‘இயற்கையின் அமைதி வேறு, தெய்விக அமைதி வேறு’ என்று பழைய சமயவாதிகள் கருதியதுபோலவே இக் கால உலகியல்வாதிகள் பலரும் ‘இயற்கை அமைதி வேறு, மனித வாழ்வின் அமைதி வேறு’ என்று கருதுகின்றனர். சற்று ஆழ்ந்த மனமமைந்து ஆராய்ந்தாலன்றி எவரும் இம்முடிவையே எளிதில் ஏற்றுக்கொள்ளவும் கூடும்.

மனிதர் குறைகள் மனிதரையே தாக்கும் என்பது உண்மையானால் இயற்கையின் குறை இயற்கையை மட்டுமே தாக்கவேண்டும். தனி மனித வாழ்வைத் தாக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அது மனிதவாழ்வை ஒரு சிறிதல்ல, முற்றிலும் தாக்குகிறது. வெயிலும் மழையும் காற்றும் இயற்கையின் ஆற்றல்கள். அவை மட்டாக நின்று மனித வாழ்வை மட்டுமன்றி உயிரின வாழ்வு முழுவதையுமே வளர்க்கின்றன. ஆனால் எவையேனும் மட்டுமீறினால், அல்லது சிறிது தடம்பிறழ்ந்தால், உயிர் வாழ்வுக்கும் மனித வாழ்வுக்கும் பேரழிவு நேர்வது உறுதி. இயற்கையில் மிகச்சிறு மாறுபாடும் மனித வாழ்வைப் பாதிக்கும்போது, மனிதவாழ்வு இயற்கையைப் பாதிக்காது என்பது எவ்வாறு?

இயற்கை காடு வளர்த்தது. மனிதன் அதை நாடாக்கி, நகராக்கி, தோட்டம், வயல், சோலைவனங்கள் ஆக்கி விடவில்லையா? இயற்கை கடலும் ஆறும் உடையது. மனிதன் கேணி, குளம், ஏரி, வாய்க்கால், அணைக்கட்டுத் தேக்கங்கள் ஆக்கவில்லையா? இயற்கை செடிகொடி மரங்கள், விலங்கு பறவைகளை அளித்தது. மனிதன் காட்டுச் செடியை நாட்டுச் செடியாக்கிக் காட்டுமலரை ஒய்யார வனமல்லியாகவும், காட்டுக்காயை இனிய கிச்சிலிப்பழமாகவும், காட்டரிசியை நெற்பயிராகவும் காட்டுக் கட்டையைக் கரும்பாகவும் மாற்றவில்லையா? காட்டில் திரியும் ஓநாய் வகையை நாட்டு நாயாகவும், காட்டுக் குதிரையை அழகும் பயனும் உடைய அரபிக்குதிரை யாகவும், காட்டு மாட்டையும் எருமையையும் ஆட்டையும் நாட்டின் கால்நடைகளாகவும் பால்தரும் வீட்டு நண்பர்களாகவும் ஆக்கவில்லையா? இயற்கை தரும் அரிசியும் கோதுமையும் காய்கறியும் பிறவும், சோறு சூட்டப்பம் கறிவகைகள் ஆகவில்லையா?

இயற்கையை மனிதன் தனக்கேற்றபடி மாற்றியமைக்க வில்லை என்று பழங்காலபழங்கால மனிதர் சொன்னாலும் சொல்லலாம்; ஆனால், சூயஸ் நில இடுக்கையும் பனாமா நில இடுக்கையும் கடல் கால்வாய்களாக்கி வானில் பறந்து, நிலத்தின் வயிறகழ்ந்து அதன் கருவிலிருந்து தங்கம் வெள்ளி நிலக்கரி கல்லெண்ணெய் போன்ற செல்வங்களை வெளிக்கொணரும் தற்கால மனிதர் கட்டாயம் கூறமுடியாது! இன்னும் சில காலம் சென்றால் சகாராப் பாலைவனத்தை மனிதன் சோலைவன மாக்கலாம்; வட, தென் துருவப் பாலைவனத்தை மனிதன் தொழில் கூடங்களாக்கலாம். இயற்கைதான் மனித வாழ்வைப் பாதிக்க முடியும். மனிதன் இயற்கையைப் பாதிக்க முடியாது என்ற கூற்றை அறிவு விழிப்புடன் எவரும் கூறமாட்டார்கள்!

ஆயினும் மனிதன் செயல்கள் இயற்கையுடன் போட்டி யிட்டுப் புயலை, நிலநடுக்கத்தை, வெள்ளத்தை, காட்டுத்தீயை, மலைச்சரிவை இன்னும் நெடுநாள் சென்று வருங்காலத்தில்கூட உண்டுபண்ணமுடியாது. கடல் இடப்பெயர்வை உண்டுபண்ண முடியாது. இவை மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை என்பது மட்டுமல்ல; இவை என்றுமுள்ளவை. மனிதன் இயற்கையமைதி கண்டு பயன்படுத்தத் தொடங்கியதற்கு முன்பே உள்ளவை. இவற்றை மனிதன் செயலென்று எப்படிக் கூறமுடியும்? அதுவும் அவன் புறச்செயல் அன்று, மனத்தின் செயல் அன்று; அவன் ஒழுக்கப் பண்பின் விளைவு என்று எப்படிக் கூறமுடியும்?

இயற்கை கடந்த மனிதனின் அழிமதிகள்

இக் கேள்விகள் பொருளற்ற கேள்விகளல்ல. ஆனால் கேள்வி கேட்கும்போதே கேட்பவர் மெய்ம்மையைத் தவறாகப் பொருள்கொண்டு விடுகிறார். மனிதன் செயலால், பண்பால் புயல் முதலிய இயற்கை இடர்கள் ஏற்படும் என்று குறிக்கும்போது நாம் புயல் முதலிய நிகழ்ச்சிகளுக்குக் காரணமே மனிதன்தான், இயற்கைக் காரணங்களாலேயே நடைபெறுகின்றன வாயினும், அவை அவனைப் பாதிப்பதற்கு அவனே பெரிதும் காரணம் என்று தான் நாம் குறிப்பிடுகிறோம்.

முதலாவதாக அவன் இயற்கைக் காரணங்களையே மாற்றியமைக்கலாம்; அல்லது இயற்கை நிகழ்ச்சிகளின் விளைவுகளைத் தவிர்க்கலாம்; மட்டுப்படுத்தலாம். மூன்றாவதாக அவற்றைத் தன் விருப்பத்துக்கேற்ற வகையில் வளைத்துப் பயன்படுத்தலாம். இம்மூன்று வகைகளால் தேவைப்பட்டபோது, தேவைப்பட்ட மாறுதல்களை மனிதனால் செய்ய இயலும். இவ்வகையில் அவன் இயற்கைக் காரணங்களைக் கடந்து அவற்றின் நிகழ்ச்சிக் காரணம் ஆகிறான்.

இயற்கை நிகழ்ச்சிகளால் வரும் இடர்கள் மனிதன் செயலால் மனிதனைப் பாதிக்கவோ பாதிக்காதிருக்கவோ முடியும் என்பதை அனுபவ வகையில் காணலாம். பெருநகரங்களில் வாரந்தோறும் - சில சமயம் நாள்தோறும் - வண்டிகளின் மோதல்களால் உயிரழிவும் உறுப்பழிவும் பொருளழிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்கிறோம்; கேட்கிறோம்; பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாகரிக நாட்டு அரசியலார் இவற்றைத் தீர உசாவி ஆராய்ந்து அவற்றின் மூல காரணங்களை விலக்க அல்லது மட்டுப்படுத்த, விளைவுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க வழி காண்கின்றனர்.

போக்குவரவுப் பாதைகளின் நெருக்கடிகளைக் குறைக்கப் பாதைகளைப் பெருக்கல், அகலமாக்கல், ஊர்திகளுக்கு விதிகள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் அமைத்தல், ஊர்தியோட்டிகளின் தகுதியை உயர்த்தல், எச்சரிக்கைகளை மிகுதியாக்கல், நடப்பவர் களுக்குரிய விதிகள் அமைத்தல், அறிவுரை எச்சரிக்கை தருதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் இடர்கள் குறைகின்றன.

தற்செயல் இடர்கள் கூட இங்ஙனம் தற்செயல் இடர்கள் அல்ல, இயல்பாக நடைபெறுகிற, ஆயினும் விலக்க முடியாத நிகழ்ச்சிகள் அல்லது தீங்குகளே என்று அறிகிறோம். அரசியலார் முயற்சியினால் இத்தீங்குகள் குறைய மட்டுமே வழி ஏற்படுகிறது. அரசியலார் பொறுப்பை முழுதும் ஊர்தி வலவரும் பொது மக்களும் பகிர்ந்து கொண்டால் தீங்குகளைக் கிட்டதட்ட முற்றிலும் விலக்கமுடியா தென்றில்லை.

இவ்விடர்கள் இயல்பானவை அல்லது தற்செயலானவை என்று மேலீடாகத் தோற்றுவதற்குக் காரணம் அது ஒருவர் இருவர் செயலால் நேர்பவை அல்ல, பலர் செயலால் நேர்பவை என்பதே. சிலசமயம் இவை பலநாளைய கோளாறுகள், குறைகள் காரணமாகவும், பல தலைமுறைக் கோளாறுகள் காரணமாகவும் நிகழலாம்.

எடுத்துக்காட்டாக, அரசியலார் நீண்டகாலமாக வளர்ந்து வரும் போக்குவரவில் கவனம் செலுத்தாது. பாதைகளைச் சீர்குலைய விட்டிருக்கலாம்! ஊர்தியின் உடைமையாளர் அதன் பகுதிகளை நீண்டநாள் தேயவிட்டு தேய்மானத்தைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கக் கூடும். ஊர்திவலவன் குறிப்பிட்ட நாளிலோ அல்லது வழக்கமாகவோ குடிப்பவனாக இருக்கலாம்! அவன் குடும்பவாழ்வில் அவன் மனைவி குறிப்பிட்ட நாளிலோ அல்லது வழக்கமாகவோ சண்டையிட்டுப் பூசல் விளைத்து வந்திருக்கக் கூடும். ஒருவேளை ஆட்சி காரணமாகத் தொழிலாளர் வகுப்பிலோ, சமூகங் காரணமாக அல்லது அவன் தனிப்பட்ட பிழை காரணமாக அவன் குடுத்பத்திலோ மீளா வறுமை தாண்டவமாடலாம்.

இத்தனை காரணங்களாலும் ஊர்தி அடிக்கடி இடருக்கு ஆளாகலாம்! பொது மக்களிடையிலும் இதுபோல எண்ணற்ற குறைகளிருக்கலாம். அரசியலார், வலவர், பொது மக்கள் மூவரும் திருந்துவதைப் பொறுத்தது இவ் இடர் காப்புகள்.

அறிவுடைய அரசிலார் மூவருக்கும் முதல்வராயிருந்து இடர் காப்பதும் உண்டு. இருப்பூர்திகளுக்குத் தனிப்பாதை அமைத்தல், பாதைகளின் மேலாக, அல்லது கீழாகப் பாலங்கள் அமைத்தல், ஊர்திகளுக்குச் சுரங்கப் பாதை அமைத்தல், பள்ளி முதலிய பொதுவிடங்களைப் போக்குவரவு பாதையிலிருந்து ஒதுக்கமாக்குதல் ஆகியவை இத்தகைய முயற்சிகள். நாட்டுப் போக்குவரவுப் பாதைகளை நகர்கள் ஊர்கள் வழியே செல்ல விடாமல் பண்டைக் கீழநாட்டு அரசர் பலர் காத்து வந்துள்ளனர்.

தற்செயல் இடர்கள்: கூட்டுப் பொறுப்பும் தனிப் பொறுப்பும்

அறிவிலார் மட்டும் தம் முயற்சியால் தற்செயல் இடர்களைப் பெரிதும் குறைத்து எல்லாருக்கும் நலம் பெருக்க முடியும். ஆனால் ஒரு ஊர்திவலவன் நினைத்தால், எல்லா இடரும் தடுக்க முடியாவிட்டாலும் தன் ஊர்தியளவில், முழுதும் இடர்விலக்க முடியும். பொதுமக்களில் ஒருவன் நினைத்தால் எந்த ஊர்தியையும் காக்க முடியாவிட்டாலும் தன்னளவில் எல்லா ஊர்திகளிலிருந்தும் முழுப்பாதுகாப்புப் பெறமுடியும்.

தற்செயல் இடர்களைப் போலவேதான் இயற்கை நிகழ்ச்சிகளும் அவற்றை மனிதன் தனித்தோ சேர்ந்தோ விலக்கக்கூடும் அல்லது இடர்காப்பேனும் பெறக்கூடு மாதலால், அவன் அவற்றுக்குத் தன்னளவில் மறைமுகமாகக் காரண மாகிறான். சில சமயம் அவன் கவனக் குறைவினால் அல்லது அறியாமையினால், இயற்கையின் நலங்கள் தீமையாகக் கூட மாறுகின்றன. இங்கே அவன் நேரடியாகவே இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணமாகிறான். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தருவோம்.

இயற்கையின் வளத்துக்கு வெயில், காற்று, மழை ஆகிய மூன்றும் காரணமாகும். வெயில் காற்றையும், காற்று மழையையும் உண்டு பண்ணுகிறது. இங்ஙனம் ஒன்றற்கொன்று காரணமாகவும், ஒன்றுடனொன்று உதவியாகவும் உள்ள இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று கேடாகவும் ஒன்றுக்கொன்று மாறாகவும் இயங்க முடியும். இவ்விடங்களில் மனிதன் செயல் இயற்கையின் செயல்களுக்கு ஒப்பாகி விடுகிறது. மழையினால் வளர்ந்த காடுகளை மனிதனும் மனிதன் வளர்க்கும் கால்நடைகளும் அழிகின்றன. இயற்கைச் சூழலில் விலங்குகளும் உயிரினங்களும் பெருகுவதைவிட மனிதன் அமைக்கும் சூழலில் மனிதனும் விலடக்கினங்களும் பேரளவாகப் பெருகுகின்றனர். இதனால் இயற்கையினளவில் காடுகள் வளர, இயற்கையினாற்றல் கடந்து மனிதன் அவற்றை அழிக்கிறான். காடு குறைவதால் மழையும் குறைகிறது. நிலத்தின் கரைவும் மிகுதியாகிறது. ஒருசில நூற்றாண்டுகளில் மனிதன் செயலால் சோலை வனங்கள் பாலைவனங்களாகின்றன. வளப்பமிகுந்து தென்றல் உலவிய இடங்களில் அனற்காற்றும் புயலும் சூறாவளியும் எழுகின்றன.

புயல், சூறாவளி சமுதாயப் பொறுப்பு

இது மட்டுமன்று. இயற்கை தன்னைத்தானே துப்புரவு செய்து கொள்கிறது. விலங்கினங்கள்கூட இத் தொழிலை இயற்கைவழி நின்று செவ்வனே நிறைவேற்றுகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் அறிவைச் சிலசமயம் இயற்கை எல்லை கடந்து தீமை பெருக்கப் பயன்படுத்துகிறான். நகரங்களில் மனிதன் செய்யும் துப்புரவுக்கேடு இயற்கையின் துப்புரவுப் பழியாளர்களான மழை, காற்று, வெயில் ஆகியவற்றின் துப்புரவு ஆற்றல் கடந்து விடுகின்றது. இயற்கையில் எங்கும் எளிதில் காண முடியாத அருவருப்பான சூழல்களை நதரங்களில் காணலாம்.

இதுமட்டுமோ? மிகுசெல்வம் காரணமாக உழையாதவ ர்களையும், மிகுவறுமை காரணமாக உழைத்து உழைத்துப் பாடுபட்டும் உருக்குலைபவர்களை நகரவாழ்வு பேணுகிறது. அத்துடன் உழைக்கும் பழக்கத்தையே கைவிட்டும் உழைப்புக்கு இடம் கிடையாமலும் அலைந்து திரிபவர்களை நகரங்களிலேயே காணலாம். இவர்கள் சோம்பல் வாழ்வின் தொலைவிளைவு இயற்கையின் பெரும் தீங்குகளைவிட எவ்வளவோ பெரிது. உழையாது உண்ணும் உயிரினங்களை மனித சமூகத்திலன்றி இயற்கையில் எங்கும் காண முடியாது. இயற்கை உழையாதவர்க்கு உணவு அளிப்பதேயில்லை. ஏனெனில் உழையாது உண்ணும் சூழலில் இயற்கையே வளங்குறையும். மனித சமுதாயம் உழையாத உலுத்தர்களை உண்பிப்பதன் மூலம் இயற்கையின் வளத்தையே சூறையாடிப் பஞ்சத்தை மட்டுமன்றி, புயலையும் சூறாவளியையும் தோற்றுவித்து விடுகிறது.

இயற்கையமைதி வேறு, தெய்வ அமைதி வேறு என்பது எவ்வளவு தவறோ, அதே அளவு இயற்கையுன் செயல் வேறு, மனிதன் செயல் வேறு என்பதும் தவறேயாகும் என்பதை மேற்கூறியவற்றால் உணரலாம். உண்மையுல் இதற்கு இத்தனை வளையவளையச் சுற்றி வாதமிடக்கூடத் தேவையில்லை. மனிதனும் இயற்கையின் ஒரு பகுதியே. மனிதன் செயல்கள் உண்மையில் இயற்கையின் செயலின் ஒரு பகுதியே.

இயற்கையின் செயலில் உயிரிலா உலகின் செயல்விட உயிருள்ள உலகின் செயலே முக்கியமான பகுதி. ஏனெனில் அதில் இயற்கையின் உயிரிலாப் பகுதியின் செயலுடன் உயிரின் செயலும் இணைகின்றது. உயிரின் செயலிலும் இடம் பெயரா உயிராகிய செடி கொடிப் புல்பூண்டின் செயலினும், இடம் பெயரும் உயிரினங்கள் செயல் சிறந்தது. அதனுள்ளும் படிப்படி யாகப் புலனறிவில் உயர்ந்த விலங்கினங்கள், புள்ளினங்கள் செயலும், அவற்றுள்ளும் பகுத்தறிவுடைய மனிதன் செயலும் முக்கியமான பகுதியாகும்.

மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாயினும், இயற்கை அவனை இயக்குகிறது என்பதைவிட, அவன் இயற்கையை இயக்குகிறான் என்பதே பொருத்தமாகும். இயற்கையை நாம் ஒரு பாரிய உடலாக உவமிக்கலாமானால், உயிரினங்கள் அதன் நாடி நரம்புகள் குருதி நாளங்கள்; மனித இனம் அதன் மூளை என்னலாம்.

மனிதனின் எல்லையற்ற ஆற்றல்

மனிதன் உடல் இயற்கையின் உடலின் ஒருபகுதி. மனிதன் உயிர் இயற்கையின் உயிரில், அதாவது இயற்கையை இயக்கும் ஆற்றலில் ஒரு பகுதி. மனிதன் அறிவோ இயற்கை அமைதியையே இயக்கும் தெய்விக ஆற்றலின் ஒரு பகுதி. இதனால்தான் மனிதன் இயற்கையுன் முழுநிறை உறுப்பாகவும், இயற்கையை இயக்கும் இறைவனின் ஒரு கூறாகவும் குறிக்கப் பெறுகிறான். இயற்கைப் பரப்பிலுள்ள மாடகூடங்களில் தலை நெடுமாடத்தின் உயர்கோபுர முகட்டின் உச்சி மணிமகுடம் அவன்!

அவன் தன்னை யறியக் கூடுமானால், இயற்கையை அறியக்கூடும்; இறைவனை அறியக்கூடும்! அவன் தன்னை இயக்கக் கூடுமானால், கட்டாயம் இயற்கையை இயக்கக்கூடும்; இறைவனையும் தன்வயப்படுத்த முடியும்! ஆயினும் அவன் இயற்கையின் ஒரு பகுதியேயாதலால், இயற்கையோடன்றியே இயற்கையை இயக்கமுடியும். அவன் இறைவனின் ஒரு பகுதியாதலால், இறைவனோடொன்றியே இறைவனைத் தன்வயப்படுத்த முடியும்.

இயற்கை யமைதியையோ, தெய்விக அமைதியையோ அவன் மீற முடியாது. மீறிமுயன்றால் இயற்கையின் முகட்டில் தான் வகிக்கும் உயர்படியாகிய மனிதப்படியினின்று படிப்படியாக இறங்கவே நேரும். ஆனால் இயற்கையமைதியையும் அதை இயக்கும் தெய்விக ஒழுங்கமைதியையும் உணர்ந்து அவற்றை இயக்கினால், அவனால் ஆகாதது என்று எதுவும் இருக்கமுடியாது.

மனிதன் உடல் இயற்கையின் உடலின் ஒரு பகுதி என்று நாம் மேலே குறிப்பிட்டது வெறும் உவமையோ, அணிந்துரையோ அல்ல. அது நூற்றுக்கு நூறு முழு மெய்ம்மையேயாகும். இயற்கையை நுனித்து ஆராய்பவர்களும், உடலை நுனித்தாராய் பவர்களும் அவற்றின் தன்மைகளில் ஒப்புமை காணாரிர்.

உலகின் திண்கூறு கடும்பாறை. உடலின் திண்கூறு என்புச் சட்டம். உலகின் உயிராதாரக்கூறு மண். உடலின் உயிராதாரக் கூறு சதையும் தசை மண்டலமும். உலகின் உயிரியக்கம் நீராலும் காற்றாலும் இயங்குகிறது. உடலின் உயிரியக்கம் குருதியோட்டத் தாலும் உயிரோட்டத்தாலும் நடைபெறுகிறது. உலகின் இயக்குமாற்றல், வெப்பம் ஒளி மின் ஆற்றல்கள் உடலின் இயக்குமாற்றல் ஐம்புல ஆற்றலும் அறிவாற்றலும்.

இவ்வொப்புமைகள் உடலும் உலகும் ஒரு தன்மையன என்பதைத்தெள்ளத் தெளியக் காட்டுகின்றன.

தன்மையில் மட்டுமல்ல, மனிதன் உடலும் உலகும் ஒத்திருப்பது. உலகின் பன் மண்டலங்களையும் பகுத்தாராய்ந் தவர்கள் அவற்றில் கண்ட மூலப்பொருள்களை வகுத்துரைத் தார்கள். உடலின் பல கோசங்களைப் பகுத்தாராய்பவர்களும் அதுபோல அவற்றின் நுண்கூறுகளின் ஆக்கங்களைப் பகுத்துரைத்துள்ளார்கள். மிகப் பல கூறுகள் இரண்டனுக்கும் பொதுவாகவே உள்ளன.

வலிமை கடக்கும் மென்மை

உடலுக்கும் புற இயற்கைக்கும் உள்ள இதே பொருத்தத்தை உயிருக்கும் இயறகையின் அகக்கூறான தெய்விக ஒழுங் கமைதிக்கும் இடையே காணலாம். அயற்கையின் புற ஆற்றல் வலிமையால் இயங்குகின்றது. இது உடலின் ஆற்றலுக்கு ஒப்பு ஆகும். இயற்கையின் அக ஆற்றல் மெய்ம்மையால், நேர்மையால், ஒற்றுமைப் பண்பாகிய அன்பினால் இயங்குகிறது. இது உயிராற்றலுக்கு ஒப்பு ஆகும். இயற்கையின் புற ஆற்றலின் வலிமையிடையே வலிமை கடந்த தகுதியை இயங்க விடுவது அதன் அக ஆற்றல் அல்லது தெய்விக அமைதியே. உயிராற்றலிலும் நாம் இதே பண்பைக் காணலாம்.

உயிரில் ஆண் பெண்ணையோ பெண் ஆணையோ வலிமையற்றதெனக் கொள்றழிப்பதில்லை. பேணி வளர்க்கின்றன. தாமே இயங்க வல்லவர் அல்லர் எனத் தாய் தந்தையர் சேய்களைக் கைவிடுவதில்லை. நேர்மாறாகத் தம் வருத்தம் பாராமல், தாம் குறைபட்டும் வளர்க்கின்றனர். ஒவ்வொருயிரும் தன்னைக் கடந்து படிப்படியாகப் பிற உயிர்களிடத்தும் தம் தலைமுறை கடந்து மறு தலைமுறைகளிடத்தும் பற்றும் பாசமும் பரிவும் கொள்கின்றன. வலியார் மெலியாரை வாட்டி அழிப்பதற்கு மாறாக வலியார் மெலியாரைப் பேணுவதை நாம் உயிர்வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும், மனித நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் காண்கிறோம்.

வலியார் மெலியாரைப் பேணுவது வலிமையைக் குறைப்பதாகச் சிலர் கொள்ளக் கூடும். இதுவே விலங்குப் படியின் அறிவு. வலிமையான விலங்கு மற்ற விலங்குகளைப் பசிக்காகக் கொன்று தின்பதையும், சில சமயம் பசி காரணமில்லாமலே கொன்றழிப்பதையும் காண்கிறோம். உயிர் படியிலுள்ள விலங்கினங்களும் புள்ளினங்களும் மனிதனும் இவ்வாறு செய்வதில்லை. இதனால் இவ்வினங்கள் தேய்ந்து நலியவில்லை. அதற்கு மாறாகத் தகுதியின் மிகுதியால் தழைகின்றன. இங்கே எழும் தகுதி வலியார் மெலியார் என்ற வேறுபாட்டடிப்படை யான வலிமையன்று. அதனினும் உயரிய, கூட்டுறவடிப் படையான வலிமை ஆகும்.

காலில்லாத ஒருவனும் கண்ணில்லாத ஒருவனும் கூடியவழி, கண்ணில்லாதவன் காலில்லாதவனைத் தூக்கிக் கொண்டு செல்கிறான். இங்கே வலிமை செயலாற்றியிருந்தால், கண்ணில்லாதவனைக் காலில்லாதவன் கொன்றிருக்கலாம். அங்ஙனம் செய்யாது அவர்கள் தங்கள் வேறு வேறு வகைப்பட்ட வலிமைப் பண்புகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒருவர் கண்கள் இருவர்க்கும் பயன்பட்டன. ஒருவர் கால்கள் இருவர்க்கும் பயன்பட்டன. இங்கே வலிமைவழி என்ற அறியாமை வழிவகுக்கும் தகுதி வழி என்ற அறிவு வழிக்கும் உள்ள முதல்படி வேறுபாட்டைக் காண்கிறோம்.

வலிமையுடையவர் என்பவர் உண்மையில் ஒருவகை வலிமையே உடையவர். அவர்கள் அவ் வலிமையை இனநலத்துக்குப் பயன் படுத்தி, இனநலத்தின் பிற வலிமைகளில் பங்குகொண்டு தம்மையும் வளர்த்து இனத்தையும் வளர்க்கிறார்கள்.

எல்லாருக்கும் வேறுவேறு வலிமையுண்டு என்று அறிவதே தகுதியின் முதல் அளவுக்கூறு. ஒருவகை வலிமையே வலிமை என்று எண்ணும் அறியாமையே விலங்குப் படியின் அறியாமை ஆகும். கொடுமையே, வலிமை என்று கருதும் விலங்குப் பருவத்தின் கடைப்படி அதுவே.

தகுதியின் இரண்டாம் அறிவுக்கூறு இனம் ஒன்று, தனியுறுப்பினர் அதன் கூறுமட்டுமே என்ற அறிவு. இனம் வாழாவிட்டால் உறுப்புக்கள் வாழமாட்டா. தனியுறுப்பின் மட்டற்ற வளர்ச்சி உடலுக்கு நோய்தரும் வலிமையைக் குறைக்கும். சரிசம வளர்ச்சியே உயர் நலம் பேணி உறுப்புக்கு நீடித்த உழைப்பும் வலுவும் பயனும் தரும் என்பதே மூன்றாம் அறிவுக் கூறு கடைசி அறிவுக்கூறு உறுப்புக் கடந்து முழுமுதலிலேயே உறுப்பின் வாழ்வு இருக்கிறது என்பதே.

தனிமனிதன் இவற்றை அறிந்து தன்னைக் கடந்து வாழும் இனவாழ்வே நாகரிகம் ஆகும்.

இற்றை உலகும் பண்டை உலகும்

இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித இனம் பொதுவாகப் பல துறையிலும் நம்பமுடியாத அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இன்னும் அது ஆற்றலை வளர்க்கும் முறையில் வளர்கின்றதே யன்றிக் தகுதியை வளர்க்கும் முறையில் வளர வில்லை. இயற்கையின் அமைதிகளை நாம் கண்டுணர்கிறோம், கையாளு கிறோம். ஆனால் இயற்கைவழி நிற்கவில்லை. இயற்கையின் உயிர் நிலையாகிய தகுதியை, அதனை இயக்கும் தெய்விக அமைதியை அறியவோ கையாளவோ மறுக்கின்றோம். இதற்கு அடிப்படை யான காரணம் ஒன்று உண்டு.

மனித இனத்தில் அறிவு வளர்கிறது. ஆனால் அறிவு தகுதியை வளர்க்கவில்லை. இன நலத்துக்குப் பயன்படவில்லை. ஏனெனில் அவ்வறிவை இயக்குபவர்கள் இன நலத்தில் அக்கறை யுடைய நல்லறிஞரல்லர். தன்னல வேட்டையில் ஈடுபட்டு உலகைச் சூறையாடுபவர்கள் கையில் பட்ட அறிஞர் அறிவு உலகில் உயர்வு தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் வளர்த்து பஞ்சம் வறுமைபோர் ஆகிய அழிவுச் சக்திகளுக்கே ஆக்கம் தருகிறது.

உலகின் முன்னேற்றம் இங்ஙனம் புறத்தோற்றத்தில் மட்டும் முன்னேற்றமாய் நிலவுகிறது. அதனை முன்னேற்றப்பாதையில் செலுத்துவதற்கான தகுதி அல்லது அறிவுநலமுடைய தலைவர்கள் அல்லது அறிஞர்கள் இன்று தோன்றவில்லை. தோன்றினாலும் வளரமுடியவில்லை. வளர்ந்தாலும் தம்மிச்சை யுடன் செயலாற்ற முடியாது தன்னலவேடரின் கைப்பாவை யாக்கப்படுகின்றனர்.

பண்டை உலகில் அறிவும் ஆற்றலும் இன்றைய அளவில் இல்லை. ஆனால், அதனை இயக்கியவர், அதுவரையில் நல்லறிவுரை தந்து எச்சரித்த நல் அறிஞர் பலர் இருந்தனர். இந்நாளைவிட அத்தகையவர் தொகையும் அன்று பெரிது. அவர்களுக்கிருந்த வாய்ப்பும் இன்றைவிட அன்று மிகுதி என்னல் வேண்டும். ஆயினும் அவர்கள் சொற்கள் அன்றே மிகுதி பயன் அளிக்கவில்லை. ஏனெனில் பயன் அளித்திருந்தால், உலகம் இன்றைய நிலையை எய்தியிராது. ஆனால் அவை இன்று பலருக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காய் விட்டன.

செவி கொடுப்பவர்களுக்கு அச் சொற்கள் இன்னும் எச்சரிக்கையாகவே இயல்கின்றன. தகுதியறிந்தவர்களுக்கு அவை இன்னும் ஊக்குரையாகவே இலங்குகின்றன. உலகம் தான் செல்லும் பாதை தவறானதென்று கண்டு நேர்வழி நாடும் நாளில், அச் சொற்கள் முன்னிலும் பயனுடையவனவாதல் உறுதி. ஏனெனில் இன்று தவறான தலைவர்களால் தவறான பாதையில் செலுத்தப்படும் அறிவு. அந்நேர்வழியடைந்தும் உடன் தானே அரும்பயன் விளைவிப்பது உறுதி.

காலம்கடந்த பெருமையுடைய பண்டை அறிவர்

பண்டை உலகம் எவ்வளவு பிற்பட்டதாயினும் பண்டை அறிவர் எவ்வளவு முற்பட்டவர் என்பதை விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் கனல்தெறிக்க உரை மிழற்றும் அறிவர் ஏமாஸ் மொழிகள் காட்டுகின்றன;

“மக்கள் நேர்வழி காணவில்லை. அடக்கு முறையும் சூறையாட்டும் கொள்ளையும் நடத்தி அரண்மனை மாடங்களில் செல்வங் குவிக்கின்றனர். இதனைக் கடவுள் காண்கிறார். கண்டு உரக்க அநீதியை நிறைக்கிறீர்கள். அதற்குச் சரிநிகரான அநீதி உங்களைச் சுற்றிலும் எழும். அந்த அநீதி உங்கள் அநீதி மாடங்களைக் கீழடக்கித் தகர்க்கும். அந்த அநீதி அநீதிசார்ந்த உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பறிக்கும். உங்கள் மாடங்கள் மண்ணுடன் மண்ணாகும்.”

துடித்துத் தெறிக்கும் இக் கடுஞ்சின மொழிகள் அன்றைக்கும் எச்சரிக்கை, இன்றைக்கும் எச்சரிக்கையே! உலகம் வளர்ந்திரக்கிறது; தன்மை மாறவில்லை. அதுமட்டுமன்று, அன்று எச்சரிக்கும் ஏமாஸ்கள் மிகுதி. இன்று அவர்கள் அருகிவிட்டனர். ஆயினும் ஏமாஸின் மொழிகள் காலங்கடந்து இன்னும் செயலாற்றவல்லன. ஏனெனில் தீமையின் தன்மை மாறவில்லை.

அன்று உலகு சிறிது. இன்று பெரிது. அன்று நினெவே, இன்று நியூயார்க்! அன்று ஜெருசெலம்; இன்று லண்டன்! 1’நினெவேயும் ஜெருசெலமும் அன்று அவற்றுக்குச் செவிசாய்க்காத அறிவு மொழிகளுக்கு லண்டனும் நியூயார்க்கும் செவிசாய்க்க வேண்டும். இனித்தான்!

நேர்மை நெறியும் அன்பு நெறியும்

நேர்மையைச் சிறப்பிக்கும்போது அது கடுநேர்மை என்று சிறப்பிக்கப்படுவதைக் கேட்கிறோம். அன்பு சிறப்பிக்கப்படும் போது அதனைக் கனிந்த அன்பு என்று சிறப்பிக்கக் காண்கிறோம். கடுமை நேர்மையின் பண்பு, கனிவு அன்பின் பண்பு என்றும் இதனால் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பிழைபாடான கருத்து1 நேர்மை நெறியும் அன்பு நெறியும் தெய்விக அமைதி சார்ந்த இரண்டு நெறிகள். இரண்டும் தெய்விக அமைதியின் அடிப்படைக் கூறுகள். இரண்டும் நலம் பயப்பவை. எனவே இவற்றிடையே முரண்பாடு இருக்க முடியாது. நல்லமைதிகள் ஒன்றுடனொன்று இயைபுடையவை யாகவே இருத்தல் வேண்டும்.

நேர்மையும் அன்பும் வேறுபாட்டவை, முரண்பட்டவை என்ற கருத்து அவற்றைப் பற்றிய அறியாமை காரணமாக எழுவது. அதுமட்டுமன்று அவற்றின் தனித்தனி பண்புகளாகக் கொள்ளப்படும் கடுமை, கனிவு ஆகியவையும் உண்மையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான, எதிரெதிரான பண்புகளல்ல. கடுமையிருக்குமிடத்தில் கனிவும், கனிவு இருக்குமிடத்தில் கடுமையும் இருக்க முடியாதென்றில்லை. வெளிப்பார்வைக்கு நேர்மையில் கடுமை இருப்பதாகத் தோற்றுகிறது. ஆனால் அக் கடுமையினூடாக உள்ளாரக் கனிவும் உண்டு. இதுபோலவே அன்பினிடம் மேற்பார்வைக்கு கனிவு மட்டும் இருப்பதாகத் தோற்றுகிறது. ஆனால் உள்ளீடாக அதில் கடுமை இல்லாதிருப்ப தில்லை.

கனிவில்லாக் கடுமையே கொடுமை ஆகும். நேர்மையின் கடுமை இத்தகைய கொடுமை அல்ல என்பது தெளிவு. அது போலக் கடுமை இல்லாத கனிவு உணர்ச்சிக் குழைவாய் விடும். அதில் உள்ளார்ந்த பற்றுறுதி இருக்கமுடியாது. அன்புடையார் கனிவு இத்தகைய நிலையற்ற உணர்ச்சிக் குழைவு என்று யாரும் கருதமாட்டார்கள்

குழந்தையின் மனம் போன போக்கில் இழைந்து கொடுக்கும் தந்தையின் செயலை விடத் தந்தையின் கடிந்துரையில் அன்புமிகுதி. கண்டிப்பு இல்லாத உணர்ச்சி அன்பாகாது, உணர்ச்சி மயக்கமேயாகும். குழந்தையிடத்தில் உண்மையன்பும், அதன் எதிர்கால நலத்தில் அக்கறையுமுள்ள எந்தத் தந்தையும் அதனை நன்கு பயிற்றுவிக்கக் கடுமுயற்சி எடுக்காமலிருக்க முடியாது. அது எப்போதும் கனிவின் பக்கம் மிகுதி சாயாமலும், கடுமையின் பக்கம் மிகுதி சறுக்காமலும் இரண்டு பண்புகளின் இனிய நடுவரைமீதே அருமுயற்சியுடன் செல்லும்.

நல்ல தோழனின் அன்பில்கூட இத்தகைய இனகடுமை சிறிது உண்டு. ஆனால் தந்தையின் அன்பில் அது ஒரு செம்பாதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் குழந்தையின் வாழ்வில் தோழனுக்கு அக்கறை உண்டு. தந்தைக்கு அக்கறை மட்டுமல்ல, பொறுப்பும் மிகுதி.

தந்தையின் அன்பில் கடுமை இருப்பது போலவே நேர்மைக்குரியவரான துரறவர், இறைவர் ஆகியவர் நேர்மை யிலும் உள்ளூரக் கனிவு மிகுதி உண்டு. அவர்கள் தண்டனையில் பழியுணர்வு, பகைமை, சீற்றம் கிடையாது. தண்டனை கொடுக்கும்போதே பரிவும் கவலையும் உடன் கொள்வர் தண்டனையால் எதிர்பார்க்கப்படும் பயன் கிட்டியதே, தண்டனையை மேலும் வளரவிடாமல் நிறுத்துவர். சில சமயம் தண்டனையை விடத் தண்டனை யச்சமே போதியதென்று கருதினால், அவர்கள் அச்சுறுத்தியமைவர். அச்சுறுத்தலினும் எச்சரிக்கை பயனுடையதென்று அவர் கருதினால், எச்சரிப்புடன் நிறைவு பெறுவர்.

இச் செயல்களின் உள்ளார்ந்த அன்பு தக்க செவ்வியல் குற்றம் செய்தவன் எள்ளத்தில் புகுந்து இயக்கும். தண்டனையை விடப் பன்மடங்கு வலிமை இந்த உள்ளார்ந்த கனிவுக்கு உண்டு.

அன்பும் நேர்மையும்

கனிவு, கண்டிப்பு ஆகியவற்றின் உள்ளார்ந்த ஒருமைப் பாட்டை விவிலிய நூலுரை ஒன்று தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டுகிறது “ஒவ்வொரு மனிதனும் என்ன விதை விதைக்கிறானோ, அந்தப் பயிர்தான் அறுவடை செய்வான்” என்பதே அது. அவரவர் செய்த நற்செயல்களின் பலனை அவரவர் துய்க்காமல் இரார். இது அன்பின் பண்பு. அவரவர் செய்த தீயசெயலின் பயனையும் அவர்கள் நுகராமலிரார். இது நேர்மையின் பண்பு.

உயர்வு தாழ்வு, வேண்டுதல் வேண்டாமை இன்றி எல்லாருக்கும் அவரவர் செயற் பயனை நுகர்வித்தல் ஒத்த அன்பு அதாவது நேர்மையின் பாற்படும். இதன் நேர்மையை யாவரும் கொள்கையளவில் ஒத்துக் கொள்கின்றனர். ஆயினும் தத்தமக்குத் துன்பம் வந்துவிடத்தில் பெரும் பாலான மனிதர்கள் இந்நேர்மை யமைதியை மதிக்க மறுக்கிறார்கள். “ஐயோ நாங்கள் எத்தகைய தீங்கும் செய்தோமில்லையே! தீங்கற்ற எமக்கு இந்நேர்மையற்ற தீங்கு வந்துற்றதே!” என்று புலம்புகின்றனர்.

நேர்மையமைதியில் கருத்துச் செலுத்தியிருந்தால், அவர்கள் வந்து தீங்குக்கு வீணே வருந்தாமல், தீங்குக்கு மூலக்காரணமான தீய பண்புகள் யாவை என்பதைக் கண்டு உணர்வதிலேயே கவனம் உடையவர்களாயிருந் திருப்பர். நேர்மையற்ற தீங்கைத் தமக்கு அனுப்பியதாக இறைவன் மீதும் இயற்கை மீதும் பழி சுமத்தியிருக்க மாட்டார்கள்.

தெய்வத்திடம் இங்ஙனம் ஏற்கனவே நேர்மைக் கேட்டைச் சுமத்தியதனுடன் நில்லாமல், பலர், சிறப்பாகக் கிறித்தவர் பலர், மேலும் நேர்மைக் கேடான பண்பை இறைவனிடம் எதிர்பார்க் கின்றனர். “இறைவனே நேர்மையமைதிப்படி எம்மைத் தண்டித் தால், நாங்கள் தாளமாட்டோம். நேர்மையை ஒதுக்கி வைத்து, எங்கள் தீங்குகளுக்கு மன்னிப்பு அளித்து, எங்கள் மீது உம் கருணையைப் பொழியும்” என்று அவர்கள் மன்றாடுகிறார்கள்.

அந்தோ! தம்மவர், பிறர் என்றும், வேண்டியவர் வேண்டாதவர் என்றும் இரக்கம் காட்டிக் கையுறை பெற்றும் பெறாதும் நேர்மை நெறியினின்று விலகின் ஒருதலைத் திரிப்புச் செய்யும் உலகிலுள்ள கீழ்த்தரமுறைவருடன் கடவுளையும் இவர்கள் சேர்த்துவிட்டார்கள் போலும்! தீங்கை மன்னிக்கும் ஒரு நேர்மை, நன்மையை எப்படி மதிக்கமுடியும்? கெஞ்சுவதற்காகத் தீமையையே மன்னித்தல், ஒரு தீமையை இரு தீமைகளாக ஆக்குவதன்றி வேறல்ல. செய்த தீமை ஒரு தீங்கு கெஞ்சுதல் மற்றொன்று. கெஞ்சுபவர்க்குத் தீமை மன்னிப்பும் நலமும் செய்வது, கெஞ்சாத நலம்புரி கொள்கையினரை அவமதிப்ப தாகவே அமையும்.

தந்தையை ஒத்த இறைவனிடம் இத்தகைய வேண்டுதல் களைச் செய்யும் மாந்தர் ஒழுக்கமுறைமையின் அறிவிற் கடைப்பட்டவர் ஆவர். அவர்கள் குடியாட்சிக்கு மட்டுமின்றி, நல்லாட்சிக்கே தகாதவர்கள். ஏனெனில் அவர்கள் சரிசம நேர்மையுடைய செங்கோல் மன்னனை மதியாமல், ஒருதலை நேர்மையுடைய கொடுங்கோலனையே அவாவுவர்.

புறத்தே அன்பும் அகத்தே நேர்மையும் உடையவர்களையே நாம் அன்புடையவர்கள் என்கிறோம். அகத்தே அன்பும் புறத்தே நேர்மையும் உடையவர்களையே நாம் நேர்மையுடையவர்கள் என்று கருதுகிறோம். இருசாராரிலும் நேர்மைமிக்கவர் யார் என்று கூறத் தேவையில்லை. புறத்தே நேர்மையும் அகத்தே அன்புமுடையவர்களே நேர்மைமிக்கவர் என்று யாவரும் ஒத்துக் கொள்வர். ஆனால் அன்புமிக்கவர்களும் அவர்களேதான், புறத்தே அன்பும் அகத்தே நேர்மையும் உடையவர்களல்லர். ஏனெனில் புறநேர்மை அவர்கள் நேர்மையை வலியுறுத்துவது போல, அக அன்பு அவர்கள் அன்பை வலியுறுத்துகிறது.

மேலும் நேர்மை புறச் செயலிலேயே செயலாற்ற வேண்டியது. அன்பை அதன் நீடித்த தொலைவிளைவிலேயே காணமுடியும். ஒருவரது தீமையின் விளைவை அவர்கள் உடனடியாகத் துய்த்து அதன் படிப்பினைகளை அறிய விடுவதைவிட நேர்மையும் வேறில்லை. உண்மை அன்பும் அதுதான். உடனடியாக விளைவை நுகரவிடாததனால், அவ் விளைவு நேராமற் போவதில்லை. புற அன்புச் செயல் அதனை நாட்கடத்த மட்டுமே பயன்படும்.

உடனடியாக நேராக விளைவின் காரணகாரியத் தொடர்பு முறிவதால், அதன் படிப்பினைகளையும் நுகர்பவர் சரிவரப் பெறுவதில்லை. தீமை விரைவில் அகலுவதை இது தடுக்கிறது. எனவே புற அன்பு நேர்மையுமன்று, அன்புமன்று என்பதைக் காணலாம்.

சமயப் பண்பின் படிகள்: வழிபாடு, ஈடுபாடு, மெய்ப்பாடு, வினைமுறை

தீமையை அடுத்துத் தீயவிளைவு ஏற்படுவதனால், மேலீடாகப் பார்ப்பவர்களுக்குத் துன்பம் மிகுதி என்று தோற்றுவது இயல்பே. ஆனால் இதில் புறத் துன்பத்திலும் அகத் துன்பம் அதாவது துயரே மிகுதி புறத்துன்பம் படிப்பினை தருவதில் தளர்வுடையதாதலால் சூழ்நிலையை எளிதில் மாற்றியமைக்காது. துயரோ அதை உடனடியாக மாற்றி யமைக்கும் ஆகவே இவ் வகையிலும் புற அ;னபிலிருக்கும் நேர்மைக் திறத்தையும் அன்புத் திறத்தையும் விட, அக அன்பில் இருக்கும் நேர்மைத் திறமும் அன்புத் திறமும் கூடுதலேயாகும்.

இறைவனை மக்கள் நேசித்தால், அவர்கள் இறைவனிட முள்ள அன்பு நேர்மையையும் நேர்மையன்பையும் தம் வாழ்விலும் செயலிலும் கருத்திலும் மேற்கொள்ளல் வேண்டும். இதுவே உண்மையான வழிபாடு. மிக உயர்ந்த வணக்க முறை இதுதான். இதற்கடுத்தபடியான முறை ஈடுபாடு ஆகும். இதில் இறைவன் தன்மையை வாழ்விலும் செயலிலும் கொண்டு வரப் பயிலாதவர், உள்ளத்தில் அவற்றை ஆழ்ந்து தோயவிட்டு, அத்தகைய பயிற்சி பெறுகின்றனர். இப் பயிற்சிக்கும் வழி அறியாதவர்கள், இறைவன் பண்புகளை ஆராய்ச்சி வாயிலாகவும், கதை காவிய வாயிலாகவும், மனித வாழ்க்கை இயற்கைபற்றிய அறிவுவாயிலாகவும் ஐயந்திரிபற உணர முயலுகின்றனர். இது மெய்ப்பாடு எனக் குறிக்கத்தகும். வழிபாடு, ஈடுபாடு, மெய்ப்பாடு ஆகிய இம் மூன்று முறைகளையே சமயக் கணக்கர் யோக நெறி, பக்தி நெறி, அறிவு நெறி என்பர். இம்மூன்று நெறிகளுக்கும் கீழ்ப்பட்ட பாமர நெறியே வினைநெறியாகும். இதனைச் சிலர் செயல்நெறி(சரியை) என்றும் கூறுவர்.

மேற்கூறிய நால்வகை வணக்கங்களும் படிப்படியாக மனிதனுக்கு இறைவன் பண்பை ஊட்டவல்லன. ஆனால் இறைவன் பண்புகள் பற்றியே மயக்க உணர்வுடையவர் பலர் நான்கு நெறிகளுக்கும் புறம்பான அவநெறிகளில் அலைந்து அவமருகின்றனர். அவர்கள் வணக்கமுறை வாணிக முறை யாகவும், மனுப்போடும் முறையாகவும், தம் குற்றங்களின் விளைவைத் தாம் பெற விரும்பாமல் மன உரமற்ற மன்னிப்புக் கோரும் நேர்மையற்ற கோழைமை முறையாகவும் இழிகின்றது. இவற்றுள் இறுதிநிலை வாணிக முறையைவிடக் கேடானது. ஏனென்றால் நட்டத்தில் பங்கு வேண்டாமென்று கூறினால், ஆதாயத்தில் பங்கு பெறமுடியாது என்பது எல்லா வணிகருக்கும் தெரிந்த நீதி. தீங்குகளுக்கு மன்னிப்புப் கேட்பதன் மூலம் நன்மையின் உரிமையை இழக்கிறோம் என்பது மன்னிப்புப் கோரும் பக்தனுக்கு, அதாவது வணக்கமுறை அல்லது தொழுகையிலீடுபடும் போலிப் பக்தனுக்குத் தெரியாது.

நிறை நேர்மையும் நிறை அன்பும் ஒன்றே

முத்திரைக்காசுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஆயினும் காசு ஒன்றே. நேர்மையும் அன்பும் இங்ஙனம் ஒரே பென் அன்பின் மறுபக்கத்தையும் அன்பையும் காண்பவன் நேர்மையின் மறுபக்கத்தையும் காண்கிறான். நேர்மையில் அன்பு நுண்உருவில் இருக்கிறது. அன்பில் நேர்மை நுண்ணுருவில் இருக்கிறது. இரண்டும் சேர்ந்தே நிறை நேர்மை அல்லது நிறை அன்பு என்ற ஒரே பண்பு.

நிறை நேர்மை அல்லது நிறை அன்பு தெய்விக அமைதியின் உள்நிறை கூறு. எனவே அதில் நேர்மையுடன் அடிக்கடி காணப்படும் அல்லது சேர்த்தெண்ணப்படும். அன்பிலாக் கடுமை அல்லது கொடுமையோ, அன்புடன் அடிக்கடி காணப்படும் அல்லது சேர்த்தெண்ணப்படும் கடுமையிலா அன்பு அல்லது வலிமைக்கேடா இருக்க முடியாது. தீமைகள் என்று கூறுத்தக்கன யாவும் கொடுமை, வலிமைக்கேடு ஆகிய இரு குறைபாடுகளால் நேர்பவையேயாகும். இவற்றைத் தெய்விக அமைதியோ இயற்கையோ ஆதரிப்பதில்லை. ஆகவேதான் அது இத் தீயவிளைவுகளை அனுப்பி, நம்மை எச்சரிக்கின்றது.

தன் எச்சரிப்புக் கவனிக்கப்படாவிட்டால், இன்னும் கடுந்தண்டமைகளை அனுப்பி, தீமைக்கு ஆளானவகை வலுக்கட்டாயமானவேனும் நன்மை வழிக்கு இழுக்க இயற்கை பாடுபடுகிறது. ஆகவே நன்மை நாடிய தீமையன்றி உலகில் தீமை எதுவும் கிடையாது. அந்த நன்மை நாடிய தீமை கூட மனிதன் தன் அறியாமையால், தொடர்ந்து பெருக்கிக்கொள்வதேயாகும். இயற்கையோ தெய்விக அமைதியோ கலப்பற்ற தனிநலமன்றித் தீமை தருவதில்லை. மனிதன் கெடவிரும்பினால்கூட இயற்கை அவனைக் கெடவிடுவதில்லை. ஒறுத்தேனும் அவனை நல்வழிக்கு இழுத்துச் செல்லவே விரும்புகிறது. ஆகவே கடவுள் எல்லாம் வல்லவர். நிறைநேர்மையுடையவர், நிறை அன்புடையவர் என்ற முக்கூறுகள் மேலீடாகப் பார்ப்பவர் எண்ணுவதுபோல, முரண்பட்ட பண்புகளல்ல; முழுநிறை இசைவுடைய பண்புகளேயாகும் என்று காணலாம்.

தற்காப்பு முறைகள்

விலங்குக்கும் சரி, மனிதனுக்கும் சரி வாழ்க்கை ஒரு போராட்டமாகத் தான் இருக்கிறது. இப் போராட்டத்தில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று மாள்வை எதிர்த்த போராட்டம். அதனையடுத்த பகையினங்களை எதிர்த்த போராட்டம். மூன்றாவதே பகைப் பண்புகளை எதிர்த்த போராட்டம் ஆகும்.

உயிரிலா இயற்கையின் பகுதியிலிருந்து தொடங்கிய உயிர் வாழ்வு திரும்பவும் அவ்வுயிரிலா இயற்கையில் விழுந்து விடாமலிருப்பதற்கே அதாவது மாளாமல் பிழைத்திருப்பதற்கே போராட வேண்டியிருக்கிறது. இயற்கையின் இம்மாள்வாற்றல் நாள்தோறும் பசிவடிவில் வருகிறது. ஆனால் பசியை வென்றவுடன் உயிரினம் பசிக்கு முன்னிருந்த நிலையை விட மிகுதி உரம் பெறுகிறது. அது வளர்கிறது. இயற்கையின் மாள்வு நிலையைத் தாண்டி முன்னேறுகிறது.

சில சமயம் மாள்வாற்றல் பசி வடிவிலும் விடாய் வடிவிலும் வராமல் நோய் வடிவில் வருகிறது. இப்போது இடர் இன்னும் மிகுதி. உயிரினத்தின் உடல்நலன், உளநலன், அறிவுநலன் ஆகியவையும், அறிவு நலனின் முதிர் வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ நலனும் நோயை எதிர்த்துப் போரிடுகின்றன. போரில் வெற்றிகண்ட உயிரினம் நோய்க்கு முன்னிருந்த நிலையைத் தாண்டி வளர்கிறது.

மாள்வாற்றல் மூன்றாவது ஒரு வடிவிலும் உயிரை அணுகுகிறது. இதுவே முதுமை வடிவம் உடலழிவும் ஆகும். இவ் வழிவிலிருந்து தப்பவே உயிர்கள் இனப் பெருக்கம் என்னும் புதிய கருவியைக் கையாண்டு வருகினிறன. இதனால் பழைய உடல் மாளுமுன் புதிய உடல், முதிய உடல் மாளுமுன் இளஉடல் வருகின்றது. பல இடங்களில் ஓர் உடல் மாளுமுன் பல இன உடல்கள் தோன்றுகின்றன.

இங்ஙனம் உயிரினம் மாள்வை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் கடைசிக்கூற்றே இனவாழ்வாகப் கெருக்க முறுகிறது. தனி உயிரினத்தின் உடல் மாளினும் அதன் உயிர்நிலை - அதன் இனவாழ்வு - தொடர்ந்து அழிவைத் தாண்டி நின்று நிலவுகிறது, வளர்கிறது.

இயற்கையால் வரும் மாள்வின் இடரை எதிர்த்து நடைபெறுவது இம் முதற்போராட்டம். பசி விடாய் ஆகிய உருவில் உணவும் பருகுநீரும்; நோய் உருவில் உடல்நலமும் மருந்தும்; முதுமை, சாவுருவில் இனப் பெருக்கமும் இனவளமும் போராடுகின்றன. இந்த மூன்று போர் முறைகளாலும் உயிரினும் மாள்வாற்றலை எதிர்த்துத் தலைமுறை தலைமுறையாக, ஊழூழியாகப் போராடி வருகிறது. பிற உயிரினமும் சரி, மனித இனமும் சரி, இந்தப் போராட்டங்களை இன்னும் நடத்தி வருகின்றன. பசி, நோய், சாவு ஆகிய மூன்றனுள் எதனையும் மனிதன் இன்னும் நிலையாக வென்றபாடில்லை.

உயிர்ப்போராட்டமும் உணவுப்போராட்டமும்

ஆனால் இயற்கை தரும் இவ்விடர் தவிர இன்னொருவகை இடரும் உயிரினங்களுக்குத் தொடக்கமுதல் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையின் உயிரிலாப்பகுதியே தொடக்க உயிரினங்களின் உணவாயிருந்திருக்க வேண்டும். ஆனால் உயிரினங்களின் விரைந்த வளர்ச்சியில் உயிருணவு தேவைப் பட்டது. இது முதுமை ஏற்பட்டதன் பின்னரே நிகழ்ந்தது. ஏனெனில் இனப்பெருக்கத் துக்காக, ஆண், பெண் பால் வேறுபாடு உண்டாகி, ஒரு தலைமுறையிலேயே அடுத்த தலைமுறை பிறப்புற்றபோது தான், பழைய தலைமுறையை முதுமை அணுகிற்று. பால் வேறுபாடு தோன்றுமுன் ஒரு தலைமுறையின் முடிவே அடுத்த தலைமுறையின் தொடக்கமாய் அமைந்திருந்தது. இறந்த உடலே புதியதாகப் பிறந்ததால், உயிருணவு வேறு, உயிரில் உணவு வேறு என்ற நிலை ஏற்படவில்லை.

உயிர்கள் இறந்தபின் அவற்றின் உடல் அடுத்த தலைமுறைக்கு அல்லது வேறு உயிர்களுக்கு இரையாயின. இந்த இரைபோதாத அளவான போது முதிய உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கமும், அதன்பின் அவற்றைப்போல நலிந்த உயிர்கள், இள உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கமும் உயிரின வளர்ச்சியில் ஏற்பட்டது. உயிரின வளர்ச்சியில் தொடக்கத்தில் ‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்றும் ‘வலிமையின் மிகுதியே வெற்றி’ என்றும் இருந்த நிலை இந்தப் படியின் நிலையே.

உயிர்கள் உயிர்களைக் கொல்லத் தொடங்கியபோதும் இனப் பண்பு இதைத் தடுத்தது. பெருமீன் சிறுமீனைத் தின்றாலும், உயர் உயிரினங்களில் இந்நிலை அகன்றது. உயிர் உயிரை உண்பதற்கு மாறாக இனம் இனத்தை உண்டது. இனங்களிடையே பதை இனங்கள், நட்பினங்கள் ஏற்பட்டன. வலிமைமிக்க இனங்கள், நலிந்த இனங்கள், கொடுமை செய்யும் இனங்கள், கொடுமைக்கு ஆளான இனங்கள் எழுந்தன. ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தை இரையாகக் கொள்ள நாடிய இனங்கள், கொல்ல நாடிய இனங்கள் பகை இனங்களாயின.

இயற்கையின் மாள்வாற்றலை எதிர்த்து உயிரினங்கள் போராட வேண்டிய போராட்டத்துடன், இப்பகையினங்களின் பகைமையாற்றலை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றொரு போராட்டமும் ஏற்பட்டது.

‘தகுதியின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்தை, ‘கொடுமையின் மிகுதியே வெற்றி’ அல்லது ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்று கொள்பவர்கள் உயிரின வளர்ச்சியின் இந்த இரண்டாவது வகையான போராட்டத்தையே கருத்தில் கொண்டனர். வலிமையற்ற உயிர்கள் இரையாகிய அழிய வலிவுடைய உயிர்கள் இரையாக அவற்றை உண்டு வாழ்ந்தன என்பதையும், கொடுமைமிக்க உயிர்கள் விரைந்து பிற உயிரினங்களை அழித்து வாழ, கொடுமையற்றன அழிவுக் காளாகிப் பின்னடைந்தன என்பதையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டுவர்.

‘கொடுமையின் மிகுதியே வெற்றி’, ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவங்கள் இயற்கையமைதியின் குறிக்கோளல்ல என்பதை இந்தப் படியிலும் எளிதில் காட்டலாம். அவை இயற்கையின் குறிக்கோளாயிருந்தால், இரை கொள்ளும் உயிர்களே இன்று உலகில் மிகுதியாயிருக்க வேண்டும். ஆற்றலுள்ள உயிர்களே மிகுதியாயிருக்க வேண்டும். இரண்டும் ஒரு சிறிதும் உண்மையல்ல. கொடுமைமிக்க இரைகொள்ளும் விலங்குகள் ஒருசிலவே இருக்கின்றன. அவையும் அருகி வருகின்றன. தீங்கற்ற பறவைகளும் வலுவிற் குறைந்த விலங்குகளுமே இன்று மிகுதி. வலிமையிலும் உருவிலும் மிகவும் பிற்பட்டு, பர பகையினங்களிக்கு இடையில் வாழும் புழுப்பூச்சியினம் அழியாமல் இன்னும் பெருகி வருவது ‘ஆற்றலின் மிகுதியே வெற்றி’ என்ற தத்துவத்திற் கெதிரான சிறந்த சான்று ஆகும்.

இயற்கையின் தற்காப்பு முறைகள்

வலிமையுடைய உயிர்களுக்கெதிராக வலிமை குறைந்த உயிர்களைப் பாதுகாப்பதற்கு இயற்கை வகுத்த முறையே தற்காப்பு முறை ஆகும்.

வாழ்க்கைப் போராட்டத்தினிடையில் தற்காப்புக்காக உயிரினங்கள் மேற்கொண்டுள்ள முறைகள் எண்ணித் தொலை யாதவை. இயல் நூலாராய்ச்சியால் இப்போது காப்பு முறைகள் ஓரறிவுயிரினமாகிய செடி கொடி முதல் மனிதன் வரை எல்லாப் படிகளிலுமே நடைபெறுகின்றன என்று காணலாம். உயிரினங்களின் படி உயருந்தோறும் இம் முறைகளும் பலவகைப்பட்டுப் பல்கிப் பெருக்கமடைகின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் கொடுமையுடைய உயிரினங்களும் ஆற்றல்மிக்க உயிரினங்களும் முந்திவிடாமல் அவையற்றவை பெருகி வளர இயற்கை எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் இவை என்பதை இப்பாதுகாப்பு முறைகள் தெள்ளத் தெளியக் காட்டுகின்றன. அத்துடன் தகுதி எவ்வாறு படிப்படியாகக் கொடுமையிலிருந்தும் ஆற்றலிலிருந்தும் வேறுபட்டு உயர்வுறுகிறது என்பதையும் நாம் இவற்றால் உணர்கிறோம்.

மிகக் கொடிய விலங்குகளுக்கும் மிக ஆற்றல் வாய்ந்த விலங்குகளுக்கும் இடர் தரும் பகையினங்கள் மிகுதி இருக்க முடியாது. ஆற்றல் குறைந்த சிற்றுயிர்களுக்கோ பகையினங்கள் பல. இடர்கள் பல. ஆயினும் தற்காப்பு முறைகளை இவ்வினங்களே மிகச் சிறந்த வதையில் பயன்படுத்திக் கொண்டதனால் அவை தப்பிப் பிழைப்பதுடன், ஆற்றல் மிக்க எதிரிகளைக் காட்டிலும் வளம்பெற்று வளர்ந்துள்ளன.

வலிமையில் மிகக் குறைந்த பூச்சியினத்திலேயே தற்காப்பு முறையில் மிகவும் கவனத்தைக் கவர்வனவாயுள்ளன. பல பூச்சியினங்கள் தம் வாழ்வுக்கு நிலைக்களமான மண், மரக்கிளை, சுள்ளி, இலை. சருகு ஆகியவற்றின் வடிவத்தையும் நிறத்தையும் முற்றிலும் தமதாகக் கொண்டு, அவ்வொப் புமையால் எதிரிகளின் கண்களுக்குத் தப்பும் சூழ்ச்சி நயமுடையவை யாயிருக்கின்றன. சில பூச்சியினங்கள் பூக்களிடையே பூக்கள் போல உருவிலும் நிறத்திலும் தோற்றத்திலும் இருப்பதால், அவற்றைத் தின்னும் பறவைகள் அவற்றின் மீது உட்கார்ந்தும் அவற்றின் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் விட்டுச் செல்கின்றன! பூச்சியின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவற்றின் குணங்குறிகளை முற்றிலும் அறிந்த இயல்நூலார் கூட அவற்றை எளிதில் உருத்திரித்துக் காணமுடியாது அலமருகின்றனர்.

உயிரினங்களில் முற்றிலும் முதிரா உயிரினம் நீரில் வாழும் மீனேயாகும். இவ்வினத்துக்கு மற்ற உயிரினங்கள் மட்டுமன்றித் தன் இனதே பகைமையுடையது. அப்படியிருந்தும் தற்காப்பு முறைமைகளால் அது விள இனங்களிலிருந்தும் தன் இனத்தி லிருந்தும் ஒருங்கே தப்பிப் பிழைக்க முடிகிறது. விலங்குகளில் மெலிந்தவைக்குத் தற்காப்புக்கான கருவிகளாகக் கொம்பு, நீண்ட பற்கள், கூரிய நகங்கள் இருக்கின்றன. இதைத் தவிர மான், குதிரை, முயல் ஆகியவற்றின் விரைந்த ஓட்டம் தற்காப்புக்கான ஒரு முறையேயாகும்.

பல விலங்குகளும் மீன்களும் குழைவுநெளிவுள்ள உடலாலும் பிடிகொடாது வழுக்கிச் செல்லும் இயல்பாலும் தம் பகைவரிடமிருந்து தப்புகினறன. இவற்றினும் தந்திரமிக்க முறைகளை நரியும் பல்லியும் பயன்படுத்துகின்றன. நரி தன் உடலிலிருந்து வெளிவிடும் கெட்ட நாற்றத்தால் தன்னைத் துரத்தும் நாய்களைத் திக்குமுக்காடவைத்துத் தப்பியோடுகிறது. பல்லியோ தன் வாலைத் துடிக்கவைத்து அகற்றி அதைப் பகையினங்கள் கண்டு வேடிக்கை பார்த்திருக்கும் சமயம் பார்த்துத்தான் தப்பியோடி மறைகிறது.

மனித இனம்! அறிவுத் தற்காப்பு முறை

தாழ்ந்த இனங்களிலேயே அறிவை இந்த அளவு வளர்த்த தற்காப்பு முறைகள் மனித இனத்தில் எவ்வளவு உயரியபடி யடைந்துவிட்டன என்று கூறவேண்டுவதில்லை. அந்த முறைகளை நாம் மனித இனத்தில் இன்று முனைப்பாகக் காண முடியாது. ஏனெனில் அம்முறைகள் கிட்டத்தட்டப் பகையினங்கள் எதுவுமே அவன் உலகில் தலை காட்டாத நிலையைக் கொண்டுவந்து விட்டன.

விலங்குகளில் கடைப்பட்ட விலங்குகளைவிட மனிதன் வலிமை மிகுந்தவனன்று. பல விலங்குகளின் தற்காப்பு முறைகள்கூட அவனிடம் இல்லை. ஆனால் இவை அவன் அறிவை மேன்மேலும் வளர்த்துத் தற்காப்பு முறைகளை அறிவுத் தற்காப்பு முறைகளாக்கின. அதுமட்டுமன்று தற்காப்புத் தேவை அகன்றவின் அவன் அறிவு வளர்ச்சிக்கான வகைமுறைகளாயின.

விலங்குகளுடன் விலங்காக மரப்பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்த அவன், அக் குகைகளினிடமாக வீடும் தெருவும், ஊரும் நகரமும், நாடும் வளர்த்து உலகைத் தனதாக்கிக் கொண்டான். ஓடாத கால்களுடன் ஓடும் விலங்கேறி, இப்போது அவன் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எட்டாத விரைவுடைய விசை ஊர்திகளில் உலகெங்கும் திரிகிறான். பறக்குமாற்றலற்ற அவன் பறக்கும் ஊர்தி கண்டுள்ளான். கொல்லும் நகமும் நச்சுப்பல்லும் கொம்பும் அற்ற அவன் இன்று உலகையே கொன்று குவிக்கத்தக்க அழிவுக் கடைக்கலங்களைப் படைத்துக் கையாள்கிறான்.

கட்புலனிலும் செவிப்புலனிலும் கழுகுக்கும் நாய்க்கும் ஆற்றாத அவன் கட்புலனுக்கு எட்டாத காட்சிகளையும், செவிப்புலனுக்கு எட்டாத ஓசைகளையும் அறிய வழிகள் வகுத்துள்ளான்.

தற்காப்புக்காகத் தொடங்கிய அறிவு முறைகள் அவனுக்கு இப்போது உலகாட்சியையே தந்துள்ளன. இயற்கையின் மறைதிறவையே அளித்துள்ளன.

விலங்குகளைப் போல மனிதனுக்கு இப்போது பகையினங்கள் இல்லை. அவற்றுக்கெதிரான தற்காப்பு முறைகளும் மிகுதி தேவையில்லை. அறிவு இவையனைத்தையும் தேவையற்றவையாக்கிவிட்டது; அவனை மனிதனாக்கி விட்டது. விலங்குகளுக்கில்லாத தன்னறிவும் தன்னுணர்வும் பகுத்தறிவும் அவனுக்குச் சிறப்பாகிவிட்டன. ஆனால் தேவை நீங்கினாலும் மனிதன் விலங்குணர்ச்சிகள், விலங்கு மனப்பான்மைகள், பண்புகள் முற்றிலும் நீங்கி விடவில்லை; அவன் புறத்தோல் கடந்து கிளறினால் இன்னும் விலங்கினத்தின் எல்லா இயல்புகளையும், கொடு விலங்குகள் முதல் சிறு புழு வரையுள்ள எல்லா உயிரினங்களுக்குமுரிய இயற்கையுணர்ச்சிகளையும் மனப்பாங்குகளையும் அவன் இன்னும் கொண்டிருப்பது காணலாம்.

உயர் பண்புடைய மனிதனிடம் இவை அடங்கியும் முற்றிலும் கீழடக்கப்பட்டும் இருக்கின்றன. தாழ்ந்தவரிடமோ அவை கீழடக்கப்படாமலும், மிகுதி அடங்காமலும் இருக்கின்றன. இம்மெனுமுன் அவர்களைப் போர்த்திருக்கும் மெல்லிய மனிதப் போர்வை அகன்றுவிடும். உள்ளூர அவரவர் வளர்ச்சிப் படிகேற்பக் கொடுவிலங்கு நிலையோ, ஆற்றல் விலங்கு நிலையோ. இழிஉயிரின் நிலையோ பகட்டாக வெளித்தோற்றுவது காணலாம்.

தானே தனக்குப் பகை: அழிவுணர்ச்சி

விலங்குநிலை மனப்பான்மையும் விலங்குப் பண்புகளும் நாகரிக மனித சமூகத்தில்கூட இடம்பெறாமல் இல்லை. நாகரிகம் என்று கருதப்படும் பழக்கவழக்கங்கள் பலவற்றிலும், பண்புகள் பலவற்றிலும் அவை இடம் பெறாமலுமில்லை. ஆனால் முனைப்பாக நாம் அவற்றைக் காண்பது இன்றும் தற்காப்புத் துறையிலேயே. தற்காப்புக்கான தேவை குறைந்துவிட்ட பின்பும், தற்காப்பு வளர்ச்சி அவனிடம் சிறிதும் குறைந்து விடவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.

விலங்குகள் பகையினங்களிலிருந்து தம்மைப் பெரிதும் தற்காத்துக் கொள்ள முற்படுகின்றன. மனிதனுக்கு இன்று பகையினம் மனிதனன்றி வேறு இல்லை. தன் இனத்துக்கு எதிராகவே அவன் தற்காப்புப் பண்பை வளர்க்கிறான். தற்காப்புப் பண்பும் உண்மையில் தற்காப்புப் பண்பாயில்லை. அது தாக்குதல் பண்பாகி, இப்போது அழிவுப் பண்பாக வளர்ந்துள்ளது.

அழிவுப்படைக்கருவிகளில் மனிதன் தன் அறிவையும் பணத்தையும் நேரத்தையும் இன்றும் மிகுதியாகவே செலவு செய்கிறான். தற்காப்புக்கு மட்டுமன்றி, இவற்றைக் கொடு விலங்குகளின் பண்பாகிய அழிவுக்கும் பயன்படுத்துகிறான். இவை மட்டுமன்றி இவ்வழி முறைக்காகவே மனித இனத்தின் நலத்துக்கு உழைக்க வேண்டிய தொழிலாளர் வகுப்பின் ஒரு பெரும் பகுதியைப் பழக்கி, அவர்கள் உயிரைப் பணயமாக வைத்துச் சூதாடுகிறான்.

படைகளையும் அழிவுப் போர்களையும் வளர்க்கும் உணர்ச்சியையும் பழக்க வழக்கங்களையும், பலர் இன்றும் உயர்வாகப் போற்றுகின்றனர். அவற்றைப் புகழும் நூல்கள் வீரகாவியங்களாகப் புகழப்படுகின்றன. நாட்டுப் பற்று, இனப்பற்று ஆகிய உயர்பண்புகள்கூட இவற்றின் பெயரால் இழிபண்புகள், மூர்க்கப் பண்புகள் ஆக்கப்படுகின்றன.

பல பிற்போக்கான சமூகங்களில் இவ் வழியே பண்புகளை வளர்க்க மனிதப் பலியாடுகள் போதிய அளவில் அகப்படாத தனால் அல்லது பயன் படாததனால், ஆடு, கோழி முதலிய உயிரினங்களைப் பயன்படுத்துகின்றனர். அவை ஒன்றை ஒன்று மோதியும் கிழித்தும் குருதி சிந்தும் காட்சியைக் கண்டு அவர்கள் ‘வீரக் கலையுணர்ச்சி’ அமைதி பெறுகிறது. அழிவுக்காகப் பயன்படும் உணர்ச்சிகள் தற்காப்பு என்ற பெயரால் வளர்க்கப்பட்டு, வெறும் கலையுணர்ச்சியாகவே பேணப் படுகிறது. கலை கொலையாகி, கொலை கலையாக வளர்க்கப் படுகிறது.

மனிதன் அறிவும் அறிவாற்றலும் சென்ற நானூறு ஆண்டுகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவும் அறிவாற்றலும் ஒரு சிறிதும் மனித உணர்ச்சிகளை வளர்க்கப் பயன்படுத்தப்படவில்லை. மிகப் பெரும்பாலான முறையில் கீழ்த்தரமான விலங்குணர்ச்சிகளில் பலவற்றை வளர்ப்பதற்கே பயன்பட்டிருக்கின்றன. இவ்வுணர்ச்சிகளில் கொடுமை அல்லது அழிவுணர்ச்சி ஒன்று. இதற்காக இன்று ஈடுபடுத்தப்படும் அறிவு கிட்டத்தட்ட மனித இன அறிவின் முழுப்பகுதியுமே என்னலாம்.

இந்த அழிவுக்கலையில் அழியும் மனித உயிர்கள் தொழிலாளர் சமுகத்தின் ஒரு பெரும்பகுதி. தொழிலாளர் உழைப்பின் ஒருபெரும்பகுதியைத் தமதாக்கி, மனித சமூகத்தின் தேவைகளைச் சாக்கிட்டுத் தொழில் வளர்த்துப் பொருளீட்டும் வகுப்பினர் அனைவருமே-தொழில் முதலாளிகள், வணிகர், பொருளகத்துறை முதலாளிகள் ஆகிய அத்தனை பேருமே-போர்க்கால அழிவுக்காகவே வாழ்ந்து பணம் திரட்டுபவர்களாக அமைந்துள்ளனர். இங்ஙனம் மனித இனத்தில் இன்னும் மங்காது வளர்ந்து வரும் விலங்குணர்ச்சிகளுள் ஒன்றுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது.

இன்ப உணர்ச்சி, வீம்புப்போட்டி உணர்ச்சி

அழிவுணர்ச்சிக்கு அடுத்தபடியாக மனிதனை ஆட்டிப்படைக்கும் விலங்குணர்ச்சிகள் இன்ப உணர்ச்சியும் வீம்புப்போட்டி உணர்ச்சியுமேயாகும். இன்ப உணர்ச்சி மனித இனத்தின் ஒரு பெரும்பகுதியை அடிமைப்படுத்தி அதனை ஒரு சிறிய வகுப்புக்கு இரையாக்குகிறது. அச்சிறிய பகுதியினுள்ளும் வீம்புப்போட்டி பெருகி, இன முழுவதையும் ஒருசில பண மூட்டைகளுக்கும் ஒரு சில போர் வெறியர்களுக்கும் ஆளடிமைகளாக்கி வைக்கிறது.

மனிதன் இதுகாறும் அடைந்துள்ள வளர்ச்சிகளை மனித இனம் இன்றும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவை மனித உணர்ச்சிகளை, மனித இனத்தின் தகுதிளை, மனித இனத்தை வளர்க்கப் பயன்படுத்தப் பெறாமல், விலங்குணர்ச்சி களையும் விலங்குத் தகுதிகளையும் வளர்ப்பதில் ஈடுபடுத்தப் படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். விலங்குணர்ச்சிகள் அழிக்கப்படாவிடிலும் படிப்படியாக அடக்கிச் செயலற்றவை யாக ஆக்கப்படல் வேண்டும். மனித உணர்ச்சிகள் படிப்படியாகப் பேணி வளர்க்கப்படவேண்டும். இதுகாறும் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிகள் இவ் வுணர்ச்சிகளின் வழிச் சென்றால், செலுத்தப்பட்டால், ஈடுபடுத்தப்பட்டால், இனநலம் இன்றிருக்கும் நிலை கடந்து எத்தனையோ மடங்கு மேம்பாடடையும்.

மனித உணர்ச்சிகள் இன்னும் மனித இனத்தின் ஆட்சி யாளர்கள் இனத்தின் பெரும்பான்மை மக்கள் ஆகியவர்களின் தலை நோக்கமாகா விடினும், அவை விலங்குணர்ச்சிகளின் உட்புகுந்து அவ்வுணர்ச்சிகளையே உயர்த்தி வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனித உணர்ச்சிகள் செயலாற்றுவதற்குரிய தலைசிறந்த கருவிகளாகிய அறிவும் அறிவாராய்ச்சியும், அறிவு முறைகளும் நாள்தோறும் தழைத்தே வருகின்றன. ஆனால் அவை மனித உணர்ச்சிக்கு மாறாகவே பயன்படுத்தப்படுகின்றன.

முதலில் அவனது அழிவுப் படைக்கலங்கள் விலங்குகளின் தற்காப்பு உறுப்புக்களைவிட உண்மையிலேயே தற்காப்பு மிக்கவை. உறுப்புக்களால் தன்னைக் காக்க முற்படும்போது உயிரினும் தன்னையும் பெரிதும் இடருக்குள்ளாக்கிக் கொள்ளமலிருக்க முடியவில்லை. ஆனால் மனிதன் கருவிகளோ படிப்படியாகப் பிறரை அழிப்பதில் ஆற்றலுடையவையாகவும், அதே சமயம் கையாளுபவனுக்கு இடரில்லாமலும் வகுக்கப் பட்டுள்ளன. தொலைவிலிருந்து எய்யும் அம்பு இதன் முதற்படி. ஆனால் தாக்குபவர் தற்காப்பவர் ஆகிய இரு திறத்தவத்களிடையிலும் இம்முன்னேற்றம் ஏற்பட்டபின், இந்த வாய்ப்பு ஒரு சிறிதே குறைகிறது. ஆயினும் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் இது சரிசெய்யப்படத் தவறவில்லை.

மொத்தத்தில் மனிதன் அழிவாற்றலும், தன் இடர்காத்து அழிப்பதிலும் முன்னேறுகிறான். ஆளில்லா விமானங்களால் எதிரி நகர்களில் குண்டு வீசுதல் இவ் வகையில் மிகப் புதிய வளர்ச்சி ஆகும். இவையும் இரு தரப்பும் மேற்கொள்வதால் கருதிய பயனை முழுவதும் தராவிட்டாலும், மனித இனத்தில் அழிவுணர்ச்சியைவிடத் தன்னுயிர் மதிப்புணர்ச்சியையும், அதற்கான அறிவுமுறைப் பழக்கத்தையும் இது வளர்க்கிறது.

உடல் ஆற்றலை விட்டு அறிவாற்றலையும், அறிவாற்றல் கடந்து தூய அறிவு அல்லது கற்பனையாற்றலையும் மனிதன் கையாளுகின்றான். தூய அறிவற்றலே மனித இனத்தின் தனிச்சிறப்புப் பண்பு ஆகிவருகிறது.

இதே அறிவாற்றல் அழிவிலிருந்து தற்காப்புக்கும், உயிர் காப்புக்கும் படர்ந்ததுடன் நிற்காமல், மனிதன் இன்பவாய்ப்பு களைப் பெருக்குவதிலும் முனைகிறது. பொருள்களைவிடப் பணம் பொருள் வளத்தின் குறியீடாக மனித இனத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதனால் ஏழை பணக்காரர் வேற்றுமை வளரலாம். ஆனால், தூய அறிவற்றலால் செயல் செய்யும் பண்பும் வளர்கிறது. மனிதரை எதிர்த்து மனிதர் செய்யும் போட்டி இப்போது அழிவுப் போட்டியிலிருந்து இன்பவாய்ப்புப் போட்டியாகிறது. எதிரியின் உயிரை அழிப்பதில் தனக்குத் தொல்லையும் இடரும் மிகுதி என்பதையும், அதனால் தனக்கு ஆதாயமில்லை என்பதையும் கண்ட சூழ்ச்சியறிவுள்ள மனிதன், கொல்லாமலே அடிமைப்படுத்தும் கலையை வளர்த்து வருகிறா.

உள்ளார்ந்த மனித உணர்வின் இளங்குருத்துக்கள்

விலங்கின் வல்லமைப் போட்டியே இன்னும் மனித இனத்தின் செய்வகைப் போட்டியாக இருந்துவருகிறது. ஆனால் அது உடல் வல்லமைப் போட்டியாயில்லை; அறிவு வல்லமைப் போட்டியில் முதற்படிக்கு வந்துவிட்டது. திருடுதல், கொள்ளை யடித்தல், தாக்குதல் ஆகியவற்றைவிட வாணிகம் செய்தல், தொழில் முதலாளித்துவம், பொருள் திரட்டும் வழிகளுக்கான அறிவு வளர்த்தல் ஆகியவை மிகுதி ஆதாயம் தரும் எளிய வழிகளாய்விட்டன. இங்கே பொருள் வளத்தையும் தேன் குறியீடான பணத்தையும்விட, அவற்றை வளர்க்கும் அறிவு வளத்தின் மட்டத்துக்கே போட்டி உயர்ந்துவிட்டது. வல்லமைப் போட்டி இப்போது உரிமைப்போட்டி ஆகியுள்ளது. அறிவுத் திட்டம், செயல்நயம், முன்னறிவு, திறமையாட்சி, புத்தறிவு ஆகியவையே மனித இனப்போட்டியின் குறிக்கோளாகி விட்டன.

தெய்விக அமைதி அதாவது நேர்மை அல்லது ஒழுக்கம் இன்னும் மனித இனத்தின் குறிக்கோளாகவில்லை. ஆயினும் நேர்மையும் ஒழுக்கமும் மனிதப்பண்புகளாக வளர்ந்தே வருகின்றன. போட்டியுணர்ச்சி மாறாமலேயே வல்லமைப் போட்டி அறிவுப்போட்டி யானதுபோல, மனிதன் தன்னல உணர்ச்சி மாறாமல் அதன் அடிப்படையிலேயே நேர்மைப்பண்பு வளர்கிறது. நேர்மையற்ற முறைகளையும் ஒழுக்கமற்ற முறைகளையும் விட, நேர்மைவழியும் ஒழுக்கவழியும் ஆதாயம் மிகுதி உடையவை, எளியவை என்பது மனித இனத்தில் உணரப்பட்டு வருகிறது. இவ்வகையில் சமூகமதிப்பு என்ற ஒன்று கிட்டத்தட்ட நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒரு மறையுருவாக நின்று செயலாற்றுகிறது.

ஏமாற்றுவதைவிடச் சட்டப்படி நடந்து நலம் பெறுவதில் சமூக மதிப்பு மிகுதி என்ற அறிவு ஏற்படுந்தோறும் சட்டத்தை மதித்து நடக்கும் பண்புடையாளர் பெருகுகின்றனர். ஒழுக்கக் குறிக்கோளை ஏற்காமலே இங்ஙனம் உள்ளீடாக ஒழுக்கம் உளப்பண்பிலும், சமூகப் பண்பிலும் வளர்கிறது. பொய் பேசுவது தவறு என்று கருதாதவனும் பொய் பேசுபவன் என்று கருதப்படுவது இழிவு என்று எண்ணி அதை ஒதுக்குவதில் அல்லது மறைப்பதில் முனைகிறான். இதில் அவன் தன் அறிவை வீணாக்கினாலும். எப்படியும் அதைச் சமூகம் காண நேர்ந்தவின் அவற்றின் மதிப்பு முன்னிலும் கெடுகிறது.

வல்லமையாட்சியும், பொருளாட்சியும், அறிவாட்சியும் ஒன்றையொன்று மடக்கியும் மூன்றும் இன்றும் உலகில் இருந்தே வருகின்றன. ஆனால் வல்லமையாட்சி பொருளாட்சிக்கும், பொருளாட்சி அறிவாட்சிக்கும் விட்டுக் கொடுத்தே வருகின்றன. அறிவாட்சிக்கும் மேற்பட்டது நேர்மையாட்சி அல்ல அன்பாட்சியாகிய அருளாட்சி. இது இன்னும் முனைப்பாக வில்லை. மனித இனத்தை இயக்கத் தொடங்கவில்லை. ஆனால் மனித இனத்தின் சமூக உள்ளத்தில் அது இடம் பெற்றுவிட்டது என்பது உண்மை.

மற்ற உணர்ச்சிகள் எதுவும் செயலாற்றாத இடத்தில் வல்லமையாட்சி, பொருளாட்சி, அறிவாட்சி ஆகிய முத்திற ஆட்சியாளர் தன்னலங்கள் குழுநலங்கள் பாதிக்கப்படாத இடங்களிளெல்லாம் அருளாட்சியின் கனிவு செயலாற்றப்படு வதைக் காண்கிறோம். சில சமயங்களில் அந்நலங்களை எதிர்த்தும் அருளாட்சி வெற்றி பெற்றுள்ளது; பெறுகிறது.

அடிமைப்பட்ட நாடுகளில் விடுதலை இயக்கங்கள், அடிமை விடுதலை இயக்கங்கள், பிற்ப்பட்டவர் தாழ்த்தப் பட்டவர் நல இயக்கங்கள், சேரிச் சீர்திருத்தங்கள், இன வேறுபாடு ஒழிப்பு இயக்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள். தொழிலாளர் நலப் பாதுகாப்புச் சட்டங்கள் ஆகியவை இத்தகையவை.

மின்னொளி வண்ணங்கள்

ஒரு சங்கிலியின் வலு அதன் வலிமை குறைந்த கண்ணியின் வலுவே. அதுபோல ஒரு சமூகத்தின் வலுவும், ஒரு நாட்டின் வலுவும் அதன் வலுமையற்றோர் வலுவே. இவ்வுண்மை அரசியலாரால்கூட உணரப்பட்டு வருகிறது.

வலிமையற்றோர், துன்புற்றவர், குறைப்பட்டவர் பாதுகாப் பிலேயே மற்ற எல்லாருடைய பாதுகாப்பும் அடங்கிக் கிடக்கிறது. கடைப்பட்ட உறுப்பின் நலம் இன நலமாகிப் பிற உறுப்புக்களின் நலங்களையும் பேணவல்லது. இத்தகைய கருத்துக்கள் அறிவின் ஆழ்ந்த ஆழத்தில், அறிவு கடந்த அறிவாகிய அருளில் தோன்றி யவை. மனித வகுப்பை அலைக்கும் பிற உணர்ச்சிவேகங்கள் விலகிய சமங்களில் இவ்வருள் ஞாயிற்றின் செவ்வொளி மக்கள் வாழ்வில் அழகுற வானவில்போலச் சுடர்விடுகிறது. மின்னொளி போல அவ்வப்போது பாய்கின்றது. நிலவொளியாய் இடை யிடையே வந்து அழகுமிழ்கின்றது. இவ்வழகொளியில் மனித இனம் அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுகிறது.

இவ் ஓய்வுக்கால ஒளியை மனிதர் இன்னும் ஆன்மிக ஒளி, கலை ஒளி, உயர் பண்பு என்று குறிக்கின்றனர். ஆனால் மற்ற உணர்ச்சிகள் படிப்படியாக அகலுந்தோறும் இதுவே நிலையான பண்பாய், நீங்காப் பகலொளியாய் விரிவுறும்.

தற்காப்பிலிருந்து அறிவும் தன்னலத்திலிருந்து அன்பும் பரவுகிற அதேசமயம், அன்பின் தலையூற்றான குடும்ப வாழ்விலிருந்தும் புதிய அன்பொளி பரவுகிறது. பசி, விடாய் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையகவே குடும்பப் பற்றுத் தோன்றிற்று. ஆனால் உயிர்களில் கீழ்னங்களிலிருந்து படிப்படியாக இப்பற்று இரண்டு உயிர்களின் தற்காலிகப் பற்று என்ற நிலையிலிருந்து, ஆண் bhண் குழந்தைகள் உறுப்புக்களாகச் சேர்ந்த குடும்பமாகவும்; குடும்பங்களின் தொடர்புகளால் ஏற்பட்ட குடும்ப சமுதாயம் அல்லது குலமாகவும்; மொழி, வாணிகத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையான இன்னுமகன்ற நாட்டினமாகவும் வளர்வது காணலாம். இவற்றால் மனிதன் உடல்பாசம் விரிவடைந்து குடும்பப்பற்று, சமூகப்பற்று, இனப்பற்று, உயிர்ப்பாசம் அல்லது பரிவு ஆக உயர்கிறது.

நாளடைவில் குருதி உறவை நோக்கிய பாசம் தன்னலப் பயனை நோக்கிய நேசமாகவும், உடனடியான பயனை எதிர்பாராது தொலைப் பயனை எதிர்பாராது தொலைப் பயனை நோக்கிய அன்பாகவும் மாறுகின்றது. இப் பரிவு இன்னும் அருளாக மாறுவதற்கு உலகம் ஒரு முழுமுதல் பொருள் அதாவது அது ஒரே இயற்கையமைதிக்குக் கட்டுப்பட்டு, ஒரே தெய்விக அமைதியால் இயக்கப்படுகிறது என்ற கடவுளன்றி மட்டும்தான் வேண்டும். இதன் தொலை ’முன்னொலி’யாக ஓர் உலகம் என்ற குறிக்கோள் எழுந்துள்ளது.

தன் துன்பத்துக்கு வருந்திய மனிதன் பிற உயிரின் துன்பங்கள் உணரத் தொடங்கிவிட்டான். தன் இன்பம் நாடிய நிலையினின்று பிறர் இன்பங்கண்டு மகிழும் நிலையையும் அடைந்து வருகிறான். முதல் நிலையை அடையப் பிற உயிர்களின்மீது அன்பாட்சி யார்வமும் இரண்டாம் நிலையை அடையப் பிறர் பாராட்டாகிய புகழ்மீதார்வமும், பாலங்களா யுதவின. தன்னல ஆர்வமும் புகழார்வமாக, அன்பார்வமாக மாறுந்தோறும் மனிதன் அருளாளன் ஆகிறான்

மனிதருள் அருளாளராகதவரும், அருளாளரைப் பின்பற்ற விரும்பாதவரும் கூட அவரை மதிக்கத் தவறுவதில்லை. தெய்விக அமைதி இங்கே உள்ளூர நின்று செயலாற்றுகிறது. உயர் செவ்வியடைந்தவரின் உள்ளத்தில் நின்று அவரை அது அருளாளராக்கி, அங்ஙனம் உயர் செவ்வியடையாதவரின் உள்ளத்தில் நின்று அவ்வருளாளர்பால் மதிப்பை உண்டுபண்ணி அவரிடம் பாசம் கொள்ளத் தூண்டுகிறது.

விலங்கநிலை! மனிதநிலை! தெய்விகநிலை!

விலங்குணர்ச்சிகளிலிருந்து வளர்ந்த மனிதன் இங்ஙனமாக விலங்குணர்ச்சிகள் என்ற நிலத்திலிருந்து கொண்டே மனித உணர்ச்சிகள் என்ற காற்று மண்டலத்திலும் ஓங்கி வளர்ந்தான். இப்போது அவன் விலங்கல்ல, மனிதன்; ஆனால் அவன் கால்கள் இன்னும் வேர்கள்போல விலங்குணர்ச்சி என்னும் நிலத்தில் ஊன்றியிருக்கின்றன. அவன் தலைமட்டும் அந் நிலத்திலிருந்து உயர்ந்து வானவெளியில் வீசும் தென்றலில் ஆடுகின்றது. விலங்குணர்ச்சி மட்டும் இருக்கும்போது அவன் விலங்காயிருந் தான். விலங்குணர்ச்சியுடன் மனித உணர்ச்சியும் கலந்தபின் அவன் மனிதனாகிறான். ஆனால் விலங்குணர்ச்சி குறையுந் தோறும் மனித உணர்ச்சி வளர்கிறது. அவன் மனித இனத்திலேயே பல விலங்குப் படிகளிலிருந்து படிப்படியாக விலங்குணர்ச்சிகள் முற்றிலும், அல்லது கிட்டத்தட்ட முற்றிலும் நலிந்து தூய மனித உணர்ச்சி கனந்தெழும்போது, அவன் தெய்விகப் பண்புடையவனாகிறான். தெய்விகப் பண்பு என்பது விலங்குணர்ச்சியின் கட்டுவிட்ட விலங்குணர்ச்சியின் கலப்பற்ற, தூய மனித உணர்ச்சியேயாகும்.

விலங்குகளின் தற்காப்பு முறைகளிலிருந்தும் விலங் குணர்ச்சிகளிலிருந்தும் மனிதரின் தற்காப்பு முறைகளும் மனித உணர்ச்சிகளும் எவ்வளவு உயர்வுடையவையோ, அவ்வளவு மனிதத் தற்காப்பு முறைகளையும் மனித உணர்ச்சி களையும்விடத் தெய்விகத் தற்காப்பு முறைகளும் தெய்விக உணர்ச்சிகளும் உயர்வுடையவை. இம் மூன்று முறைகளும் உயிரின வளர்ச்சியின் மூன்று தெளிவான படிகளைக் குறிக்கின்றன. விலங்குப் படியில் உடல் உடலை எதிர்த்தழிக்க முற்படுகிறது. மனிதப் படியில் உள்ளம் உள்ளத்துடன் அறிவின் உதவிக்கொண்டு மோதிக் கீழ்ப்படுத்தி ஆள எண்ணுகிறது. ஆனால் தெய்விகப் படியில் உடல் சார்ந்த போராட்டம், உளம் சார்ந்த போராட்டம் இரண்டும் இல்லை.

இந்தப் படியில் சமூகத்தின் உறுப்பினனாகிய மனிதன் மற்ற உறுப்பினருடன் போரிடும் புறப் போராட்டம் எதுவுமே கிடையாது. இங்கே போராட்டம் அகப் போராட்டமாய் விடுகிறது. மனிதன் தன் உள்ளத்தின் அகத்தில் உளிந்தும் வெளிப்படையாகவும் முனைப்பாகவும் நின்று அலைக்கும் பேரவா, வீம்புணர்ச்சி, தற்பெருமை முதலிய உட்பகைப் பண்புகளிடன் போராடி வென்று, அவ் வெற்றியின் பயனைச் சமூகத்தின் பிற உறுப்பினருக்கும் சமூகத்துக்கும் அளித்து அதை வளர்க்கிறான்.

விலங்குப் போட்டியில் உறுப்புக்களே கருவியாயிருக் கின்றன. மனிதன் உறுப்புடன் புறக் கருவிகளை முதலில் கையாண்டு, பின் தன் அறிவையே கருவிகளை இயக்கும் கருவியாக்குகிறான். ஆனால் தெய்விகப் போராட்டத்தில் போட்டியுமில்லை, பகைவரும் இல்லை. உட்பகைக் கருவியாகிய பண்புகளையே மனிதன் எதிர்க்கிறான். புதிய ஆன்மிகச் சாலையில் உருவான இரண்டு படைக்கலங்களையே அவன் கையாளுகிறான். அவை எதிர்ப்பின்மை, தன்மறுப்பு ஆகிய இரண்டுமே.

இவற்றை உடலின் எந்த உறுப்போ அறிவோகூடக் கையாளுவதில்லை. தெய்விக அமைதி ஒளியில் பயிற்சி பெற்ற அகப்பண்பே அவற்றைக் கையாள முடியும். கூரிய நகமும் நச்சுப் பல்லும் உடைய கீழின உயிர்கள் மனிதன் படைக்கலங்களையோ, சூழ்ச்சி முறைகளையோ கையாள முடியாதது போலவே, பொது நிலையான தன்னல அடிப்படையான அறிவும், பகைமை யடிப்படையான எதிர்ப்பு முறைகளும் இப் புதுக் கருவிகளைப் பயன்படுத்த முடியாது.

தன்னலம், போட்டி, எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது தற்கால மனித சமுதாயம் ஆனால் தன்னல மறுப்பு, தனிநல அழிப்பு, பரந்து செல்லும் பரந்து பரிவுணர்ச்சி, உலகெலாம் ஒன்றெனக் கொள்ளும் உயர்பண்பு ஆகியவையே தெய்விக சமுதாயத்தின் அடிப்படை அமைதிகள். விலங்கு சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மனித சமுதாயம் எவ்வளவு அப்பாற்பட்டதோ, அந்த அளவு இத் தெய்விக சமுதாயம் மனித சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மனித சமுதாயம் எவ்வளவு அப்பாற்பட்டதோ, அந்த அளவு இத் தெய்விக சமுதாயம் மனித சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது ஆகும்.

அறிவற்ற விலங்கின் வீம்பைவிட, அறிவுடைய தன்னலம் மேம்பட்டது. தற்காலிகமாக விலங்கின் வீம்பாற்றல் மேம்படக் கூடுமானாலும், காலங்கடந்து செயலாற்றும் அறிவுடைய மனிதன் தன்னலத்துக்கு முன் அது செயலற்றதாகி விடும். இதுபோலவேதான் தெய்வப் பண்புடைய மனிதன் பண்பின்முன் தற்காலிகமாக மனிதன் தன்னல அறிவு மேம்படுவதாகத் தோன்றினாலும், இயற்கை கடந்து செயலாற்றும் அத் தெய்விகப் பண்பின் முன்அது சரணடைவது உறுதி. அப்பண்புடையவன் எதிர்ப்பை எதிர்த்து வெல்லமாட்டான். எதிர்ப்பின்மை யால் வெல்லுவான்.

தன்னலத்தை அவன் தன்மறுப்பால் செயலற்றதாக்குவான். சினத்துக்கெதிராகப் பொறுமை, வீம்புக்கு எதிராகப் பணிவு, பகைமைக்கு எதிராகப் பரிவு, வெறுப்புக்கெதிராக அன்பு ஆகிய இவை தெய்விகப் போர்முறையின் நீதிகள். இந் நீதிகளைக் கையாளவல்லவர்களின் முன் மனித சமுதாய முறைகள் முறிவடையும் என்று திடமாகக் கூறலாம்.

ஆன்மிக வாழ்வு என்பது இனவாழ்வே

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் தற்காப்பு என்பது தம் உடலைக் காப்பதே. உயிர் நீங்கும் வரை உடலை அவர்கள் காத்து நிற்பர். ஆனால் தெய்விகப் போர் முறையில் உடல் தற்காக்கப் படுவதில்லை. உயிரும் உயிரின் தூய பண்புகளும் அவற்றுக்கு நிலைக்களமா யியங்கும் இனமும் இன மரபுமே தற்காக்கப் படுகின்றன. இவை யனைத்தையும் ஒருங்கே குறிப்பதானால் ஆன்மிக வாழ்வு அல்லது ஆன்மா என்னலாம்.

உடல் அழிவது. அதை அழியாமல் காக்க விலங்கும் மனிதனும் பாடுபடுகின்றனர். ஆன்மா அழியாதது. அதன் தூய்மை பேண, அதன் நற்பண்புகளை வளர்க்கத் தெய்விக மனிதன் பாடுபடுகிறான்.

உடலெதிர்ப்பைவிட அறிவெதிர்ப்புப் பன்னூறு மடங்கு வலிமையுடையது என்பதையாவரும் அறிவர். தெய்விக எதிர்ப்பு முறையாகிய எதிர்ப்பின்மையும் தன்மறுப்பும் அறிவெதிர்ப்பை விடப் பல்லாயிர மடங்கி வலிமையுடையன. இவ் வல்லமையின் ஆற்றலையும் ஒளியையும் புகழையும் இயேசு, புத்தர் முதலிய அருண்மன்னவர் வாழ்வில் காண்கிறோம்.

மன்னர் ஆட்சி அவர்கள் நாட்டிலும் அவர்கள் தலைமுறையிலும் மட்டும் வலிமையுடையதாயிருந்தது. ஆனால் புத்தர் பிறந்து வாழ்ந்து இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு மேலாயின. இயேசு வாழ்ந்து இருபது நூற்றாண்டுகளாயின. அவர்கள் வாழ்வும் நாடும் கடந்து உலகெங்கும் அவர்கள் அருளாட்சி ஓயாது பரவி வருகின்றது. அவர்கள் அருளாணை முன் மன்னரும் மன்னர் மன்னரும், மன்னர் ஆட்சிக்கு வலுத் தந்த படைத் தலைவர்களும், அவ்வாட்சியை எதிர்த்துப் புத்தாட்சி அமைத்த குடியாட்சி முதல்வர்களும் ஒருங்கே தலை வணங்குகின்றனர்.

மன்னரை வணங்கியவர் உடல் வணங்கினர். உள்ளத்தில் அச்சம் முதலிய பல உணர்ச்சிகளே இருந்தன. வணங்குபவர் உயர்வு தாழ்வுக்கேற்ப வணக்கமும் வேறுபட்டது. ஆனால் புத்தர், இயேசு ஆகிய அருண்மன்னர் ஆட்சிக்கு வணக்கம் செய்பவர்கள் உள்ளத்தில் வேறுபாடின்றி ஒரே அன்பு நிலவுகிறது. முடியாட்சி, குடியாட்சி, முதலாளி தொழிலாளி, நல்லார் கெட்டார், உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய எல்லா வகைப்பட்டவர் உள்ளத்தையும் அது ஒரே வகையில் கனிவித்து இயக்குகின்றது.

விலங்கு, மனித, தெய்வ முறைகள் ஒன்றுக்கொன்று மேம்படினும் ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பவையே. மூன்றும் ஒரே உயிரின வளர்ச்சிகளில் மூன்று பேரூழிகளைக் குறிக்கின்றன. உயிரினங்களின் தொடக்கப் படியிலிருந்து அதன் முழுநிறைவு நோக்கிச் செல்லும் இவ் வளர்ச்சியைத் தீமையிலிருந்து நன்மை நோக்கிய வளர்ச்சி நலம் என்று குறிக்க முடியாது. ஏனெனில் நாம் மேலே காட்டியபடி தீமை என்று எதுவும் எங்கும் என்றும் இல்லை. இம் முன்னேற்றம் முழுவதும் நன்மையிலிருந்து படிப்படியாக உயர்வுடைய நன்மைக்கேயாகும். அது முழுநிறை நன்மை நோக்கிய இடைவிடாத முன்னேற்றம் என்னல் தகும்.

இயற்கையின் புற உடம்பிலிருந்து அதன் அகஉயிர்நிலை நோக்கிச் செல்லும் இவ் வளர்ச்சியில், உயிரினம் படிப்படியாகத் தன்னையும் இயற்கையையும் அறிந்து, இயற்கையின் உயிராகிய கடவுளின் ஒரு கூறாகிறது. இந்நிலையை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைதல் இல்லை. ஆனால் எல்லா உயிர்களும் அதை நோக்கியே செல்கின்றன, வளர்கின்றன. அவ் வளர்ச்சி யிடையே தோற்றும் பண்புகள்தான் ஆற்றல், அறிவு, அன்பு ஆகிய மூவொளிகள் ஆகும். உயிரினங்களின் அழல், மதி, ஞாயிறு என இவற்றை குறிக்கலாம்.

வான் போக்கு - மேனோக்கிய உணர்வு

வானகப் பயணமும் வானூர்தியும் ஏற்படுமுன்னே அப் புதுமுறை விரைவில் ஏற்படும் என்று தெரிவித்தவர் கலை முனைவர் பக்1 அதனால் மனித வாழ்விலும் மனப்பாங்கிலும் உணர்விலும் ஏற்படக் கூடும் மாறுதல் பற்றியும் அவர் விரித்துரைத்திருக்கிறார். அவர் முன்னறிவிப்பின் ஒரு பகுதி நிறைவேறி விட்டது என்று காண்கிறோம். ஆகவே மறு பகுதியில் அவர் கூறுவதைப் பற்றியும் நாம் சிந்திப்போம்.

‘நிறை உலக உணர்வு’ என்ற2 தம் நூலில் கலைமுனைவர் பக் கூறுவதாவது:-

“வானகப் பயணத்தின் முன் நாட்டெல்லைகள், பாதுகாப்பு வரி எல்லைகள் தடமற்றுப் போகும். ஒரு வேளை மொழி வேறுபாடுகள்கூட மனித சமுதாயத்தில் இல்லையாய் விடும். பெருநகரங்களின் தேவை அகன்று விடக்கூடும். ஏனெனில் ஒருங்கு வாழ்வதற்கு நெருங்கி வாழ வேண்டும் என்ற நிலை இராது. அவை படிப்படியாகச் சிற்றூர்களாகவோ தனி மாளிகை களாகவோ பரந்து கலைந்துவிடும்.”

“இன்று நகரங்களில் அடைபட்டு எந் நாளும் வாழ்பவர் வேனிற் காலத்தில் மலைமீது அல்லது கடலருகிலும், குளிர் காலத்தில் உள்நாட்டிலுமாக மாறிமாறி வாழக்கூடும். கலையழகிலீடுபடுபவர்கள் அவ்வப்போது தத்தம் விருப்பப்படி திறந்த வெளிகளிலோ, அடர் கானகங்களிலோ, அழகிய காட்சியிடங்களிலோ அவ்வப்போது தங்குவர். நிலத்தில் உழைப்பவர் சிற்றூரில் சிதறியும், தொழிலிலீடுபட்டவர் நகரங்களில் அடர்த்தியாகவும் இருக்கும் நிலை தேவைப்படாது. வேண்டிய வேண்டியபடி மக்கள் எல்லையற்ற இடத்தில் ஆங்காங்குத் தங்கியும் திரிந்தும் வாழ்வார்கள்.”

வானூர்தியும் வான் பயணமும் இன்று பெருகி வருகின்றன. ஆயினும் அவற்றின் பயனாக மேற்குறிப்பிட்ட மாறுபாடுகள் இன்னும் ஒரு சிறிதுகூட ஏற்படவில்லை. ஆனால் அவை இனி ஏற்படாது என்று கூறமுடியாது. மேலும் வான்போக்கு இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. தொடர் ஊர்தி வந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி நிலையைக் கூட நாம் இன்று எட்டிவட்ட தாகக் கூற இயலாது. ஏனெனில் நிலத்திலும் நீரிலும் மனிதன் அடைந்த வெற்றிகளைவிட வானில் அடையும் வெற்றி மிக நீண்டதாகவே இருக்கமுடியும்.

வான்போக்கின் வருங்கால வாய்ப்புக்கள்

வான்போக்கு மட்டுமன்றி அது பற்றிய முறையும் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது என்று எண்ண இடமுண்டு. வான்போக்கு முறைமையின் இறுதி இலக்குப்பற்றி இயல்நூலறிஞர் ஈடிஸன் கூறுவதாவது:

“இறுதியாக முழுநிறை வடிவம் எய்திய வானூர்தி பறவைகளின் இயக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைவதால் வேண்டும். அப்போதுதான் அது பறவைகளைப் போல எளிதில் சிறகடித்தெழவும், நேரே மேல்நோக்கிக் பறக்கவும், வானவெளியில் வேண்டும் போது மிதந்து நிற்கவும், விரும்பியபடி விரும்பிய இடத்தில் இறங்கவும் முடியும்.”

ஈடிஸன் இறுதியாகக் குறிப்பிட்ட முறையில் வானூர்தி தொடங்கவில்லை. அதற்கு இறக்கைகள் இருந்தாலும் அவை பறவைகளின் இறக்கைபோல இயங்கும் இறக்கையோ, இயக்கும் இறக்கையோ அல்ல. பட்டங்களின் தத்துவத்தைப் பின்பற்றி அதன் இறக்கைகள் காற்றின் அழுத்தத்தைப் பயன்படுத்தி மிதக்கவும் சமநிலை பேணவும் மட்டும் உதவுகின்றன. ஊர்தி இயங்குவது கிட்டத்தட்ட நில ஊர்திகளைப் போன்றுதான்.

பட்டங்களை ஒரு கயிறு இழுக்கிறது. வானூர்திகளைக் கயிறு இழுப்பதற்கு மாறாக, உந்துபொறியின் உந்துவிசை போன்ற விசை இயந்திரமே இயக்கிச் செல்கிறது. இது காரணமாகவே வானூர்தி பறவைகளைப்போல இறக்கையடித்து நின்ற நிலையில் எழாமல், அதற்கென அமைக்கப்பட்ட பரந்த சமநிலப் பரப்பில் ஓடி எழவேண்டி யிருக்கிறது. பறவைகளைப்போல அது சிறகடித்து மிதக்க முடிவதில்லை. பறவைகளைப்போல நினைத்த இடத்தில் இறங்கவும் முடியாது.

பறவைகளின் இறக்கையைப் பார்க்கிலும் இன்னும் பன்னூறு மடங்கு விசையுடன் பூச்சியினங்களின் இறக்கைகள் இயங்குகின்றன. வானவெளியில் தங்குதடையின்றி உலவ இவ் வமைப்பு பறவை அமைப்பிலும் மிகுதி உதவக்கூடும்.

வான்போக்கின் வளர்ச்சியினால் மனித சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை இன்னும் நாம் முற்றிலும் வரையறுத்து உரைக்க முடியாது. அது இன்னும் அரசியலார் உயர்தர மக்கள் போக்குவரத்துக்கும் உயர்விலையுடைய சிறுதிறச் சரக்குப் போக்குவரத்துக்குமே உரியதாகி இருக்கிறது. கப்பல்கள்போல அல்லது இன்னும் மிகுதியாக நில ஊர்திகள் போல அது மக்கள் நான்முறை வாழ்வின் ஒரு பகுதியாகவில்லை.

ஆனால் விளைவு காண நாளாயினும் அதன் உடனிகழ்ச்சி மாறுபாடுகளை நாம் இப்போது மதித்துரைக்கக்கூடும். இயல்நூல் துறையின் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் மக்கள் மனப்பான்மையின் ஒரு மாறுதலை அடுத்து அதன் இன்றி யமையா விளைவாக ஏற்பட்டதேயாகும். மக்கள் மனப்பான்மை யின் மாறுதல் இதுபோலவே ஒரு சமூக மாறுதலின் விளைவாக வருகின்றது. கலைமுனைவர் எதிர்பார்த்தபடி வருங்காலத்தில் வான்போக்கின் விளைவு எது என்பதையும் நாம் அறிதல் அரிதானாலும், அதற்குக் காரணமான மாறுதல் எது எனக் காண்டல் எளிதேயாகும்.

புது முன்னேற்றம் சமுதாயப் புத்தறிவின் பயன்

புத்தறிவு எப்போதும் முன்னேற்றத்துடன் இணைந்தது. அது உள்ளார்ந்த அக நிலை முன்னேற்றத்தின் புறச்சின்னமே யாகும். மனித இனத்தின் வளர்ச்சியில் முக்கியமான திரும்பு கட்டங்களிலெல்லாம், இன உணர்வில் திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. அவ் வளர்ச்சி அவனிடம் ஒரு திடீர்த் தேவையை உண்டுபண்ணுகிறது. தேவையின் இன்றியமையாமையால் ஏற்படும் நெருக்கடி புத்தறிவைத் தூண்டி விரைவுபடுத்துகிறது.

எடுத்துக்காட்டாகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறலாம். மனித இனம் மூட நம்பிக்கைகளின் கட்டுத்தளைகளை அறுத்தெறிந்து, தங்கு தடையற்ற விடுதலையுணர்ச்சியுடன் உலவத்துடித்த தறுவாயிலேயே அதற்குச் சிறந்த கருவியான அச்சுப்பொறி கண்டுபிடிக்கப்பட்டது. பண்டை இலக்கிய ஆட்சியின் பிடியிலிருந்து அறுத்துக்கொண்டு தற்கால ஆராய்ச்சி கடு விரைவுடன் முன்னேறிய காலத்தை ஒட்டியே நீராவி இயந்திரம் காணப்பட்டது. இதுபோலவே மனித உள்ளம் குறுகிய நோக்கங்களைக் சுற்றுச் செல்வதைவிட்டு, மனித இனத்தையே அளாவிய உயர்குறிக்கோளைத் தேடும் நேரத்தில்தான் வான்போக்குப் புத்தம்புதிய முறையாக, மக்கள் புத்தாராய்ச்சித் துறைக்கு எட்டியுள்ளது.

இன்று உலகில் பழைய சமயங்களின் பிடி தகர்ந்து வருகிறது. பழைய ஆட்சிமுறைகள் ஆட்டங்கொடுத்துவிட்டன. குறுகிய நாட்டுப் பற்று மறைந்து வருகிறது. தனிவாழ்வும் தனி நலமும் தடங்கெட்டு வருகின்றன. மனித இனத்தின் சிந்தனை என்றுமில்லா நீளமும் அகலமும் உயரமும் அவாவுகின்றது. விலங்காற்றலில் ஊன்றிநின்று மனித உணர்ச்சிகளை வளர்த்த மனிதன் விலங்காற்றலின் பிடியை அறுத்தெறிந்து வருகிறான். இதனால் மனித உணர்ச்சிகள் தெய்விக உணர்ச்சியின் திசை நோக்கி உந்தி எழுகின்றன. விலங்கு ஊழியின்படியும் மனித ஊழியின் தொடர்பும் விட்டுத் தெய்விக ஊழியின் ஈர்ப்பு மனித உலகில் செயலாற்றத் தொடங்கிவிட்டது. வான்போக்கு மனித இனத்தின் இந்த அகநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட புதுமை நெறியேயாகும்.

சமயங்கள் கற்பனை செய்து காட்டிய தெய்விக வாழ்வில் மனிதன் மன நிறைவுற்றுக் கட்டுண்டு கிடந்த காலம் உண்டு. கற்பனையைவிட்டுக் காரியத்திலிறங்கி அறிவு முன்னேற்ற மடைந்த காலம் அதனைத் தொடர்ந்தது. இப்போது அறிவு கற்பனையின் எல்லையை அணுகுகிறது. கனவுகண்ட மெய்ம்மையை அவனறியாமல் அவன் நனவாகக் காணும் வாய்ப்பை அணுகி வருகிறான். இப்புதிய வாழ்வின் கருத்து நிழல்கள் இப்போதே நம்மிடையே ஒளிவீசத் தொடங்கியுள்ளன. வானூர்தி மனித வாழ்வில் பொதுநடைமுறைச் செய்தியாகி வரும் நாட்களுக்குள் இப்புதிய வாழ்வு முறையும் உலகைப் புதிய ஆக்கிவிடுமென்று நாம் நம்பலாம்.

புதிய வாழ்வும் புதிய உலகும் எப்படி எப்படி இருக்கும் என்று நாம் விரிவாக ஆன்னறிந்து கூறமுடியாவிட்டாலும், அதன் கருத்து நிழல்கள் மூலம் அதனை ஒருவாறு நுனித்தறிந்து கூறலாம்.

தனிமனிதன் வாய்ப்பு நலங்கள் இன்று ஒரு குறுகிய வரையறைக்குள் இருப்பதுடன், தனிமனிதனுக்குத் தனிமனிதன் அதில் உயர்வுதாழ்வு வேறுபாடுகள் மிகுதியாக உள்ளன. வருங்கால உலகில் எல்லாருக்கும் முதலில் சரிசம வாய்ப்பு நலங்களும், கூடிய விரைவில் எல்லாருக்கும் எல்லையற்ற வாய்ப்பு நலங்களும் இருத்தல் வேண்டும். தனி மனிதருக்கிடையேயுள்ள இதே நிலை நாடுகளிடையும் இருப்பதால், நாட்டின் எல்லை முற்றிலும் இட எல்லையாகவே இருக்கும். வானூர்தி உலகையே ஒரு நாட்டினளவு குறுக்கிவிடக் கூடுமாதலால், இந்த இட எல்லைகூட மாகாண எல்லை, நகரெல்லை தெருவெல்லை யளவில் நெருக்கமடைந்துவிடும்.

நாட்டுக்கு நாடு தொடர்பு மிகுந்த வேறுபாடும் உயர்வு தாழ்வும் குறையவே, நேசப் போட்டி விளையாட்டுக்களேயன்றிப் பகைமைப் போட்டியோ, போரோ இருக்க இடமேற்பட மாட்டாது. தனிமனிதர் நலங்கள் எல்லையற்றனவா யிருக்கு மாதலாலும், உலகெங்கும் ஒரு நகரெனச் சிறுத்து விடுமாத லாலும், தொழில் தங்குதடையற்று வளரும் ஆனால் தொழிலில் கூட்டுறவும் வகைதிரிவும் இருக்குமேயன்றிப் போட்டி மறைந்துவிடும்.

நாடுமொழி வேறுபாடுகளைப்போலவே, செல்வர் ஏழை, முதலாளி தொழிலாளி ஆகிய வேறுபாடுகளுக்கு இடமேற் படாது. தொடர் ஊர்தி ஒரு நாட்டுக்குள் இருந்த வேறுபாடு களகற்றிப் பழைய நிலை முதலாளித்துவத்தையும் பண்ணை முறையையும் அழித்து நாட்டு ஒற்றுமைக்கு அடிகோலிற்று. அதுபோலவே வானூர்தி நாட்டுக்கு நாடு, வகுப்புக்கு வகுப்பு உள்ள வேறுபாடுகளை அகற்றி ஓருலகை உண்டுபண்ணுவது உறுதி. அமைதித்துறையில் இந்நிலை இன்னும் அணுகிவராட் டாலும், போர்த் துறையில் அணுகிவிட்டது காணலாம். பொருளியல் துறையிலும் உலகம் விரைந்து ஓருலகமாகி வருகிறது. சமூகத்துறையில் வானூர்தியின் பொதுமுறை வழக்கு இதே செயலைக் செய்யும் என்பதில் ஐயமில்லை.

வான்போக்கு இன்றும் தேர்வுமுறையாகவும், போர்முறை யாகவும் அரசியல் வாய்ப்பு நலத்துக்கான கருவியாகவுமே உள்ளது. ஆனால் அது விரைவில் பொருளியல் வாழ்வில் புகுந்த மக்கள் இடப்பெயர்வுக்கும், பயணத்துக்கும், வாணிகப் போக்குவரத்திற்கும் உதவும் அளவில் விரிவடைந்துவிடும். இந்நிலை நாடுகளிடையேயுள்ள தொடர்புகளில் பெரும் புரட்சி கொண்டுவராமலிராது. நாம் நேலே குறிப்பிட்ட மாறுபாடு களுக்கு அது ஒரு முதல் தொடக்கமாக அமையும்.

ஓருலக வாழ்வும் பொருளியலும் இன்றைய சமய வாழ்வு, கலை, இலக்கிய, மொழி வாழ்வுகள், அரசியல் வாழ்வுகள், அரசியல் வாழ்வு ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் மீட்டும் உருவாக்கும் என்றும் நாம் உறுதியாக நம்பலாம்.

புதிய வீர உணர்வு

வீரம் முற்றிலும் உடல் சார்ந்த ஒரு பண்பன்று. ஏனெனில் ஆற்றல் உடையவன் உள்ளத்தில் அச்சமுடையவனாய்க் கோழையாயிருக்கலாம். ஆற்றல் குறைந்தவன் கூடச் சாகத் துணிந்துவிட்டால் வீரமுடையவனாகலாம். ஆயினும் பொதுவாக ஓரளவு உடல் நலம் இல்லாதவனிடம் உள நலமோ வீரமோ தோற்றாது. ஓரளவு உடல் வலிமை இல்லாதவனிடம் வீரம் பிறர் உள்ளத்தில் பெருமித உணர்வைத் தோற்றுவிக்காது. மொத்தத்தில் வீர உணர்வு உளம் சார்ந்ததானாலும், அதன் செயலும் தோற்றமும் உடல் சார்ந்தனவே யாகும். உடல் உரத்துடன் இயைந்த உள வீரத்தையே நாம் வீரம் என்கிறோம். ஆயினும் அவ்வீரத்தின் செயல் உடல் தாக்குதலும் உடற் பாதுகாப்புமே யாதலால், அதை உடல்வீரம் என்பது தவறாகாது.

மனிதர் வீரம் என்றவுடன் பொதுவான உடல் வீரத்தைத்தான் கொள்கின்றனர். வீரத்துக்கு அவர்கள் கூறும் உவமை இதனைத் தெளிவு படுத்துகிறது. வீரனை நாம் “வீரசிங்கம்” என்றே கூறுகிறோம். சிங்கத்தின் உடல் வலுவும், தாக்குதல், தற்காப்புத் துணிவும் வீறும் பதிந்துள்ள அளவு எந்த மனிதர் வீரமும் வீர உணர்ச்சியுடையவர் உள்ளங்களில் பதியவில்லை என்பதை இது காட்டுகிறது. மனிதரிடையே வீரத்துக்கு உவமையாக யாரையாவது குறிப்பதானால் படைவீரனையே குறிப்பது வழக்கம் சிங்கத்தைப் போன்ற வீரன் என்பது போலப் படைவீரனை ஒத்த வீரமுடையவன் என்ற பேச்சும் எழுவதுண்டு.

சிங்கம், படைவீரர் ஆகிய இரு திறத்திலும் அஞ்சாமையே வீரத்தின் அடிப்படை ஆகும். எதிர்ப்பு உடல் வலிமையா லானாலும், உடலின் பாதுகாப்பு அதில் ஒரு பகுதியானாலும், அந்த உடல்பற்றி அஞ்சாது துணிந்து இடரில் குதிப்பதே இங்தே இவ்விடத்தில் வீரமாகப் போற்றப்படுகிறது.

சிங்கம், படைவீரர் வீரமல்லாத மற்றொரு வீரமும் உண்டு. அதையும் சிலசமயம் மக்கள் புகழ, பாராட்டக் காண்கிறோம். இது சிறப்பாக அக வீரம் அல்லது அறிவு வீரம் என்று கொள்ளத் தக்கது. உடல் வீரத்தில் மனிதன் உடல் பாதுகாப்புக்காகத் துணிச்சல் காட்டுகிறான். அறிவு வீரத்தில் ஒருவன் தன் கொள்கைக்கே துணிந்து போராடுகிறான். இந்த வீரத்தையும் மக்கள் வீரமாகக் கொள்வர். ஆனால் உடல் வீரத்திலிருந்து இதை வேறுபடுத்த இதை அறிவுவீரம் என்பர். இது உடல் வீரத்திலும் உயர்வுடையது. ஆனால் அருமையானது. உலகில் நூற்றுக்கு எண்பது பேர்களிடம் உடல் வீரத்தை எதிர்பார்க்கலாமானால், ஒரு பத்துப் பதினைந்து பேரிடம் இந்த அறிவுவீரத்தை எதிர்பார்க்க முடியும். அதுமட்டுமன்று, உயிரின வளர்ச்சியில் இந்த வீரத்தை நாம் விலங்குகள் எவற்றிலும் காணமுடியாது. மனித இனத்தில்கூட ஒன்றிரண்டு ஆயிர ஆண்டுகளுக்குள்ளாகத் தான். மனித இனம் இதன் பெருமையை அறிந்துள்ளது. இன்றும் இவ்வீரமுடையவர், அதை மதிப்பவர் குறைவே. மனித சமுதாயத்தில் இவ்வீரம் இன்னும் வளர வேண்டிய ஒன்றேயாகும்.

ஆனால் அருமையாயினும் அறிவு வீரம் உலகம் போதிய அளவில் அறிந்த ஒன்று. உலகம் இன்னும் அந்த அளவும் அறியாத இன்னும் ஒரு வீரம் உண்டு. அதுவே தெய்விக வீரம்! புதுமை வீரம் என்று நாம் குறிக்க விரும்புவது அதுவே. ஏனெனில் அது இன்றும் உலதில் அருமையிலும் அருமையாகவே உள்ளது. இதனை அறிந்து பாராட்டுபவர்களைக் காண்பது அரிது. மேற்கொள்பவர்கள் இன்னும் மிகமிக அரியர்.

உடல் வீரம், அறிவு வீரம், தெய்விக வீரம்

உடல்வீரம், அறிவுவீரம் இரண்டிலும் உள்ள எதிரிகள் புற எதிரிகள். அவற்றிடையே உள்ள வேற்றுமையெல்லாம், உடல் வீரம் குருதி சிந்துகிறது, உடலை அழிக்க நாடுகிறது என்பதும், அறிவு வீரம் கொள்கையை மட்டுமே அழிக்க விரும்புகிறது என்பதுமே. ஆனால், தெய்விக வீரம் எதிர்க்கும் எதிரி புறத்தேயில்லை. மற்ற இரண்டு வீரத்தையும் போலவே இதிலும் அஞ்சாமை உண்டு. ஆனால் அது ஒருவன் தன்னுள்ளே உள்ளீடான பகைகளான தீய பண்புகளை எதிர்த்து நிற்கும் அஞ்சாமையே யாகும். புற எதிரிகள் தீங்கு செய்யும்போது தெய்விக வீரம் புற எதிரிகளையே அவர்கள் பண்பிலிருந்து காக்கமுடியும். அவர்கள் மீது பரிவுகொண்டு அவர்கள் செய்யும் தீமையை எதிர்க்காமல் தாங்கி, அதனால் அவர்களுக்கு ஏற்படும தீப் பழிகூட அவர்களைக் சார்கிறதே என்று வருந்தும். மற்ற வீரர்களைப் போலத் தெய்விக வீரன் தன்னைப் பாதுகாக்க முயலாமல், தன் உயிர் கொடுத்தும் பிறரை எதிரிகளைக்கூட காக்க முயலுவான்.

பிறர் கண்டு பாராட்டுவதற்குரிய ஆரவாரம் உடல் வீரத்திலும் உண்டு; அறிவு வீரத்திலும் உண்டு. வாளுடன் வாளும் கேடயமும் மோதும் ஓசை, இடியோசை போன்ற துப்பாக்கி, பீரங்கி முழக்கம் ஆகியவை உடல்வீரத்தின் பெருமித நிலையை அறிவிப்பன. அறிவு வீரத்திலும் இதனில் குறையாத பெருஞ்சொல் முழக்கங்கள், வாத எதிர்வாத முறுக்கு, கைவீச்சு, முகவெட்டு, கைகால்களை இருக்கைகளிலும் மேடைகளிலும் அறைந்து காட்டல் ஆகிய பகட்டு முறைகள் உண்டு. ஆனால் தெய்விக வீரம் மோன நிலையில் தன்னுள்ளேதான் போராடுகிறது. அதை மோனமுறை என்றுகூடக் கூறலாம். சில சமயம் அது தற்காலிகமாகத் தோல்வி, இகழ், பகைமை ஆகியவற்றைத் தாங்கி அவற்றுக்கெதிராக ஒரு சிறுமூச்சுக் கூட எழுப்பாமல் அழிவுறும். ஆரவாரங்களின் தூண்டுதலும் உடனடிப் புகழின் தூண்டுதலும் இல்லாத நிலையில், இவ்வீரத்துக்குத் தேவைப்படும். அஞ்சாமை மற்ற இரு வீரங்களின் அஞ்சாமைகளைக் காட்டிலும் வியக்கத்தக்கதே யாகும்.

ஆரவாரமும் பெருமிதமுமுடைய மற்ற இரு வீரங்களும் தற்காலிகப் பயனுடையவை. உடல்வீரத்தில் பயன் காண் போருடன் நிற்கும். சில சமயம் அது கொள்கைக்காக மேற்கொள்ளப்பெறும் வீரமானால், அறிவு வீரத்தைப் போன்றே சற்று நீடித்த நிலவும். ஆனாலும் அவற்றின் கொள்கையால் வீரர் பெருமையடைந்ததன்றி, வீரமே நேரடியாகப் பெருமையடைவ தில்லை. ஆனால் தெய்விக வீரமோ அவ் வீரத்தக்குரியவர் மாண்டாலும், அவருக்குப் பின் பல்லாயிர ஆண்டுக்காலம் உலகை மாற்றியமைத்து, பலரைத் தன் வயப்படுத்த வல்லது.

உடல் வீரத்திலும் அறிவு வீரத்திலும் தாக்குதலும் பாதுகாப்பும் உண்டு. தெய்விக வீரத்தில் தாக்குதலும் இல்லை; மனித இனப் பாதுகாப்பன்றிப் பாதுகாப்புமில்லை. அதன் போராட்டத்தைப் போலவே போராட்டக் கருவிகளும் புதுமை வாய்ந்தவை. ஏனெனில் அதன் போர் முறையில் எதிரிகள் பண்புகளாதலால் அவற்றை எதிர்க்கும் உறுதியும், புற எதிரிகள் உள்ள இடத்தில் அவர்கள் மீது அன்புமே கருவிகள் ஆகும்.

தெய்விக வீரத்துக்கு உலகில் இன்றும் மிகுதியான சான்றுகள் கிடையா. பண்டை உலகிலேயே புத்தரும் இயேசுவும் இத் தெய்விக வீரத்தை அதன் பண்பறியாத அஞ்ஞான உலகுக்குக் காட்டிச் சென்றனர். மனித இயல்பு கடந்த இவ் வீரத்துக்குரிய அவர்களை அந் நாளைய மக்கள் தெய்வப் பிறவிகள் என்று கூறி வீரத்தின் தெய்விகத் தன்மைகள் மீது திரையிட்டனர். இன்று உலகம் அந் நிலையினின்று பொதுவாக மிகுதி மாறிடவில்லை. ஆயினும் அம் மாறுதல் தொலைவி லில்லை என்பதை டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகிய பெரியோர்கள் தெய்விக வீர வாழ்வுகள் காட்டுகின்றன. புத்தர். இயேசுபோல அவர்களும் காலங்கடந்தவர்களாயினும், அவர்கள் தம் காலத்தில் உயர்வுக்குச் சான்றாக நின்றும், அதனை உயர்த்தியும் சென்றனர் என்னலாம். மனித உலகின் தெய்விக ஊழி இன்னும் தொலைவிலில்லை என்று காட்டவந்த திருத்தூதர்களோ என்னும்படி அவர்கள் தம் வாழ்க்கையின் உயர்வுடன் உலக வரலாற்றைப் பெரிதும் இணைத்துச் சென்றுள்ளனர்.